Thursday, August 7, 2014

போலித் துறவிகளின் பண்புகள், அடையாளங்கள் என்ன?

போலியாக தவவேடமிட்டு, மக்களை ஏமாற்றுபவர்கள் இந்த பூமிக்கே அவமானச் சின்னங்கள் என்று திருமூலர் வன்மையாகக் கண்டித்தார். உண்மையான துறவிகளின் அடையாளங்கள், பண்புகள் என்ன? போலித் துறவிகளின் பண்புகள், அடையாளங்கள் என்ன? சில திருமந்திரப் பாடல்களைக் காணலாம்.


""ஞானம் இலார் வேடம் பூண்டும் நரகத்தார்

ஞானம் உள்ளார் வேடம் இன்று எனினும் நன்முத்தர்

ஞான் உளதாக வேண்டுவோர் நக்கன்பால்

ஞானம் உளவேடம் நண்ணி நிற்போரே''

-திருமந்திரம் பாடல் எண்: 1652.

உண்மையான "ஞானமே' துறவின் சிறப்பு அம்சம். சிவஞானம் (மெய்ஞானம்) கைவரப் பெற்றவர்களே துறவறத்திற்குத் தகுதி உடையவர்கள். கடுமையான தவம், தந்திரயோகப் பயிற்சிகள் ஆகியவற்றின் மூலம் மெய்ஞானத்தை உணர்ந்த பின்னரே துறவு வேடம் தரிக்க வேண்டும். உண்மையான ஞானநிலையை அடைந்தவர்களுக்கு எந்த வேடமும் தேவையில்லை என்பதையே இந்தப் பாடல் வலியுறுத்துகிறது.


"ஞானம் இல்லார் வேடம் பூண்டும் நரகத்தார்' 

உண்மையான மெய்ஞானம் இல்லாத வர்கள் துறவிகளுக்குரிய வேடங்களை அணிந்து கொண்டாலும் அவர்களால் வீடுபேற்றினை அடைய முடியாது. அவர் களுக்கு விதிக்கப்பட்டது நரகமே!

""ஞானம் உள்ளார் வேடம் இன்று எனினும் நன்முத்தர்''

சிவஞானத்தை உணர்ந்தவர்கள் எத்தகைய துறவு வேடத்தையும் அணியவில்லை எனினும், அவர்களே உண்மையான துறவிகள். அவர்களுக்கே வீடுபேறு எனும் பெரும் பாக்கியம் கிடைக்கும். (நன்முத்தர்).

""ஞானம் உளதாக வேண்டுவோர் நக்கன்பால்

ஞானம் உளவேடம் நண்ணி நிற்போரே''

தனக்கு உண்மையான சிவஞானம் சித்திக்க வேண்டும் என்று நினைக்கும் துறவிகள் சிவனையே தனது சிந்தனையில் நிறுத்தி அவனே கதியெனக் கிடப்பர். புறவேடங்கள் எதுவும் அவர்களிடம் இருந்தாலும் அவர் களது உள்ளம் உண்மையான துறவு நிலையில் இருக்கும்.

சிவனுக்குரிய பல பெயர்களில் ஒன்று "தக்கன்' என்பது. அதுவே இப்பாடலில் "நக்கன்' எனக் குறிப்பிடப்படுகிறது.

ஆக, துறவு என்பது காவி உடை, கமண்டலம் போன்ற வெளிஅடையாளங்களில் (வேடங்களில்) இல்லை. துறவு நிலை என்பது மனம், எண்ணம் சார்ந்த நிலை. ஞானத் தின் பயனாக மனம் பற்றற்ற நிலையை அடைவதே உண்மையான துறவிக்கு அடையாளம்.

"புன்ஞானத்தோர் வேடம் பூண்டும் பயனில்லை

நன்ஞானத்தோர் வேடம் பூணார் அருள்நண்ணித்

துன்ஞானத்தோர் சமயத் துரிசு உள்ளோர்

பின்ஞானத்தோர் என்றும் பேச கில்லாரே''

-திருமந்திரம் பாடல் எண்: 1653.

இதற்கு முந்தைய பாடலின் கருத்தே இப்பாடலிலும் ஏறக்குறைய வலியுறுத்தப்படுகிறது.

""புன்ஞானத்தார் வேடம் பூண்டும் பயனில்லை''

உண்மையான ஞானம் இல்லாத மூடர்கள் (புன்ஞானத்தார்) தவவேடம் பூணுவதால் எந்தப் பயனும் இல்லை.

""நன்ஞானத்தோர் வேடம் பூணார் அருள் நண்ணித்''

உண்மையான சிவஞானம் பெற்றவர்களே நன்ஞானத் தார். இவர்கள் இறைவனது அருளை வேண்டி, அவனையே விரும்பி (நண்ணி) அவனிடத்தில் சரணாகதி அடைந்துவிடுவர். இவர்கள் எந்த வேடமும் பூணும் அவசியம் இல்லை.

""துன்ஞானத்தோர் சமயத்துரிசு உள்ளோர்''

"துரிசு' என்ற சொல்லுக்கு அழுக்கு, அழுக்காறு, பொறாமை என்ற அர்த்தங்கள் உள்ளது. பிற சமயங்களின் மீதும் பொறாமையும், கசப்பும் உள்ளவர்கள் ஞானமுடையவர்களாக இருந்தாலும் அது தீய ஞானம். எனவே அவர்களும் தீயவர்களே (துன்ஞானத்தோர்).

""பின்ஞானத்தோர் என்றும் பேச இல்லாரே''

உண்மையான ஞானிகள் இத்தகையே துன்ஞானத்தாரோடு வாக்கு வாதங்களில் ஈடுபட மாட்டார்கள் (பேச இல்லாரே). திருமூலர் வாழ்ந்த கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் சைவமும், வைணவமும் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டிருந்தன.

சைவம் பெரியதா, வைணவம் பெரியதா என்ற சர்ச்சைகளும், வாக்கு வாதங்களும், தர்க்கங்களும் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், "பிற சமயங்களின்மேல் வெறுப்பு உள்ளவர்கள் துன்ஞானத் தோர்- உண்மையான ஞானம் பெற்ற வர்கள் இவர்களோடு தர்க்கங்களிலும் வாக்குவாதங்களிலும் ஈடுபட மாட்டார்கள் என்று ஒரே போடாகப் போட்டு விட்டார் திருமூலர்.

இதுவே சித்தர்களை பிற துறவி களிடமிருந்தும், சமயக் குரவர்களிட மிருந்தும் வேறுபடுத்திக் காட்டும் ஒரு முக்கியமான பண்பு. சித்தம் தெளிந்து சித்தர் நிலையை அடைந்தவர்களிடம் பேச்சு இராது. ஆரவாரங்களோ, ஆர்ப்பரிப்புகளோ இராது. உடலில் உயிர் இருந்தாலும் அவர்கள் "செத்த சவம்போல்' எதிலும் பற்றின்றித் திரிவர்! இறைவனது திருவடிகள் மட்டுமே அவர்கள் மனதை நிறைத்திருக்கும். வேறு எதற்கும் அங்கு இடமிராது. இந்த கருத்தை விளக்கும் ஒரு திருமந்திரம் பாடலைக் காணலாம்.

""கத்தித் திரிவர் கழுவடி நாய் போல்

கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்

ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே

செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே''

-திருமந்திரம் பாடல் எண்: 1655.

மிகக் கொடிய பாதகச் செயலைச் செய்தவர்களைத் தூக்கிலிடுவது இன்றும் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு தூக்கிலிட்டுக் கொல்லுவதையே "கழுவேற்றுதல்' என்று அக்காலத்தில் அழைத்தார்கள். தூக்குமரம்- கழுமரம்- இதையே கழுவடி என்கிறார் திருமூலர்.

சாதாரணமாக இறந்தவர்களுக்கு சமயச் சடங்குகள் செய்து புதைப்பார்கள். அல்லது எரியூட்டுவார்கள். ஆனால் கழுமரம் ஏற்றப்பட்ட வர்களுக்கு இது கிடையாது. தூக்கிலிடப்பட்ட உடல் நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும். தமிழகத்தில் மட்டுமின்றி, கிரேக்க, ரோமானிய நாகரீகங்களிலும் தொன்று தொட்டு இதுவே வழக்கமாக இருந்திருக்கிறது.

"கத்தித்திரிவர் கழுவடி நாய் போல்'

ஒரு மனிதனை கழுவில் ஏற்றத் தயாராகும் போதே, எப்போது நமக்கு உணவு கிடைக்கும் என்ற தவிப்பில் நாய்கள் அந்த கழுமரத்தைச் ஊளையிட்டுக் கொண்டே சுற்றி வருமாம். அவற்றின் இலக்கு- உணவு.

அதுபோலவே போலித் துறவிகளும் "பணம்' ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஆரவாரமான பேச்சுகளும் பிரசங்கங்கள் என்று கத்தித் திரிவார்களாம்.

அடுத்ததாக இந்த போலி வேடதாரித் துறவிகளை தெருவில் குரளி வித்தை காட்டு பவனுக்கு ஒப்பிடுகிறார் திருமூலர். குரளி வித்தை காட்டுபவன் தனது பேச்சு சாமர்த்தியத்தால் கூட்டத்தில் இருப்பவர்களைத் தன்வசப் படுத்திவிடுவான்.

தனது பேச்சுத் திறமையால் பல கண்கட்டி வித்தைகளைச் செய்து காட்டி கூட்டத்தினரை மகிழ்விப்பான். ஆனால் அவனது உண்மையான நோக்கம் கூட்டத்தில் இருப்பவர்களின் கைகளில் இருக்கும் பொருளை கொத்திக் கொள்வதே!

அதுபோலவே இந்த போலித் துறவிகளும் பேச்சு, கண்கட்டு வித்தைகள் என பலவற்றைச் செய்து பெருங்கூட்டத்தை தம்மிடம் ஈர்த்துக் கொள்வார்கள். ஆனால் அவர்களது உண்மையான நோக்கம் பிறரிடம் உள்ள பொருளையும், பணத்தையும் தனதாக்கிக் கொள்வதே! இதையே "கொத்தித் திரிவது' என்கிறார் திருமூலர்.

"கொத்தித் திரிவர்' என்ற சொற்களிலும் ஒரு நுட்பமான சூட்சுமம் உள்ளது. நம் கையிலுள்ள பொருளை ஒருவன் நேராக வந்து பறித்துக் கொள்ள முயற்சிக்கும்போது நாம் எதிர்த்து போராட முடியும். திறமையிருந்தால் நமது பொருளை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

பருந்து, காக்கை போன்றவையே கொத்திச் செல்லும். நமது தலைக்குமேல் பறந்து கொண்டிருக்கும் இவற்றை நம்மால் கவனிக்க முடியாது. நாம் சற்றே ஏமாந்த வேளையில் இவை சரேரென வந்து நம் கையில் உள்ளதைக் கொத்திக் கொண்டு பறந்துவிடும்.

போலித் துறவிகளும் தாங்கள் சராசரி மனிதர்களைவிட உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் (மேலே பறக்கும் பருந்துபோல) என்ற மாயத் தோற்றத்தை தங்களது பேச்சாலும், ஆரவாரங் களாலும், வேடங்களாலும் உருவாக்கி விடுகிறார் கள். நாம் அசந்து நிற்கும் வேளையில் "கொத்திச்' சென்று விடுகிறார்கள்.

பிடுங்கித் திரிவர் அல்லது களவாடுவர் என்ற சொற்களைப் பயன்படுத்தாது "கொத்தித் திரிவர்' என்ற சொற்களை திருமூலர் பயன்படுத்தி யிருப்பதன் சூட்சுமம் இதுதான்.

""ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே

செத்துத் திரிவர் சிவஞானியோர்களே''

உடலில் உயிர் இருக்கும். உடல் இயங்கிக் கொண்டிருக்கும். ஐம்புலன்களும் (பொறிகள்) வேலை செய்யும். ஆனாலும் உண்மையான சிவஞான நிலையை அடைந்த சித்தர்களும், துறவிகளும் செத்த பிணம்போலவே திரிந்து கொண்டிருப்பர் என்பதே இந்த இறுதி இரு அடிகளின் பொருளாகும்.

உயிர் இருந்தும் இல்லாததுபோல் எவ்வித உலக நாட்டமும் இன்றி, "சித்தன் போக்கு சிவன் போக்கு' என்று திரிவதே உண்மையான துறவிக்கு அடையாளம். அனைத்தையும் துறந்த- கடந்த இந்த நிலை ஒருவித "ஜீவசமாதி' நிலையாகும்.

""மயல் அற்று இருள்அற்று மாமனம் அற்றுக்

கயல் உற்ற கண்ணியர் கைப்பிணக்கு அற்று 

தயல் உற்றவரோடும் தாமே தாமாகிச்

செயல் அற்று இருப்பார் சிவ வேடத்தாரே'

-திருமந்திரம் பாடல் எண்: 1662.

"மெய்யான சிவஞானிகள் செயல் அற்று இருப்பர்' என்பதையே இந்தப் பாடலும் கூறு கிறது. ஒவ்வொரு அடியாகப் பொருள் காணலாம்.

"மயல் அற்று இருள் அற்று மாமனம் அற்றுக்'

"மயல்' என்பது மன மயக்கங்களைக் குறிக் கிறது. உண்மையான ஞானம் பெற்ற சிவனடி யாராகிய துறவிகளிடம் "மன மயக்கம்' என்பது அறவே இராது. உலக இச்சைகளிலும் ஆசா பாசங்களிலும் மனம் செல்லாது. தெளிந்த நீரோடை போன்ற மனநிலை இருக்கும்.

இறைவன் ஜோதி வடிவானவன். இறைவன் ஜோதி வடிவாக உடலினுள் குடிகொள்ளும் போதுதான் உண்மையான ஞானம் உருவாகும். இந்த ஜோதி உள்ளே இருப்பதால் உண்மையான துறவிகள் மனதில் இருள் என்பதே இராது. இதையே "இருள் அற்று' என்கிறார் திருமூலர். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல, அக இருள் அகலும்போது, முகமும், உடலும் பிரகாசமாகும். இதையே "தேஜஸ்' என்கிறோம். உண்மை யான துறவிகளிடம் இதைக் காணலாம்.

மனம் என்பதற்கும் மேலானது நமது "தான்' எனும் அகங்காரம். இதையே ஈகோ என்று ஆங்கிலத்தில் அழைக்கிறோம். இந்த அகங்காரமே ஞானப் பாதையின் மிகப் பெரிய தடைக்கல், மெய்ஞானம் அடைந்த ஞானிகளிடமும், துறவிகளிடமும் இந்த "மாமனம்' எனும் அகங்காரம் அழிந்து போகும்.

"கயல் உற்ற கண்ணியர் கைப்பிணக்கு அற்று'

மீன் போன்ற கண்களையுடைய பெண்களின் கைகளைத் தழுவி, அவரோடு உறவு கொள்ளும் செயலும் உண்மைத் துறவு நிலையில் அறுந்து போகும். துறவுக்கான முக்கியமான இலக்கணங்களில் இதுவும் ஒன்று. இந்த விஷயத்தில்தான் இன்று பல போலித் துறவிகள் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள்.

"தயல் உற்றவரோடும் தாமே தாமாகிச்'

"தையல்' என்பது பெண் என்பதைக் குறிக்கும். "தையல்' என்பதே இங்கு "தயல்' என்றாயிற்று. "தையல் உற்றவர்' என்றால் உமையை தனது உடலின் சரிபாகமாகக் கொண்ட சிவன்- உமையொரு பாகன்- அர்த்த நாரீஸ்வரன். உண்மைத் துறவிகள் "நான் என்ற அகங்காரம் அழிந்த நிலையில் சிவனோடு ஒன்றாகிவிடுவர். (தாமே தாமாகி). தான் வேறு; சிவன் வேறு என்றில்லாத இறை நிலையை அடைந்தவர்களே உண்மையான துறவிகள்.

"செயல் அற்று இருப்பார் சிவ வேடத்தாரே'

இறைவனோடு ஒன்றிய நிலையில் இருப்பவர்கள் செயல் அற்ற நிலைக்கு வந்து விடுவார்கள். ஆரவாரங்களோ, ஆர்ப்பாட்டங்களோ, பிரசங்கங்களோ இராது.

செயல் அற்று இருப்பது என்பது சும்மா சோம்பியிருப்பது அல்ல. "எல்லாம் அவன் செயல், ஆட்டுவிப்பவன் அவன்- இயங்குவது நான்' என்ற நிலை. எல்லையற்ற ஆனந்த நிலை! இதுவே உண்மைத் துறவியின் அடையாளம்!