Monday, October 14, 2013

வாய்ப்பு அமையாததால் தீமையைச் செய்யாமல் இருப்பதே நேர்மை ஆகிவிடாது

'நேர்மையான மனிதர்களிடம் இருந்து வரும் சொற் கள் ஒவ்வொன்றும் எதிராளிகளின் பொய்களையும், புறங்கூறல்களையும், அநீதிகளையும் அழித்துவிடும் வல்லமை கொண்டவை' என்பார் பாண்டிச்சேரி ஸ்ரீஅன்னை.

'வாய்ப்பு அமையாததால் ஒரு தீமையைச் செய்யாமல் இருப்பதே நேர்மை ஆகிவிடாது. மனிதர்கள், நேர்மையை கண நேரமும் வழுவாமல் கடைப்பிடிப்பது அவசியம். இத்தகைய விரதத்தை மேற்கொள்ள... நாம் எப்போதும் இறைவனின் திருமுன் இருக்கி றோம்' என்ற எண்ணம் அவசியம் என்பதும் அன்னையின் அறிவுரை. இதை உணர்த்த அழகான ஒரு கதையையும் மேற்கோள் காட்டுகிறார்...

கங்கைக்கரையில் இருந்த குகையில், ஓர் ஓநாய் வசித்து வந்தது. ஒரு நாள், இமயமலையின் பனி உருகி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. நீர்மட்டம் உயர்ந்து ஓநாயின் குகையைச் சுற்றிலும் சூழ்ந்துகொண்டது. ஆகவே, அன்று அதனால் உணவு தேட வெளியே செல்ல முடியாத நிலை.

உணவு ஏதும் கிடைக்காது என்று நிச்சயமானதும், ஓநாய் ஒரு தீர்மானத்துக்கு வந்தது. 'இன்று நான் விரதம் அனுஷ்டிக்கப் போகிறேன்; இன்று முழுக்க உபவாசம் இருக்கப் போகிறேன்' என்று சங்கல்பித்துக் கொண்டது. விரதத்தை முறையாகக் கடைப்பிடிப்பதற்காக முகத்தில் பயபக்தியை வலுக்கட்டாயமாக வரவழைத்துக்கொண்டு, அருகில் இருந்த பாறையில் ஏறி, தவக் கோலத்தில் உட்கார்ந்துகொண்டது.    

அரை மணி நேரம் கடந்திருக்கும். வெள்ளத்தில் இருந்து தப்பிக்க நினைத்த காட்டு ஆடு ஒன்று பாறைக்குப் பாறை தாவி, ஓநாய் இருக்கும் இடத்துக்கு வந்துவிட்டது. அதைக் கண்டதும், ஓநாயின் நாக்கில் எச்சில் ஊறியது. சட்டென்று ஆட்டின் மீது பாய்ந்தது. ஆனால், ஆடு நகர்ந்து தப்பித்து ஓட்டமெடுத்தது.

இப்போது, ஓநாய் மீண்டும் விரத வேஷத்தைப் போட்டுக் கொண்டது. அதுமட்டுமா?

''சேச்சே! விரத நாளில் ஆட்டு மாமிசம் சாப்பிடும் அளவுக்குக் கேவலமாகிப் போய்விட்டேனா என்ன? ஊஹூம்! இன்று விரதம் கடைப்பிடிக்க வேண்டிய நாள். மாமிசமே கூடாது!'' என்று சொல்லிக் கொண்டு மீண்டும் தவக்கோலத்தில் உட்கார்ந்துவிட்டது. இந்தத் தவக் கோலமும் அடுத்து ஏதேனும் உணவு கிடைக்கும் வரைதான்!

மனிதர்களிலும் இப்படியான அதிவிநோத நேர்மையாளர்கள் உண்டு. இவர்கள் தங்களின் காரிய ஸித்திக்காக சாது வேஷம் போடுவார்கள். தங்களது இழிவான குணங்கள் வெளியே தெரியக் கூடாது என்பதால், நல்லவர்கள் போன்று நடிப்பார்கள். அவர்கள் எவ்வளவுதான் தந்திரக்காரர்களாக இருந்தாலும், நேர்மையான ஒருவருக்கு எதிராக அதிக நாள் தாக்குப்பிடிக்க முடியாது.

நீங்கள் உண்மையான நேர்மைவாதிகளாக இருக்கவே முயற்சி செய்யுங்கள்; கடவுள் துணை செய்வார்.