Sunday, October 5, 2014

100% உழைப்பு, 200% பலன்!

​ 1995-ம் ஆண்டு உலகமே கிறிஸ்துமஸ் பண்டிகையைக் குதூகலமாக கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில், அமெரிக்காவில் மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் `கார்ப்பரேட் ஸ்ட்ராடஜி' பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் பேராசிரியர் சி.கே.பிரகலாத் என அழைக்கப்படும் கோயம்புத்தூர் கிருஷ்ணராவ் பிரகலாத்.

அவர் மனதில் ஒரே ஒரு கேள்விதான் திரும்பத் திரும்ப எழுந்துகொண்டிருந்தது. உலகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு நாம் என்ன செய்திருக்கிறோம்? நமது தொழில்நுட்பமும், மேலாண்மையில் அடைந்திருக்கிற மேம்பாடும், முதலீடு செய்வதற்கான வசதிகளும் இருந்தும் நம்மால் அவர் களுக்கு ஒன்றுமே செய்ய முடிய வில்லையே, ஏன்?

பிரகலாத்தைக் குடைந்தெடுத்த இந்தக் கேள்விக்கு அவர் கண்டுபிடித்த விடைதான் `பாட்டம் ஆஃப் தி பிரமிட்' (Bottom of the Pyramid – BoP). இந்தக் கோட்பாடு பற்றி 2002-ம் ஆண்டு ஒரு விரிவான கட்டுரை எழுதினார் பிரகலாத். அதற்குப்பிறகு ஃபார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள பல நிறுவனங்கள் இந்தக் கோட்பாட்டை செயல்முறைப் படுத்த ஆரம்பித்து கீழ்த்தட்டு மக்களையும் சென்றடையக்கூடிய பொருட்களையும், சேவைகளையும் அறிமுகப்படுத்தி வெற்றியும் கண்டன.

'பாட்டம் ஆஃப் தி பிரமிட்' மட்டுமல்ல, 'கோர் காம்பீட்டன்ஸ்' உள்பட பல்வேறு கருத்தாக்கங்களை உருவாக்கிச் சொன்ன சி.கே.பிரகலாத் பற்றி விரிவாக எடுத்துச் சொல்லும் 'சி.கே.பிரகலாத் – தி மைண்ட் ஆஃப் ஃப்யூச்சரிஸ்ட்' என்கிற புத்தகத்தைத்தான் இந்த வாரம் நாணயம் லைப்ரரியில் பார்க்கப் போகிறோம்.

1941-ம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்த சி.கே.பிரகலாத் (இனி சுருக்கமாக சி.கே.), அரசுப் பள்ளியில் தமிழில் கல்வி பயின்று பின்னர் சென்னை லயோலா கல்லூரியிலும், ஐஐஎம் அஹமதாபாத் திலும் படித்துவிட்டு, அமெரிக்கா சென்று பேராசிரியராகப் பணியாற்றி னாலும், உலக அளவில் கார்ப்பரேட் வட்டாரத்தில் இவரைத் தெரியாதவர்கள் இருக்கவே முடியாது.

1994-ம் ஆண்டு பெங்களூரில் இவர் ஆரம்பித்த `சிஇஓ ஃபோரம்' (CEO Forum) மிகவும் பிரபலமானது. இதில் இந்திய கார்ப்பரேட் உலகின் ஜாம்பவான்கள் கலந்துகொள்ளத் தவறுவதில்லை. ஆண்டுதோறும் இசைப் பிரியர்கள் `டிசம்பர் இசை விழா'-வுக்காகக் காத்திருப்பதுபோல, தொழிலதிபர்கள் இந்த நிகழ்வுக்கு காத்திருப்பது உண்டு. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு புதிய கருத்தை மையமாகக் கொண்டு இந்த நிகழ்வு நடைபெறும்.

இந்த அமைப்பு தொடங்கப்பட்ட முதல் நாளான்று ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் வந்திருந்தனர். அவர்களிடம் சி.கே., "தொழிலதிபர் களாகிய நீங்கள் யாரை உங்களுடைய முதல் எதிரியாக நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்களே தவிர, யாரும் பதில் சொல்லாததால் சி.கே.யே அந்தக் கேள்விக்கு பதில் சொன்னார்.

"உங்களுக்கு நீங்களேதான் எதிரிகள்' என்று சொன்னபோது, எல்லோரும் சற்று அதிர்ச்சிக்குள்ளானார்கள். ''நீங்கள் பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டிபோட வேண்டுமெனில், முதலில் நீங்கள் உள்நாட்டில் அவர்களுடன் போட்டிபோட உங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார். அவர் அன்று பேசிய வார்த்தைகள் இந்திய தொழிலதிபர்களுக்கு புதுப்பாதையைக் காட்டியது.

சி.கே. தனது வாழ்நாளில் பெரும்பகுதியை வெளிநாடுகளில் கழித்தாலும், இந்தியாவின் மீதும், இந்தியப் பொருளாதாரம் மற்றும் மக்களின் திறமை மீதும் அபாரமான நம்பிக்கை வைத்திருந்தார்.

இந்தியா – 60 என்று 2007-ல் நாடு சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, இவர் இந்தியா 75 என்று ஒரு வெள்ளை அறிக்கையைத் தயாரித்தார். 2022-ல் இந்தியா எப்படி இருக்கும் என்கிற தனது கனவை தெளிவாக எடுத்துச் சொல்லியிருந்தார் சி.கே.

* 20 கோடி கல்லூரி பட்டதாரிகளையும், சான்றிதழ் பெற்ற 50 கோடி டெக்னீஷியன்களையும் உருவாக்குவதற்கான சாத்தியம் நம்மிடம் இருக்கிறது. 

* ஃபார்ச்சூன் 100 நிறுவனங்களில் 30 நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களாக இருக்கும்.

* உலக வணிகத்தில் இந்தியாவின் பங்கு 10 சதவிகிதமாக இருக்கும். ('1997-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில் நாம் அதிகமாகப் பாதிக்கப்படவில்லை என்று மகிழ்ச்சியடைந்தோம். ஆனால், இதிலிருந்து தெரிவது, நாம் உலக நாடுகளுடன் இன்னும் சரியாக நம்மை தொழில்ரீதியில் இணைத்துக் கொள்ளவில்லை என்பதே' என்றார் சி.கே).

* புதுமைகளை அறிமுகப்படுத்துவதில் உலகளவில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். வேற்றுமையில் ஒற்றுமையாக இருப்பது எப்படி என்பதை உலக நாடுகள் நம்மிடம் இருந்து கற்றுக் கொள்ளும். ('இந்தியா உலகுக்கே ஒரு விஞ்ஞானக் கூடமாகத் திகழும்!')
 

'ஒவ்வொரு சிஇஓவும் ஒரு தொழில்முனைவோர் (entrepreneur) போல, தங்களது நிறுவனத்தை நடத்திச் செல்ல வேண்டும்' என்பதை இவர் அடிக்கடி சொல்லி வந்தார். இவரைப் பொறுத்தவரை, `பணம் என்பது ஒரு வளமே (resource) ஒழிய, தொழிலுக்கான தடை (constraint) இல்லை' என்பதே.

நேரந்தவறாமை, வேலை, படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இவர் மிகவும் கறார் பேர்வழி. கடின உழைப்புக்கு நிகர் வேறில்லை என்பது இவரது மந்திரம். "நீங்கள் செய்வது எதுவாக இருந்தாலும் அதில் நூறு சதவிகிதத்துடன் ஈடுபடுங்கள்; இருநூறு சதிவிகித பலன் கண்டிப்பாக கிடைக்கும்" என்பார்.

இவருடைய யோசனைகளைக் கேட்டு நடந்த எந்தவொரு  நிறுவனமும் தோல்வி அடைந்த தில்லை. 1991 - 2013-க்கும் இடைப்பட்ட காலத்தில் டாடா குழுமம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. டாடா குழும பட்ஜெட் ஹோட்டல் `ஜிஞ்சர்', குறைந்தவிலை காரான `நானோ' போன்றவைகூட அதிக மக்களைச் சென்றடைய வேண்டுமென்பது சி.கே கொடுத்த யோசனைகள்தான். இதுபோல, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, விப்ரோ, கோத்ரெஜ், ஐசிஐசிஐ வங்கி என பல நிறுவனங்களின் வளர்ச்சியில் இவரது பங்கு உண்டு. 

`உங்களிடம் அல்லது உங்கள் நிறுவனத்தின் குறிப்பிட்ட திறமையில் கவனம் செலுத்தாதவரை வெற்றி பெற முடியாது" என்பதில் இவர் மிகவும் திடமாக இருந்தார். இதற்கு இவர் உதாரணமாக எடுத்துக் கொண்ட நாடுகள் ஜப்பான், தென் கொரியா மற்றும் அங்குள்ள நிறுவனங்களின் (சாம்சங், எல்ஜி, ஹுண்டாய்) செயல்பாடுகள்.

இந்தியர்களிடம் இவர் கண்டு பிடித்த குறை என்னவெனில், ''குழப்பம் அல்லது பிரச்னை என்று ஒன்றை எதிர்கொள்ளாத வரை அவர்கள் எதுவும் செய்யமாட்டார்கள்" என்பதே. இதற்கு ஓர் உதாரணம், அமெரிக்கா நமக்கு முக்கிய தொழில்நுட்பங்களைத் தருவதை நிறுத்தியபிறகுதான் நாம் சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கினோம். ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டோம். விவசாய நெருக்கடியின்போதுதான் நமது விஞ்ஞானிகள் 'பசுமைப் புரட்சி'க்கு வழி கண்டனர். 

''எதிலாவது நாம் தோற்கிறோம் என்றால், அதற்குத் தலைமைப் பொறுப்புதான் காரணம். ஏனென்றால், நாம் நம்மை நம்புவதில்லை. ஆனால், சிந்தனை தெளிவாக இருந்து, கடும் முயற்சி செய்யும் எதிலும் நாம் தோற்றதில்லை என்பதை பல தடவை நிரூபித்திருக்கிறோம்'' என்கிறார் சி.கே. 

இவர் சிஐஐ., அசோசெம், பிக்கி (FICCI) போன்ற அமைப்புகள் மூலம் இந்தியாவின் எதிர்காலம் பற்றிய கனவுகளை தான் இறக்கும்வரை (2010) பகிர்ந்து கொண்டார். யுனிலீவரின் `புராஜெக்ட் சக்தி', சிட்டி பேங்கின் `சுவிதா' திட்டம், ரிலையன்ஸ் டெலிகாமின் குறைந்த விலை போன் போன்றவையெல்லாம் சிகேயின் முக்கிய கோட்பாடான `பாட்டம் ஆஃப் தி பிரமிட்' சம்பந்தப்பட்டவைதான்.

இதன்மூலம் இந்தியாவிலும், உலக அளவிலும் உள்ள கீழ்த்தட்டு மக்களை (ஏறக்குறைய 400 கோடி மக்களின் தினசரி வருமானம் 2 டாலர்களுக்கும் குறைவு) தங்களது பொருட்கள் மற்றும் சேவைகளின் மூலம் சென்றடைவது எப்படி என்பதை எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பல நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கி வெற்றியும் கண்டார் சிகே.

இவரைப் பற்றியும், இவருடைய மேலாண்மைக் கோட்பாடுகள் பற்றியும், இந்திய மற்றும் உலகத் தொழில் துறையில் இவருடைய பங்கீடு பற்றியும் பலருடைய கருத்துக்களையும், கட்டுரைகளையும் கொண்டு வெளிவந்துள்ள இந்தப் புத்தகம் சி.கே. என்கிற `ஸ்ட்ராடஜிஸ்ட்டை' தெளிவாக தெரிந்துகொள்ள உதவும்.
 
 
 
.