Saturday, October 19, 2013

மனிதனுக்கும் நம்பிக்கை தரும் தள்ளல் (Push)


கழுகின் கூடு மரத்தின் உச்சியில்தான் இருக்கும். கழுகு தன் குஞ்சை சில நாட்கள் மட்டுமே பராமரிக்கும். ஒரு நாள் கழுகு தன் குஞ்சைக் கூட்டிலிருந்து சற்றே வெளியே தள்ளிவிடும். அந்தத் தள்ளும் விசைதான் கழுகுக்குஞ்சு 'அட, நமக்கு றெக்கை என்ற ஒன்று இருக்கின்றதே!' என்று உணரும் நிமிடம். அந்த நிமிடம்தான் அது பறக்கத் தெரிந்துகொள்ளும் நிமிடம். கழுகாய்ப் பிறந்ததன் அருமையை உணரும் நிமிடம் என்று சொல்லும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் டேவிட் மெக்நெல்லி, அதேபோல்தான் மனிதனுக்கும் நம்பிக்கை தரும் தள்ளல் (Push) ஒன்று தேவைப்படுகிறது. அது தரப்பட்டவுடன்தான் சிறப்பாகச் செயல்பட ஆரம்பிக்கிறான் என்கிறார் ஆசிரியர்.


வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்தால்தான் புரிந்துகொள்ள முடியும். ஆனால், பாருங்கள் வாழ்க்கையை நாம் முன்னோக்கிச் சென்றால்தான் வாழ முடியும் என்கிறார் ஆசிரியர். ஜிம்மியின் தாய் ஜிம்மியைக் காலையில் எழுப்புகிறார். 'டேய் ஜிம்மி, நேரமாச்சு ஸ்கூலுக்குப் போகணும் எந்திரி' என ஒன்றுக்கு மூன்று முறை எழுப்பிய பின்னரும் ஜிம்மி எழுந்தபாடில்லை. 'இப்ப எழுந்துகொள்ளப் போகிறாயா, இல்லையா?' என்று அதட்டுகிறாள். ஜிம்மியோ, 'அம்மா, ஸ்கூலில் 1,500 மாணவர்கள் இருக்கிறார்கள். அதில் ஒருத்தருக்கும் என்னைப் பிடிக்கவில்லை. அட, மாணவர்களுக்குத்தான் பிடிக்கவில்லை என்றால் ஒரு வாத்தியாருக்கும் என்னைப் பிடிக்கவில்லை. முந்தாநாள் மூன்று வாத்தியார்கள் என்னைத் திட்டிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். இத்தனைக்கு பிறகும் நான் ஏம்மா ஸ்கூலுக்கு போகணு முன்னுச் சொல்லு' என்றான். அம்மாவோ, 'யாருக்குப் பிடிக்கலேன்னாலும் நீ போயே ஆகணும். நீதான் அந்த ஸ்கூல் பிரின்சிபால்ங்கிறதை மறந்துடாதே!' என்று சொன்னதை ஹாஸ்யத்துடன் சொல்லும் ஆசிரியர், இந்த ஜிம்மியைப் போலத்தான் நாமும் தினமும் உலகம் என்னும் பள்ளிக்குள் செல்ல மறுக்கிறோம் என்கின்றார்.



முடிவில்லாத படிப்பினைகளைக் கொண்டது வாழ்க்கை என்பதை நாம் புரிந்துகொண்ட நிமிடம், நாம் வாழ்வதற்காக இந்த உலகத்துக்குள் வரவில்லை. ஒரு அட்வெஞ்சரைப்போல வந்துள்ளோம் என்று சுலபமாகப் புரிந்துகொள்கிறோம் என்கிறார் ஆசிரியர். இந்த அட்வெஞ்சரைப் போன்ற வாழ்க்கை யில் நாம் போகும் வழியில் நமக்கு வரும் சந்தோஷம் என்பது நம்முடைய ரிஸ்க் எடுக்கும் திறனுக்கும், சூழலுக்கு ஏற்றாற்போல் மாறும் தன்மைக்கும், நமக்கு அந்தச் சூழ்நிலையில் என்ன வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் குணத்துக்கும் ஏற்றாற்போலவே இருக்கும் என்கிறார் ஆசிரியர்.


நம் வாழ்க்கையில் பிரச்னைகளை சந்திக்கும் போதெல்லாம் பின்வரும் மூன்றில் ஏதாவது ஒரு ரெஸ்பான்ஸைத் தருகிறோம். பிரச்னையைக் காண மறுத்தல்; மண்ணுக்குள் தலையைப் புதைத்துக்கொண்டு, வந்துள்ள பிரச்னை அதுவாக ஒருநாள் தீர்ந்துவிடும் என்று நினைத்துக்கொள்ளுதல்; எப்படியாவது எதையாவது செய்து பிரச்னையைத் தீர்த்து பழைய நிலைக்கே போகப்பார்த்தல். இந்த மூன்றும்தான் நம்மிடம் இருக்கும் ரெடிமேட் பதில் என்கிறார் ஆசிரியர். நாம் நாமாகவே ஒரு இஞ்ச்கூட மாறாமல் இருந்துகொண்டு ஒரு நாளும் நம் மனது ஆசைப்படும் வெற்றிகரமான நபராக ஆகவே முடியாது. நம்மால் முடியாது என்ற நினைப்பை அறவே மனதில் இருந்து விட்டொழிக்க வேண்டும் என்று சொல்லும் ஆசிரியர், இதைச் செய்ய முதலில் நம்முடைய நிலைமைக் குறித்த சந்தேகங்களைத் தீர்ப்பதும் எதிர்பார்ப்புகளை உருவாக்கிக்கொள்வதும்தான் சிறந்த மருந்து என்கிறார்.


வெற்றி பெற்ற மனிதர்களைக் கூர்ந்து நோக்கினால், நாம் தெரிந்துகொள்ளும் விஷயம் ஒன்றுதான்.  அவர்கள் அவர்களுக்குப் பிடித்த விஷயங்களை அவர்களிடம் இருக்கும் அதீத திறமையை உபயோகித்து நடத்திச் செல்கிறார் கள் என்பதுதான் அது என்று சொல்லும் ஆசிரியர், வேலைக்கும் தொழிலுக்கும் இடையே இருக்கும் முக்கியமான வேறுபாடும் இதுவேதான் என்கிறார். முழுமையான ஓய்வுடனும், எந்தவித ஈடுபாடுமில்லாமலும், தொழில் ஏதுமில்லாமலும், பொழுதுபோக்கு நடவடிக்கை ஏதுமில்லாமலும் இருக்கிற மனுஷனை சகித்துக்கொள்வதைவிட மோசமான நரகம் ஏதும் இல்லை என்று சொல்லும் ஆசிரியர், சரியான எண்ணங்கள் இல்லாத இடத்தில் சரியான முயற்சி இருக்க வாய்ப்பேயில்லை என்று அடித்துச் சொல்கிறார்.


அதேசமயம், சரியான எண்ணங்கள் இருக்கும் இடத்தில் சரியான முயற்சி வந்துசேர்ந்தே தீரும் என்றும் அடித்துச் சொல்கிறார். பணம் எப்போதும் ஐடியாக்களை கொண்டுவருவதில்லை. ஐடியாக் களே பணத்தைக் கொண்டுவருகிறது. அதனால் உங்கள் சம்பாத்தியம் அதிகரிக்கவேண்டும் எனில், நல்ல ஐடியாக்களை நீங்கள் உற்பத்தி செய்தே ஆகவேண்டும் என்கிறார். இன்று வரை நான் ஒன்றும் உருப்படியாகச் செய்யவில்லையே என்று வருந்தாதீர்கள். உலகத்தில் உள்ள எல்லோருக்குமே மறக்கமுடியாத மற்றும் மாற்ற முடியாத கெட்ட விஷயங்கள் எப்போதும் நடப்பதேயில்லை.   உங்களுடைய கடந்த காலத்தை யாராலும் மாற்ற முடியாது. ஆனால், எதிர்காலத்தை நீங்கள் உங்களுடைய இன்றைய நடவடிக்கைகளால் நன்றாகவே மாற்றியமைக்க முடியும் என்கிறார். எனவே, இப்போதே கொஞ்சம் நேரம் ஒதுக்கி உங்கள் திறமை எது என்று கண்டுபிடித்து அந்தத் திறமைக்கு ஏற்றாற்போன்ற மற்றும் உங்களுக்குப் பிடித்தமான காரியங்களைச் செய்ய ஆரம்பியுங்கள் என்று சொல்லும் ஆசிரியர், நிஜ வாழ்க்கையில் நிறையபேர் அவர்களிடம் இல்லாததைப் பெரிய விஷயமாகவும், அவர் களிடம் இருப்பதை அற்ப விஷயமாகவும் நினைப்பதால்தான் வெற்றிப்படிகளில் ஏற மிகவும் திணற வேண்டியுள்ளது என்கிறார்.


உங்கள் திறமை, உங்கள் தனித்துவம், உங்கள் நம்பிக்கை என்ற அனைத்தின் கலவைதான் உங்களுடைய எதிர்கால வெற்றி. கடலில் செல்ல உதவும் படகைப் பாருங்கள். படகு செய்யப்படும் பலகைகள் தனியாகக் கடலில் போட்டால் மூழ்கிவிடும். படகின் இன்ஜினைத் தனியாகக் கழற்றி கடலில் போட்டால் மூழ்கிவிடும். ஆனால், இன்ஜின் பொருத்தப்பட்டு உங்களால் சரியான முறையில் செலுத்தப்படும் படகு கடலில் சீராக மிதந்து சென்று பல விஷயங்களைச் செய்ய உதவுகிறது. அதேபோல்தான் நம்பிக்கை, திறமை மற்றும் தனித்துவம். இந்த மூன்றையும் சேர்த்து சரியாக வாழ்க்கையைச் செலுத்தினால் வெற்றி உறுதி என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் ஆசிரியர். கனவுகளை நனவாக்குவது பாசிட்டிவ்வான மற்றும் எல்லைகளை நோக்கிய விஷயங்களைச் செய்வது மட்டுமே என்று சொல்லும் ஆசிரியர், காலை யில் எழுந்து இரவில் தூங்கச் செல்லும் மனிதர்கள் அனைவருமே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இடைப்பட்ட நேரத்தில் அவர் களுக்கு மிகவும் பிடித்த விஷயத்தை ஈடுபாட்டுடன் செய்வதால் மட்டுமே உருவாகும் என்கிறார்.


குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காக்களில் ஊஞ்சலாடும் குழந்தைகளைப் பாருங்கள். முதலில் குழந்தைகளின் பெற்றோர்கள்


ஊஞ்சலை கொஞ்சம் புஷ் பண்ணுவார்கள். அதற்கப்புறம் குழந்தைகள் தானாகவே புஷ் செய்துகொள்ளும். அதேபோலத்தான் இந்தப் புத்தகமும் உங்கள் வாழ்க்கை ஊஞ்சலை ஆட்டத் தேவையான புஷ்ஷை நிச்சயமாய்த் தர வல்லதாய் இருக்கின்றது. நிச்சயம் படிக்கலாம்!.


Download this book in mp4 format: