Monday, March 31, 2014

ஒரு விவாதம் உருப்படியா இருக்கணும்னா அதற்கு 'ஓபன் மைண்ட்’ தேவை

ன்று அந்த ஹோட்டலில் அதிசயத்திலும் அதிசயமாக கூட்டம் குறைவாக இருந்தது.

''டிபன் ஏதாவது வேணுமா? அல்லது காபி போதுமா?'' என்று நண்பனைக் கேட்டேன்.

அவன் மௌனமாக இருந்தான். அவன் எதையோ யோசிப்பதும், எரிச்சலில் இருப்பதும் அவன் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

''என்ன சாப்பிடறே... பூரியா, சப்பாத்தியா?''

''சப்பாத்தி'' என்று முணுமுணுத்தான்.

''எனக்கென்னவோ பூரியே சொல்லலாம்னு தோணுது.   ​பூரி சூடா இருக்கும்; சப்பாத்தியை ஏற்கெனவே செஞ்சு வெச்சுடறாங்க. ஆர்டர் வரும்போது அதை மைக்ரோஅவனில் வெச்சுத் தர்றாங்க. தவிர, இங்கே குருமாவும் ரொம்ப சுமாராத்தான் இருக்கும்...'' என்று நான் சொல்லிக் கொண்டிருக்க, சட்டென்று குறுக்கிட்டு...

''சரி... சரி! நீதான் விவாதத்துல ஜெயிச்சே!உன் இஷ்டப்படியே ஆர்டர் செய்!'' என்றான்.

எனக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. 'நான் ஆலோசனைதானே சொன்னேன்! இதில், விவாதமும் வெற்றியும் எங்கே வந்தது?' என்று குழம்பினேன்.

பிறகு சர்வரை அழைத்து, ''ஒரு பிளேட் பூரி, ஒரு பிளேட் சப்பாத்தி'' என்று கூறி அனுப்பிவிட்டு, நண்பனிடம் திரும்பி, ''என்ன ஆச்சு உனக்கு?'' என்றேன்.

உடனடியாக பதிலேதும் சொல்லாமல் மௌனித்து இருந்தவன், சில நிமிடங்கள் கழித்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, தன் கோபத்தின் பின்னணியை விளக்கினான்.  

''என் அலுவலகத்திலே எங்க பிரிவிலேயே என்னை மாதிரி இன்னொரு ஆபீசரும் இருக்கான். எதுக்கெடுத்தாலும் விவாதம். ஒவ்வொரு விவாதமும் முழுசா பத்து நிமிஷமாவது நடக்கும். ரொம்ப மேதாவின்னு நினைப்பு. புதுசு புதுசா எதையாவது சொல்லிக்கிட்டிருப்பான்...''

நான் குறுக்கிட்டு, ''ஒவ்வொரு முறையும் விவாதத்துலே அவன்தான் ஜெயிக்கிறானோ?'' என்று கேட்டேன்.

முகம் சிறுத்துப் போய்  தலைகுனிந்து அமர்ந்திருந்த நண்பன் இந்தக் கேள் விக்குப் பதில் அளிக்கவில்லை.  

''ஆக, உன் பிரச்னை அவன் விவாதம் செய்வது அல்ல. அந்த விவாதங்களில் நீ தோற்றுவிடுவதுதான். சரியா?''

''தொடர்ந்து விவாதத்திலே தோத்துக்கிட்டிருந்தா நீ மட்டும் எரிச்சல்படமாட்டியா?'' என்று கேட்டான்.

''நண்பா, விவாதத்தில் உண்டாகக்கூடிய பிரச்னை இதுதான். அவரவரும் தன் தரப்பை நியாயப்படுத்தத்தான் முயற்சிப்பார்கள். எதிர்த்தரப்பை பலவீனமாக்க வேண்டும் என்று பார்ப்பார்கள். தங்கள் தரப்பில் உள்ள தவறு தெரியாது!''

இதற்குள் சிற்றுண்டிகள் வந்து விட, சாப்பிடத் தொடங்கினோம். ''குருமா அவ்வளவு நல்லால்லே!'' என்றவன் சட்டென்று வெட்கப் பட்டவனாக, ''நீ முதல்லயே சொன்னேல்ல?'' என்றான்.

''அதை விடு! பூரியை நாம ஷேர் செய்துக்கலாம். ஆனால், அதைவிட முக்கியமாக, ஒரு புராண சம்பவத்தை உன்னிடம் ஷேர் செய்துக்கணும்'' என்றேன்.  

*****

ஸ்ரீமத்வர் த்வைத சித்தாந்தத்தை நாடு முழுவதும் பரப்பியவர். அவர் பத்ரிகாஸ்ரமத்துக்குச் சென்று விட்டுத் திரும்பும்போது கோதாவரி நதிக்கரை வழியாக வந்துகொண்டிருந்தார். அவருக்கு அழைப்பு விடுத்தார் ஸோபான பட்டர். ராஜமகேந்திரம் என்ற பகுதியை ஆண்ட மன்னனின் அரண்மனையை அலங்கரித்த பேரறிஞர் அவர். வாதிடுவதில் சூரர். கலைமகள் அவர் நாவில் குடிகொண்டிருந்தாள். அவரது வாதத்துக்கு எதிராக, எதிராளியால் ஒரு கட்டத்தில் எதுவுமே பேச முடியாமல் போய்விடும்.

அந்த நாட்டு மன்னனுக்கு, ஸோபான பட்டரின் புலமைமீது தனி மதிப்பும், தனது நாட்டைச் சேர்ந்த அறிஞர் இவர் என்பதில் ஒருவித கர்வமும் உண்டு. அதனால் அவன் தவறாமல் ஒரு செயலை செய்யத் தொடங்கினான். அதாவது, பிற நாட்டு அறிஞர்கள் யார் வந்தாலும், ஸோபான பட்டரை அவருடன் வாதிடச் செய்வான். ஒவ்வொரு முறையும் ஸோபான பட்டர்தான் வாதத்தில் ஜெயிப்பார். தோற்கும் அறிஞர் தனது நாட்டுக்குச் சென்றவுடன், ராஜமகேந்திர நாட்டு அறிஞரைப் பற்றி உயர்த்திக் கூறுவார்.

இவ்வளவு பெருமைகள் வாய்ந்த ​ஸோபான பட்டர்தான் மத்வருக்கு அழைப்பு விடுத்தார். விருந்து உண்ணத் தான் அந்த அழைப்பு என்றாலும், இதுபற்றிக் கேட்ட மன்னன், உடனே தனது வழக்கப்படி விவாதத்துக்கு ஏற்பாடு செய்தான்.

''மன்னா, இதுவரை நான் வாதிட்ட அறிஞர்களைவிட மத்வரிடம் அதிக ஞான ஒளியைப் பார்க்கிறேன். அவரை வெல்வது கடினம் என்று தோன்றுகிறது'' என்றார் ஸோபான பட்டர். ''அதனால் என்ன... வேதம் பயின்ற இன்னும் சில அறிஞர்களையும் உங்களுக்கு ஆதரவாக வாதிட அனுப்புகிறேன்'' என்று கூறி, அப்படியே ஏற்பாடு செய்தான் மன்னன்.  

வாதம் தொடங்கியது. எதிர்பார்த்தபடி மத்வரே வென்றார். ஸோபான பட்டர் வருத்தப்படுவதற்கு மாறாக, மகிழ்ச்சி அடைந்தார். எதிரி வெல்லும்போது மகிழ்ச்சியா என்று கேட்டால், ஸோபான பட்டரைப் பொறுத்தவரை, அவருக்கு அது அளவில்லாத ஆனந்தம் தந்த அனுபவமாகத்தான் அமைந்தது. அவர் கேட்ட எந்த கேள்விக்கும் தகுந்த பதிலோடு போதிய விளக்கத்தையும் மத்வர் அளித்திட, ஸோபான பட்டரால் பல புதிய விஷயங்களை அறிந்துகொள்ள முடிந்தது.

வாதம் முடிந்ததும், மத்வரைப் பணிந்து வணங்கிய ஸோபான பட்டர்,''என்னை உங்கள் சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள், ஸ்வாமி!'' என்று வேண்டினார். ஸோபான பட்டரின் அறிவாற்றலையும் பணிவையும் கண்ட மத்வர், அவரைத் தன் சீடராக ஏற்றார். அங்கு சில காலம் தங்கி, அவருக்கு பிரம்ம சூத்திரத்தின் பொருளை விளக்கினார். பின்னர், சந்நியாசிகள் ஒரே இடத்தில் தங்கக்கூடாது என்ற இலக்கணத்துக்கு ஏற்ப, அங்கிருந்து கிளம்பினார் மத்வர்.

ஸோபான பட்டரால் மத்வரைப் பிரிந்து அதிக காலம் இருக்க முடியவில்லை. நேரே உடுப்பிக்குச் சென்றார். தான் அங்கேயே தங்க ஆசைப்படுவதாகச் சொன்னார். மத்வரும் ஏற்றுக்கொள்ள, தன் எஞ்சிய வாழ்நாளை உடுப்பியில் கழித்தார் ஸோபான பட்டர்.

*****

''விவாதம் என்பது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால், சம்பந்தப்பட்ட இரு வருக்கும் கொஞ்சம் மனப்பக்குவம் வேண்டும்.

வாதம் செய்யும்போது நம்முடைய பேச்சுத் திறமையும், தகவல் பரிமாற்றத் திறமையும் சிறப்பாகும். நம் தரப்பை எதிராளியிடம் கொண்டு சேர்க்க இது அவசியம்.

ஆனால், நாம் அந்த விவாதப் பொருளின் ஒரு பக்கத்தை மட்டுமே அறிந்திருப்போம். விவாதத்தின் போது இன்னொரு பக்கத்தையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. அது மட்டுமல்ல... எதிராளி விவாதிப்பதைக் கொண்டு அவரது தரத்தையும் தெரிந்து கொள்ள முடியும்.

ஆக, ஒரு விவாதம் உருப்படியா இருக்கணும்னா அதற்கு 'ஓபன் மைண்ட்' தேவை!'' என்றேன்.

''மனசிலே இருப்பதை மறைக் காம பேசணும்கறியா?'' என்றான்.

''ஓபன் மைண்ட் என்பதற்கு இது அர்த்தமில்லை. எதிராளியின் கருத்து சரின்னு பட்டா, அதைத் திறந்த மனத்தோடு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேணும். அதைத்தான் ஓபன் மைண்டோடு இருப்பதுன்னு சொல்வாங்க. நீ வேறொரு ஆபீசரிடம் அடிக்கடி விவாதம் செய்வதா சொல்றியே... அவர் சொல்லும் கருத்துக்களை உன்னால் திறந்த மனத்தோடு பரிசீலிக்க முடிகிறதா? உண்மையைச் சொல்!'' என்று கேட்டேன்.

சில நிமிடங்கள் அமைதியாகக் கழிந்தன.  பிறகு, ''புரியுது. அவர் சொன்னதிலேயும் சில நல்ல கருத்துக்கள் இருக்கு'' என்றான்.

இனி, அவன் எதிர்கொள்ளும் விவாதங்கள் அவனுக்கு எரிச்சல் மூட்டாமல் இருப்பதோடு, சுவாரஸ்யமானதாகவும் விளங்கும் என்பது நிச்சயம்.