Sunday, August 17, 2014

நான் என் கடமையை செய்கிறேன். நீ உன் கடமையை செய்

"அம்மா  ! நான் நாளை முதல் வேலைக்குப் போகப் போகிறேன்"

சொன்னது மூன்றுவயதுக் குழந்தை.

"எதற்காக  நீ வேலைக்குப் போகப் போகிறாய் "  தாயின் முகத்தில் பரவசம்.  "பிள்ளை எப்படி பொறுப்பாக பேசுகிறது " என்று  தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

"உங்களை எல்லோரையும் காப்பாற்ற "

"அதற்கு இப்போது என்ன அவசியம் வந்துவிட்டது.எங்களுக்கு வயதாவதற்கு பல ஆண்டுகள் இருக்கின்றனவே  "

"ஆனால்  எனக்கு நேரமில்லை   "

" அப்படி சொல்லாதே ..உனக்கு  நேரம் இன்னும் வரவில்லை .அப்படி வரும்போது நானே உன்னை வழி அனுப்புகிறேன் .இப்போது,  போய் விளையாடு . "

"நான் கண்டிப்பாக போவேன் ". பிள்ளையின் குரலில் சிறிது அடம்  தெரிந்தது.  இப்போது தாயின்   முகத்தில் கலவரம். பரவிகிறது  அவள் .சிறிது இறங்கி வருகிறாள்.

"சரி ! என்ன வேலைக்கு போகப்போகிறாய் "

"மாடு மேய்க்கப் போகிறேன்".

"என்ன ! மாடு மேய்க்கப் போகிறாயா ? அது என்ன   அவ்வளவு  எளிதானது  என்று நினைத்தாயா ? முதலில் மாடுகளை எங்கே   மேய்ப்பாய்  என்று சொல் பார்க்கலாம் "

"காட்டில் :

"அங்கே  சிங்கம் , புலி , கரடிகள்  , பாம்புகள் எல்லாம் இருக்குமே . அவற்றிலிருந்து  நம் மாடுகளை எப்படி காப்பாய் ".

"அவற்றிடம் இருந்து மட்டுமல்ல. நரிகள், நாய்கள் , கழுகுகளிடமிருந்தும்  நான்  மாடுகளைக்  காப்பேன் "

.  "நன்றாக பேசுகிறாய்  .எனக்குத்தான் நீ பேசுவது புரிவதே இல்லை . சரி சரி . நீ பெரியவனாக ஆனதும்  உன் விருப்பம் போல்  காட்டுக்கு  சென்று  நம் மாடுகளை மேய்க்கலாம் . இப்போது சென்று கண்ணுறங்கு " 

அடுத்தநாள் காலை .உதயத்திற்கு  மூன்று நாழிகை முன்னரே தாய் எழுந்து  விளக்கேற்றி  வாயிலைக் கூட்டி  கோலமிட்டு  தன் பிள்ளையைப் பார்க்க வருகிறாள். பிள்ளை  படுக்கையில்  இல்லை . ஒரு நிமிடம்  அவளுக்கு மூச்சே நின்று விடுகிறது.  மனம் பதை பதைக்கிறது . "என் குழந்தை எங்கே ?எங்கே ?என்று  நாற்புறமும் பார்க்கிறாள். 

"அம்மா" குழந்தையின் குரல்  வாயில்  பக்கம்   கேட்கிறது.  பிள்ளை  வாயிலில்  ,கையில் ஒரு சிறு குச்சியுடன்   நின்று கொண்டிருக்கிறது. 

"அம்மா ! நான் மேய்ச்சலுக்கு புறப்பட்டுவிட்டேன். அதோ பார். நம் பசுக்களும் காளைகளும்  என்னுடன் வருவதற்கு  தயாராக உள்ளன ".

"என்னடா இது கொடுமை . நீ நேற்று ஏதோ விளையாட்டுக்கு சொல்கிறாய் என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போது  மேய்ச்சலுக்கு போவேன் என்று உண்மையாகவே  நிற்கிறாயே .உன் அப்பா வேறு ஊரில் இல்லை .இப்போது உன்னை எப்படி அனுப்புவேன்  , நான் என்ன செய்வேன் "  தாய் புலம்புகிறாள்.

"நான் புறப்படுகிறேன் . என்னை வாழ்த்துங்கள் அம்மா"

"வேண்டாம் குழந்தாய், !நீ இங்கேயே வீட்டிலேயே விளையாடு ."

" மாடு மேய்ப்பதும்  எனக்கு  விளையாட்டுத்தான் அம்மா:"

"பால்குடியே இன்னும்   மாறாத உனக்கு  இப்படி மாடு மாய்க்கும் ஆசையை ஊட்டிவிட்டது யார் . சொல் குழந்தாய். .அவனை  நாலு சாற்றுகிறேன்".

"அப்படி யாரும்  கிடையாது  அம்மா. இது என் கடமை. நான் என் கடமையை செய்கிறேன். நீ உன் கடமையை செய்"

"எதடா என் கடமை ? உன்னை காட்டுக்கு அனுப்புவதா என் கடமை"

"என்னை வாழ்த்தி அனுப்புவது உன் கடமை "

"என்னால் முடியாது "

"நீ செய்கிறாய் "

"நான்  மாட்டேன் :

"அப்படியானால் நான் சாப்பிடவே மாட்டேன் "..குழந்தைக்கு  தாயின் பலவீனம் தெரிந்திருக்கின்றது.

 "சாப்பிடமாட்டேன்" என்று சொன்னதும் தாயின் கண்களில் கண்ணீர் வழிகின்றது .  "அப்படி சொல்லாதே செல்லமே !. நீ மேய்ச்சலுக்குப் போய் வா. நான் உனக்கு  சீடை , முறுக்கு , அப்பம்,   அவல், வெண்ணை ,ததி அமுது  எல்லாம் கட்டித்தருகிறேன்   காட்டில்  பசிக்கும் போதெல்லாம்  சாப்பிடு ..ஒன்றுமட்டும் சொல்  எப்போது வருவாய் ?"

:"மீண்டும் மீண்டும் வருவேன் "

"என்ன !!! "

"இல்லை இல்லை! சில நாட்கள் கழித்து வருவேன்

குழந்தை  நடக்க ஆரம்பித்தது.  வெறும் கால்களுடன்   தெருப் புழுதியில் நடக்க ஆரம்பித்தது.  பசுக்களும் , காளைகளும், அவற்றின் கன்றுகளும்  முன்னே செல்ல ஆரம்பித்தன. இடுப்புக் கச்சத்தில் ஒரு புல்லாங்குழலையும் , தலையில் ஒரு மயில்  பீலியையும் செருகிக்கொண்டு அது கம்பீரமாக  நடந்து சென்றது.  தாய் கொடுத்த   தின் பண்டங்களை ஒரு மாட்டின் கழுத்தில் கட்டிவிட்டது.

குழந்தை நடந்து செல்லும்  அழகைக் காண   ஆதவன் வழக்கத்தை விட விரைவில்  எழும்பிவர  முயற்சி செய்து கொண்டிருந்தான்.  அன்று  முன்தினம் முழு நிலவு நாள்  என்பதால்  நிலவும் மேற்கில் மறையாமல்  குழந்தையில் அழகிலேயே தன்னைப் பறிகொடுத்து அங்கேயே நின்று கொண்டிருந்தது. "நீ பார்த்து ரசித்தது போதும்  . நான் பார்க்க வேண்டாமா. நீ சீக்கிரம் கீழே இறங்கு " என்று  ஆதவன்  நிலவைப் பார்த்து தன்  உஷ்ணத்தைக் காட்டியது. இந்த சூரியன் மேலே எழுந்தால் இந்தக் குழந்தைக்கு  வேர்க்குமே என்று  காற்று  மெதுவாக குளிர்ந்து  வீசியது. பறவைகள்  அந்தக் காற்றை  தங்கள் சிறகுகளால்  குழந்தையை நோக்கி விசிறின. கல் முள் குத்தினால்  குழந்தையின் பாதங்கள் வலிக்குமே என்று மண் தன்னை  மென்மையாக மாற்றிக்கொண்டது. மரங்கள்  தங்கள் இலைகளை  உதிர்த்து  குழந்தையில் கால்களுக்கு மெத்தைகளை  அளித்தன.

மாடுகள்  தங்கள் தலையையும் , காதுகளையும் , வால்களையும் ஆட்டிக்கொண்டு  முன்னே சென்றுகொண்டிருந்தன.  அவ்வப்போது   குழந்தை பின்னே வருகின்றானா என்று   திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே சென்றன.சில  மாடுகள்  "நாம் வேண்டுமென்றே   மந்தையை விட்டு  விலகி செல்வோம் . அப்போது இந்த  குழந்தை என்ன செய்கிறது என்று  பார்ப்போம்  " என்று  வழி  மாறி நடக்க ஆரம்பித்தன.  

பின்னர் அவை திருட்டுத்தனமாக   பின்னோக்கி  பார்க்க ஆரம்பித்தன. "உங்கள்  எண்ணமும்   நான் அறிவேன் "  என்பது போல  குழந்தை அந்த மாடுகளைப் பார்த்து ஒரு புன் சிரிப்பு  செய்ததும் அந்த மாடுகள் தம்மை அறியாமல்  தாமாக சரியான பாதையில் செல்ல ஆரம்பித்தன.

இப்படியாக  அந்த  குழந்தை   மாடுகளை  மேய்த்து  வருகிறது.  கொடிய காட்டு விலங்குகளிடமிருந்து    மாடுகளைக் காப்பாற்றி  வருகிறது.  "என்னையே   சரண் அடை . நான் உன்னை எல்லாவிதமான கட்டுகளில் இருந்தும்  விடுவிக்கிறேன் " என்று சொல்கிறது.  தருமத்தைக் காக்க கையில் குச்சிக்கு பதிலாக சாட்டையை ஏந்தி   நிற்கிறது. அப்படியே  இன்னும் அல்லிக் குளத்தங்கரையில் நின்று கொண்டிருக்கிறது. .

குழந்தையாய்,  தாயாய் . தந்தையாய் , சகோதர சகோதரியாய்  , நண்பனாய் , மந்திரியாய் , நல்லாசிரியனாய்  , பண்பிலே தெய்வமாய் .......... ..

எங்கிருந்தோ வந்தான்.  இடைசாதி  நான் என்றான். இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்......

இன்று அந்தக் குழந்தையின் பிறந்த நாள் கொண்டாடும் நண்பர்கள் குடும்பங்களுக்கும், அவர் குடும்பங்களில் இருக்கும்  எல்லா பாப்பாக்களுக்கும் எனது வாழ்த்துக்கள்