Monday, March 31, 2014

திருமாங்கல்ய தங்கத்தை வேறு ஆபரணங்களுக்கு பயன்படுத்தலாமா? - சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

திருமணத்தில் திருமாங்கல்யதாரணம் உண்டு. அறுபதாம் கல்யாணத்திலும், சதாபிஷேகத்திலும் தாலி கட்டுவது உண்டு. வாழ்வாங்கு வாழ்ந்து, அவள் சுமங்கலியாக இயற்கை எய்திய பிறகு, அந்தத் தாலியை என்ன செய்வது என்ற கேள்வி சிலரிடம் எழும். அதை உருக்கி வேறு அணிகலனாக மாற்றி, மற்றவர்கள் அணியலாமா?

ஒருத்தி அணிந்திருந்த தாலியை உருக்கி வேறொரு வடிவில் மாற்றி அணிந்தாலும், பலருக்கு அது மன நெருடலை ஏற்படுத்துமல்லவா? உயிர் பிரியும்வரை கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த தாலியை உருக்குலைக்கலாமா?

ஒருத்தி அணிந்திருந்த தாலி உருமாறிவிட்டாலும்கூட, அவள் கணவன் அவளுக்குக் கட்டிய அந்தத் தாலியை வேறொருத்தி எப்படி அணிவது? அதற்கு அவளின் மனம் ஒப்புமா? ஒருவர் பயன்படுத்திய ஆடைகளை ஏற்பதிலேயே தயக்கம் உண்டு அல்லவா? தங்களின் விளக்கம் தேவை!


ரு தாலி கட்டிய பிறகு, இரண்டாம் தாலி, மூன்றாம் தாலி கட்டிக் கொள்வதில் சுணக்கம் இல்லை. கெட்டிமேளத்துடன் திருமணத்தில் முதல்முறையாகக் கட்டப்பட்ட தாலியானது, 60 வருடங்களுக்குப் பிறகு செயலிழந்துவிட்டதா? அதேபோன்று, சதாபிஷேகத்திலும் புதிதாக ஒரு தாலி கட்டுகிறோமே... எனில், 60-ல் கட்டிய தாலி செயலிழந்துவிட்டதா?

விவாகரத்தைச் சந்திக்கும் பெண்மை, முதல் தாலியை எளிதில் கழற்றி எறிந்துவிட்டு, புதுக் கணவனிடம் இருந்து புதுத் தாலியை ஏற்கும். நாடகம், பெரிய திரை, சின்னத் திரையில் நடிக்கும் பெண் கதாபாத்திரங்கள், கணவன் கட்டிய தாலியைக் கழற்றி வைப்பது உண்டு. திருமணக் காட்சியில் கதாநாயகன் தாலி அணிவிப்பான்; கல்யாணமாகிவிட்ட அந்தக் கதாநாயகியின் கழுத்தில் அவளது தாலி இருக்காது. எல்லாம் நடிப்புக்காக. அதேபோல், குளியலறை

யில் தாலியை மறந்துவிட்டுப் போவதுபோன்ற காட்சிகள் சின்னத் திரை தொடர்களில் உண்டு. புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக, கட்டிய தாலியைக் கழற்றிக் கணவனிடம் அளிக்கும் அவலத்தையும் நாம் கண்டுகளித்திருக்கிறோமே!

?அதற்காக நாமும் திருமாங்கல்யத்தை சாதாரண ஆபரணமாகக் கையாள்வதா?

அப்படிக் கருதவேண்டியது இல்லை!

தாலி பெண்மைக்கு வேலி என்று போற்றுவதும் உண்டு; அதுவே பெண்மையை அடிமையாக்கும் கருவி என்று தூற்றுவதும் உண்டு.  தாலி என்பது பெண்மையை ஆண்மை அடக்கியாள்வதற்கான சின்னமாகச் சித்திரிக்கும், புரட்சி எண்ணம் கொண்ட பெண்மையும் உண்டு. பெண்மையின் பாதுகாப்புக்காக ஏங்கும் சீர்திருத்தவாதிகள் பலரும் சொற்பொழிவில் அனல்பறக்க சமுதாயத்தைச் சாடுவது உண்டு. 'ஆண் கழுத்தில் பெண் தாலி கட்டட்டுமே? செல்லப் பிராணிகளுக்குத்தான் கழுத்தில் சங்கிலி கட்டுவார்கள். அதுபோல், பெருமைக்கு உரிய பெண்மையை இழுக்காகப் பார்க்கவைக்கிறது  தாலி. அடிமைக் கயிறாக விளங்குகிறது அது' என்பது போன்ற தமது வாதங்களை அவர்கள் எடுத்துரைப்பார்கள்.

கணவனை தெய்வமாக மதிக்கும் எண்ணம் ஒரு காலத்தில் இருந்தது. மணாளனே மங்கையின் பாக்கியம், கணவனே கண்கண்ட தெய்வம், கற்புக்கரசி, பானை பிடித்தவள் பாக்கியசாலி போன்ற பெரிய திரைக்கதை தலைப்புகள் எல்லாம் கணவனை மதிக்கும் பெண்கள் இருந்ததற்கு அத்தாட்சி! தாலி பாக்கியம் கணவனை சிரஞ்சீவியாக்கும் என்ற நம்பிக்கை ஆழமாக இருந்தது.

? தாங்கள் சொல்வது போன்று வேறுபட்ட கருத்துகளும் நம்பிக்கைகளும் தாலி விஷயத்தில் மட்டுமல்ல, எல்லா விஷயங்களிலும்தான் உண்டே?

உண்டுதான். ஆனாலும், திருமாங்கல்யம் மிக உன்னதமானது என்பதால், அதுகுறித்த கருத்துப் பரிமாற்றங்களும் முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன.

கணவன் நீண்ட நாள் வாழ்ந்து பெண்மைக்குப் பெருமை சேர்க்கவைக்கும் தகுதி தாலிக்கு உண்டு. இக்கட்டான சூழலில் தாலி பாக்கியம் கணவனைக் காப்பாற்றிற்று என்று ஜோதிடம் சொல்லும். தெரிந்தோ தெரியாமலோ ஒரு ஆண், பெண்ணின் கழுத்தில் தாலியை அணிவித்தால், அந்த நொடியில் இருந்து இருவரும் கணவன்- மனைவியாக மாறி, தாலிக்குப் பெருமை சேர்த்த காலமும் இருந்தது. கழுத்தில் தாலியைப் பார்த்தால் கயவர்களும் அவளைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்காமல், விலகுவார்கள். தாலியை ஒரு பெண்ணின் கழுத்தில் பார்த்தால் எந்தவொரு ஆணும் அவளைத் தாயாக நினைப்பான்; தாசியாக எண்ணமாட்டான். அவள் மீது பக்தியும் பணிவும் வரும். கழுத்துச் சங்கிலியைத் திருடும் திருடன்கூட, தாலியைத் திருடுவதற்குத் தயங்குவான். ஆக, அவனது கண்ணுக்கும் தாலி உயர்ந்ததாகப் படும். ஆக, பண்பைப் புகட்டும் சின்னமாக இருந்தது அது.

தாலியைக் கோத்த நூல் நைந்து போனால், புது நூலில் அதை இணைத்து கட்டிக்கொள்வ துண்டு. மூட நம்பிக்கை என்று வாய் கிழியப் பேசும் சீர்திருத்தவாதிகளும், தங்கள் கையால் தாலியைக் கொடுத்துக் கட்டவைப்பதை, முழுத் திருமணமக ஏற்று மகிழ்ந்தவர்களும் உண்டு.

துரதிர்ஷ்டவசமாக முதல் மனைவியை இழந்த ஒருவன், 2-ம் தாரத்துக்கு முதல் மனைவியின் தாலியை அணிவிப்பதும் உண்டு. அவன் தங்கத்தைத் தாலியாகப் பார்த்தான். பொங்கி வழியும் பொருளாதாரத்தில் திளைத்த இன்றைய புது சிந்தனையாளர்களோ, தாலியைத் தங்கமாகப் பார்க்கிறார்கள். அதனால்தான் புது மனைவிக்கு புதுத் தங்கத்தை அணிவிக்கிறார்கள்.

? அது சரி! தாலிக்கு ஏன் தங்கத்தைப் பயன்படுத்த வேண்டும்? அதனால்தானே, அதை மீண்டும் எப்படி பயன்படுத்துவது என்ற கேள்வியும் தயக்கமும் ஏற்படுகிறது?

தங்கம் என்பது மங்கலப் பொருள். அது, தாலி வடிவில் பெண்மைக்கு அணிகலனாக மட்டுமில்லாமல், விவரிக்க இயலாத உயர்வை அளிக்கிறது. தங்கம் தூய்மையானது; மருத்துவ குணம் உடையது; அழகை இரட்டிப்பாக்குகிறது; என்றும் வாடாத, மங்காத பொருள் அது. பெண்மை வாடாமலும் வதங்காமலும் மங்காமலும் இருக்கவேண்டும் என்ற வாழ்த்தின் பிரதிபலிப்பு அது. எதை வைத்தும் குறையைச் சொல்ல இயலாது. எதன் சேர்க்கையிலும் அது தனது தரத்தை இழக்காது. எதன் தொடர்பும் அதில் ஒட்டாது.

இறந்த பிறகு தாலியின் தொடர்பு அற்று விடும். இல்லாத தொடர்பை  நம் மனம் ஒட்ட வைத்து, அதன் காரணமாக அதை மாற்றுவதிலோ அணிவதிலோ சுணக்கம் காட்டுவது அறியாமை. சிறு வயதில் கட்டிய தாலி 60-வது வயதில் தூசுபடிந்து மங்கினாலும், நெருப்பில் போட்டவுடன் தூசி அகன்று, சிறு வயதில் கட்டிய தோற்றத்தோடு மிளிரும். தாலியில் மாசு ஒட்டாது. மாசு படிந்ததாகப் பார்ப்பது நம் மனத்தின் குறைபாடே!

? எனில், தாலியாக பயன்படுத்தப்பட்ட ஆபரணத்தை வேறொரு ஆபரணமாக மாற்றி அணியலாம் என்கிறீர்களா?

கணவனை இழந்த பெண்மணி முதுமையை எட்டிய பிறகு, தனது தாலியை பேரன், பேத்திகளுக்கு அலங்காரமாக மாற்றி அணிவித்து மகிழ்வது உண்டு. தங்கம் விருப்பத்துக்கு இணங்க  மாறும் இயல்பை உடையதாக இருப்பதால், அதை நெருப்பின் உதவியுடன் வேறொரு அணிகலனாக மாற்றி, மற்றவர்களுக்கு அணிவிப்பது சிறப்பு. ஆக, இல்லாத தொடர்பை வலுக்கட்டாயமாக இருப்பதாகச் சித்தரித்து, இறந்தவரின் தொடர்பை தங்கத்தோடு சேர்த்துப் பார்த்து ஏற்க மறுப்பதுதான் மூடநம்பிக்கை. ஆகையால், தாலியாகத் தோற்றம் அளிக்கும் தங்கத்தை வேறு அணிகலனாக மாற்றுவது தகும்.

தங்களது வாதம் அரங்கேறாது. இல்லாத சிறப்பைப் பொருளில் ஏற்றுவது பொருந்தாது.

விவாகரத்தைச் சந்தித்த பெண்ணொருத்தி புதிய கணவனைத் தேர்ந்தெடுக்கிறாள். (தர்ம சாஸ்திரம் ஏற்காதபோதிலும் நடைமுறையில் நிறைய தென்படுகிறது) தற்போது, அவர்கள் இருவரும் புதியவர்கள். எனவே, திருமாங்கல்யமும் புதிதாக இருப்பது சிறப்பு. பழைய கணவன் கட்டிய தாலியைப் புதுக் கணவன் கட்டுவது, பழைய கணவனை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும். அதுவும் தவிர, புதிய கணவன் புதிய தாலியை அணித்து அவளை மனைவியாக்குவதே சிறப்பு. பழையதைத் துறந்து புதியதை ஏற்பதால், மனம் புதுத் தாம்பத்தியத்தில் இறுக்கமாக இணையும். எதிலும் பழையதைக் களைந்து புதியதை ஏற்பதே மனத்தின் இயல்பு. இறந்த மனைவியுடன் தாலியின் இணைப்பு ஒருநாளும் மறையாது. தாய்- தந்தை மறைந்த பிறகும் அவர்களது தொடர்பு பிள்ளைகள் மனத்தில் பசுமையாக இருந்துகொண்டிருக்கும். பழையன கழித்து புதியன ஏற்பதை ஒரு கொண்டாட்டமாக நடைமுறைப்படுத்துவது உண்டு. அதன் வெளிப்பாடு போகிப் பண்டிகை.

அண்ணல் காந்தி பயன்படுத்திய அத்தனைப் பொருட்களையும் அருங்காட்சியகத்தில் வைத்து, அவர் நினைவாக உருக்குலையாமல் காப்பாற்றி வருகிறோம். பூஜைக்குப் பயன்படுத்திய பிள்ளையார் திருவுருவத்தை யாரும் பயன் படுத்தாமல் இருக்க நீரில் கரைப்பது உண்டு. திருமாங்கல்யத்தை உருமாற்றி மற்றவர்கள் அணிகலனாக அணியும்போது, அதன் மூலம் இறந்தவர் குறித்த ஞாபகம் மறையாமல் இருக்கும். அது மன நெருடலுக்குக் காரணமாகி முழு மகிழ்ச்சியை எட்டவிடாமல் செய்துவிடும்.

? சரிதான்! அதற்காக, பழையனவற்றை அப்படியே பொக்கிஷமாகப் பாதுகாத்துக் கொண்டிருந்தால், அதன் பயன்பாடு அற்றுப் போகுமே?

தாலியை வேறொன்றாகப் பயன்படுத்தும்போது பழைய ஞாபகங்கள் புதிய வாழ்க்கையில் குறுக்கிடும் என்று சொல்ல வருகிறோம். பழைய மனைவியின் உருவம் சித்திர வடிவில் சுவரில் தொங்கிக்கொண்டிருந்தால், அது புதுத் தம்பதிக்கு இடையூறாக இருக்காதா? மனநெருடலை உண்டாக்கும் அல்லவா? எனவே, திருமாங்கல்யத்தை அழித்து அணிகலனாக மாற்றுவது சிறப்பு அல்ல. அது, அக்னி சாட்சியாக உயர்ந்த சிந்தனையில் கட்டப்பட்ட தாலியின் கௌரவத்தைச் சிதைப்பதாகும். புதுப் பூணூல், புதுத் தாலிக் கயிறு ஆகிய வற்றை ஏற்கும்போது, பழைய பூணூல், தாலிக்கயிற்றை நீரில் சேர்ப்பது உண்டு. அந்தப் பூணூலையும் தாலிக்கயிற்றையும் மற்றவர்கள் பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டு, அதன் சிறப்பு சிதையக்கூடாது என்று எண்ணுவோம்.

கோயிலில் இருக்கும் இறையுருவம் பின்னமானால், அதைத் துறந்து புது இறையுருவத்தை ஏற்போம். ஆனால், பின்னமான இறையுருவத்தைச் சிதைப்பதில்லை; வேறொரு பொருளாகவும் மாற்றிப் பயன்படுத்துவதில்லை. அதன் கௌரவம் சிதையாமல் இருக்க அதைப் பாதுகாப்பது உண்டு. இறையுருவத்தை இறைவனாகப் பார்ப்போம்; சிலையாகப் பார்ப்பதில்லை. தங்கத்தைத் தாலியாகப் பார்ப்போம். அதன் கௌரவத்தைச் சிதைப்பதில் மனம் விரும்பாது. மனம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையோடு செயல்படுவோம். பின்னமான இறையுருவச் சிலையை வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தும் எண்ணம் மனத்தில் தோன்றினால், இறையுருவத்தில் பக்தி கழன்றுவிடும். ஆகையால், அதை கர்ப்பகிருஹத்தில் வைத்துக் காப்பாற்றுவதும் உண்டு. பூத உடலை எரிக்கிறோம். ஏனெனில், அதை மற்ற உயிரினங்கள் உணவாகப் பயன்படுத்தக் கூடாது என்கிற நோக்கில் எழுந்தது அது.

ஐம்பெரும் பூதங்களில் தங்கம் 'தேஜஸ்' பூதத்தில் அடங்கும் (சுவர்ணம் தைஜஸம்). 'தப்பான எண்ணத்துடன் பிறரது மனைவியை அணுகினால், நெருப்பு உன்னைப் பொசுக்கிவிடும்' என்ற சாபம் ராவணனுக்கு இருந்ததாகத் தகவல் உண்டு. தாலி வடிவில் கழுத்தில் தொங்கும் 'தேஜஸ்' அதாவது நெருப்பு அவனை அழித்து, அவளுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது என்று பொருள்.

புதுப்புது வடிவங்களில் அணிகலன்கள் அங்காடிகளில் வளைய வரும் இன்னாளிலும், தாலியின் தனி வடிவம், அன்றும் இன்றும் என்றும் மாறாமல் இருப்பது, அதன் தனித்தன்மைக்குச் சான்று. நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து தங்கம் தாலி வடிவத்தில் மாறும். நல்ல முகூர்த்தத்தில் வேத மந்திர ஒலியோடு இணைந்து பெண்ணின் கழுத்தில் ஏறும். மூச்சுக்காற்று இருக்கும் வரை, அது இடம் மாறாது. அறத்தின் மறு உருவமாக மாறிய தாலியை அணிகலனாகப் பார்ப்பதும், அதை உருமாற்றி அதன் தரத்தைத் தாழ்த்துவதும் நல்ல நடைமுறை ஆகாது. அது மன நெருடலை ஏற்படுத்தி, மன அமைதியையும் குலைக்கும். எனவே, அதைச் சிதைக்காமல் பாதுகாப்பதே சிறப்பு.

தங்கள் சிந்தனை பாமரத்தனமானது பெருமையை அளவு கடந்து மிகைப்படுத்தி விளக்கும் செயல்பாடு சிந்தனையாளர்களை ஈர்க்காது. உண்மையும் ஆகாது.

உடலிலிருந்து உயிர் வெளியேறியதும், அவளிடம் இணைந்த பொருட்கள் அத்தனை யும் விடுபட்டுவிடும். தாலியின் தனித்தன்மையும் கழன்று, வெறும் தங்கமாக மாறிவிடும். பூத உடலில் இருக்கும் அணிகலன்களைக் கழற்றும்போது, தாலியையும் அணிகலனாக எண்ணியே கழற்றுவார்கள். அதன்பிறகு, தாலியை தாலியாகப் பார்க்காமல், தங்கமாகப்

பார்க்கும் நிலையில், அதை அணிகலனாக மாற்றுவதில் தடை ஏதும் இராது.

? எனில், பொருளின் தராதரமும் மகத்துவமும் மனத்தைப் பொறுத்ததே என்று சொல்ல வருகிறீர்களா?

மிகச் சரியாகச் சொன்னீர்கள். எந்தப் பொருளிலும் உயர்வு- தாழ்வைப் பார்ப்பது மனம். பொருளில் இரண்டும் இல்லை.

தேசியக்கொடியின் உயர்வை நம் மனம் பார்க்கும். கொடி துணியால் ஆனது. அதில் உயர்வு இல்லை. மனம்தான் உயர்வைப் பார்க்கும். உண்டியலில் சேரும் அணிகலன்கள் (அதில் தாலியும் உண்டு) ஈசனின் காணிக்கைப் பொருளாக மாறிவிடும். அதை பல பொருட் களாக மாற்றுவதில் மனம் தயங் காது. கும்பத்தில் சேமித்த நீர் மந்திர ஒலியில் இணைந்து பெருமை பெற்று, இறையுருவுக்கு அபிஷேகிக்கும் வேளையில் இறை சாந்நித்தியத்தை உருவாக்கும். அதன் பிறகு அந்த நீர் பொதுமக்களுக்கு விநியோகமாகும் தறுவாயில், நீராக எண்ணிப் பருகுகிறோம்.

கடவுளுக்குப் படைக்கும் தனித் தன்மை பெற்ற நைவேத்தியமானது, அவர் ஏற்றுக்கொண்ட பிறகு உணவுப் பொருளாக மாறி, அத்தனை பேருக்கும் விநியோகிக்கப்படுகிறது. அது அங்காடியில் இடம்பிடித்ததும் விலைச் சரக்காக மாறி விடுகிறது. மந்திரத்தோடு இறையுருவத்தில் சேர்த்த புஷ்பங்கள், மறுநாள் நிர்மால்யமாக மாற, கழிவுப்பொருளாக அதை விலக்குவோம். முதல்நாள் அர்ச்சனையில் அந்தப் புஷ்பத்தில் பெருமையைப் பார்த்த மனம், மறுநாள் பெருமையை விலக்கிக்கொள்ளும்.

? ஆக, பழைமைக்குப் பெருமை இல்லை என்று தீர்மானித்துவிட்டீர்களா?!

அப்படியில்லை. எதற்கும் பயனற்றதாகச் செய்து பாழாக்கிவிடவேண்டாம் என்று சொல்ல வருகிறேன்.  தாலியை உருக்குலையாமல் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற மனநிலை வலுத்தால், அதைப் பாதுகாக்க தனி நிறுவனம் தேவைப்படும். அதற்காகச் செல்வத்தின் ஒரு பங்கை ஒதுக்கவேண்டும். ஒரு பயனும் இல்லாமல் பாதுகாப்பது வீண் வேலையாக மாறிவிடும். பலருக்குப் பயன்படும் பொருளைப் பயன் படாதவாறு பாதுகாப்பது அறியாமையின் வெளிப்பாடு. தாலிக்கு மட்டும் பயன்படும் பொருள் அல்ல தங்கம். அது, பொருளாதாரத்தின் ஸ்திரத் தன்மையைக் காப்பாற்றும் பொருளாகவும் விளங்குகிறது. அலங்காரப் பொருளாகவும் தென்படுகிறது. பொருளாதாரத்தின் சரிவைச் சரிக்கட்ட தங்கம் கை கொடுக்கும். ஆகவே, பல முனைகளில் பயன்படும் தங்கத்தை, தாலி என்ற போர்வையில் உருக்குலைக்க மனமில்லாமல், அப்படியே பாதுகாக்க முனைவது, பகுத்தறிவுக் குப் பொருந்தாது. 'அப்பா... அப்பா' என்று  உருகும் தனயன், அவரது உயிர் பிரிந்ததும் உடலைச் சிதையில் சேர்ப்பான். 'அப்பா' என்ற எண்ணத்தில் பாதுகாக்க விரும்பினால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுத் திணறுவோம். எனவே, இறந்த பிறகு தாலியை வேறு அணிகலனாகப் பயன்படுத்துவது பொருந்தும்.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

படைப்பில் தென்படும் பொருள்கள் அத்தனையும் பல முனைகளில் பயன்படுபவை. அவற்றைக் குறுகிய பயன்பாட்டில் முடக்கிவிட்டால், படைப்பின் தத்துவமே பாழாகிவிடும். அப்பா சம்பாதித்த சொத்து என்று நினைத்து, அவர் இறந்த பிறகு பயன்படுத்தாமல் ஒதுக்குவது இல்லை. பொருளின் பயன்பாடுதான் அளவுகோல்; அதன் தரம் அளவுகோல் அல்ல. தாலியாக உயர்ந்த தங்கத்தை அதன் பயன்பாடு நிறைவு பெற்ற பிறகும், தாலியாகவே எண்ணுவது சிறப்பில்லை.