Friday, June 27, 2014

மகான்கள் அவதரிக்கும் முன்பாக சில அறிகுறிகள்

இவ்வுலகில் மகான்கள் அவதரிக்கும் முன்பாக சில அறிகுறிகள் அவர்களின் பிறப்பை உலகிற்கு அறிவிப்பதாக அமைகின்றன. ஸ்ரீகிருஷ்ண பகவானின் அவதாரம் அசரிரீ வாயிலாக தாய் தேவகிக்கு எட்டாவது மகனாகப் பிறக்கப் போகிறார் என அறியப்படுகிறது.

ஏசு பெருமான் அவதரிக்கப்போவது வால் நட்சத்திரம் தோன்றி உலக மக்களுக்குப் பறைசாற்றியது.

நபிகள் நாயகம் பிறக்கப்போவது நட்சத்திரங்கள் மூலமும் அவரின் தாயின் கனவு மூலமும் அறிவிக்கப்படுகிறது. புத்தர் பிரான் அவதரிக்கப்போவது குறித்து, அவர் தாய் மாயா ஒரு கனவு கண்டார். ஆறு பல்லுடைய வெள்ளை நிற ஒளிமிக்க யானை வயிற்றில் நுழைவது போல ஒரு கனவு புத்தரின் பிறப்பை வெளிப்படுத்தியது.

சமண தீர்த்தங்கரர்கள் அவதரிப்பு அவர்கள் தாய்மார்களின் கனவுகள் மூலம் தெரிகிறது. தீர்த்தங்கரர்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

தீர்த்தங்கரரின் தாயார் பதினாறு புனிதக் கனவுகள் காண்கிறார். கனவில் யானை.சிங்கம், யானைகளால் நீராட்டப்படும் மகாலட்சுமி, மலர்மாலைகள், முழு நிலவு, இளஞ்சூரியன், இரு மீன்கள், பூரணகும்பங்கள், தாமரைக் குளம், கடல், அரியணை, தேவ விமானம், நாகலோகம், ரத்தினக் குவியல், அக்னி ஆகியவை வருகின்றன. பின் தன் வாயில் காளை நுழைவதாகக் கனவு காண்டார். இக்கனவுகளின் பலன் என்னவெனத் தன் கணவனிடம் கேட்டார். அரசர் கனவுகளின் பலனைத் தன் அவதி ஞானத்தால் அறிந்து மனைவியிடம் பின் வருமாறு கூறினார்.

யானையைக் கனவில் கண்டதால் நீ ஒரு மகானை மகனாகப் பெறுவாய். காளையைக் கண்டதால் அவன் அகில உலகுக்கும் தலைவனாவான். சிங்கம் வந்ததால் அவன் மிக்க வீரமுடைவனாக இருப்பான். யானைகளால் நீராட்டப்படும் இலக்குமி வந்ததால் மகனை தேவர்கள் நீராட்டுவர். பூமாலை அவன் தருமத்தை போதிக்கும் தீர்த்தனாவான் எனக் குறிக்கும். முழு நிலவைக் கண்டதால் மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருவான். சூரியனைக் கண்டதால் ஒளி பொருந்தியவனாவான். பூரண கும்பம் தெரிந்ததால் செல்வன் செல்வங்களுக்குத் தலைவனாவான். மீன்கள் வந்ததால் மிக்க இன்பம் பெறுவான். தாமரைப் பொய்கையைக் கண்டதால் மங்கலம் கொண்டவனாவான். கடலைக் கண்டதால் முற்றுமுணர்ந்த ஞானியாவான். அரியணை, மகன் பேரரசனாவான் என்பதைக் குறிக்கும்.

சொர்க்க விமானம், அவன் சொர்க்கத்திலிருந்து அவதரிப்பான் எனப்படும்.நாகலோகம் அவனின் அவதி ஞானத்தைக் குறிக்கும். ரத்தினக் குவியல் அவன் எண்ணற்ற குணங்கள் உடையவனென்பதைக் குறிக்கும். தீயைக் கண்டதால் கருமங்களை எரிப்பான்.

இப்பலன்களைக் கேட்ட அரசி மிகுந்த மகிழ்ச்சி கொண்டாள். இவ்வாறு தீர்த்தங்கரர்களின் அவதாரத்தை முன் நிகழ்வுகள் அறிவித்தன.


விஜி சக்கரவர்த்தி