Saturday, May 24, 2014

இது கல்யாணப் பூங்கா

வரன் பார்க்க வேண்டும் என்றால் தரகரைப் பார்க்கப் போவோம் அல்லது ஏதாவது மேட்ரிமோனியல் சைட்டைத் தட்டுவோம். ஆனால் சீனாவில் உள்ள ஷாங்காய் நகரத்திலோ பூங்காவுக்குப் போகிறார்கள். ''அங்க ஏம்வே போறாய்ங்க?''னு கேட்கிறீங்களா?

 

2004-ம் ஆண்டு. காதலில் தோல்வியுற்று மனம் வெறுத்துப்போனவள் தன் படத்துடன் தன்னைப் பற்றிய குறிப்புகளும் எழுதி சீனாவின் ஷாங்காய்  நகரத்தில் உள்ள மக்கள் பூங்கா ஒன்றில் ஒட்டிவிட்டுப் போனாள். அதை படித்து நிறையப் பேர் அவளை போனில் அழைக்க, தனக்குப் பிடித்தமான ஓர் ஆணைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்துகொண்டாள். இந்தச் செய்தி நாளிதழ்களில் வெளிவர, பல பெண்களும் ஆண்களும் இங்கு தங்களின் குறிப்புகளை எழுதி லேமினேட் செய்து மாட்டிவிட்டனர். இன்று உலகிலேயே மிகப்பெரிய திருமண சந்தையாக ஷாங்காய் பூங்கா மாறிவிட்டது.


'1980-களில் மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்த ஒரு குடும்பத்துக்கு ஒரு வாரிசுதான் என்று சீன அரசு அறிவித்தது. அதன் பின் பிறந்த குழந்தைகள் வீட்டில் தனித்தே வாழ்ந்து பழகியதால், எதிர் பாலினத்தாரிடம் எப்படிப் பழகுவதென்பதே தெரிவது இல்லை. எனவே இங்கு பிடித்தமான குறிப்புகளைப் பார்த்து அவர்களே ஒருவரை ஒருவர் பேசி முடிவு செய்கிறார்கள்'' என்கிறார் தன் மகனுக்காக பூங்காவுக்குப் பெண் பார்க்கவந்த சாங் லீ.


அதே ஷாங்காய் மக்கள் பூங்காவில் அரசின் அனுமதியோடு லீ என்ற ஒரு பெண் தகவல் நிலையம் நடத்திவருகிறார். அதாவது ஆயிரக்கணக்கில் குறிப்புகள் ஒட்டப்பட்டிருப்பதால், தேர்ந்தெடுக்க மிகுந்த நேரமாவதால் இங்கு பதிவு செய்தால் தகவல்களை மின்னஞ்சலிலேயே அனுப்பிவிடுகிறாராம். ஆண்களுக்கு இலவசமாம். பெண்களுக்கு 500 டாலர் கட்டணம் என்று வசூலிக்கிறார்.


 

''ஆண்கள் பொறுமையாக ஆயிரக்கணக்கான குறிப்புகளைப் படித்துத் தேர்ந்தெடுக்கிறார்கள். பெண்கள் அவசரப்படுவதால் இந்தக் கட்டணம்'' என்று சிரிக்கிறார். அதைவிட வேறொன்றும் உள்ளது. சீனாவின் மக்கள் தொகை அடிப்படையில் 100 ஆண்களுக்கு 134 பெண்கள் என்று இருக்கின்றதாம். எனவே சீனாவில் ஆண்களுக்கு செம கிராக்கி!