Wednesday, October 1, 2014

5 முதல் 8 மாதங்கள் வரை குழந்தைகளைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள்

புதிதாகப் பெற்றோர் குழந்தைகளைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள்:

1. வீட்டிலிருக்கும் பொருட்களைத் தொட்டுத், துழாவி, விளையாடுவதன் மூலம் குழந்தை பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கும்.

2. இந்தப் பருவத்தில் விளையாட்டுப் பொம்மைகள் பாதி தெரிந்து மீதி மறைந்திருந்தாலும்கூட, குழந்தை சரியாக அடையாளம் கண்டறிந்துவிடும்.

3. சில நடவடிக்கைகளைக் குழந்தை திரும்பத்திரும்பச் செய்யும். இப்படித்தான் பல செயல்பாடுகளைக் குழந்தை புரிந்துகொள்கிறது, கற்றுக்கொள்கிறது.

சுய உணர்வு:

குழந்தையைத் தூக்கிக்கொண்டு கண்ணாடி முன் நில்லுங்கள், தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்ததும் குழந்தை ஆள்காட்டி விரலை நீட்டி, "இது யார்?" என்பது போலச் செய்யும். "இது என்னுடைய செல்லப் பாப்பா…" என்று அப்போது நீங்கள் சொல்லாம். இப்படிக் கண்ணாடியில் தன் உருவத்தைத் தானே பார்க்கும்போது, குழந்தை தன்னைப் பற்றி உணர ஆரம்பிக்கும்.

உடல்:

உங்கள் குழந்தையைத் தரையில் இறங்கி விளையாட அனுமதியுங்கள். இதன் மூலம் குழந்தை தானாகவே தவழக் கற்றுக்கொள்ளும்.

உறவுகள்:

குழந்தை தனக்குப் பழக்கமானவர்களுடன் இருக்கும்போது பாதுகாப்பாக உணரும். ஆனால், புதியவர்களைப் பார்க்கும்போது பயம் கொள்ளும்.

புரிதல்:

உங்கள் முகத்தைக் கைகளால் மறைத்து, பின்னர்க் கைகளை விலக்கி உங்கள் முகத்தைக் காட்டுவது நல்ல விளையாட்டு. ஆங்கிலத்தில் இதைப் பீ-க-பூ என்பார்கள்.

குழந்தையின் புரிதல் திறனை இது மேம்படுத்தும். இப்படிச் செய்வதன் மூலம் நேரடி பார்வையில் ஒரு பொருள் இல்லை என்றாலும், அந்தப் பொருள் குறிப்பிட்ட இடத்தில் இருக்கிறது என்பதைக் குழந்தை புரிந்துகொள்ளத் தொடங்கும்.

கருத்துப் பரிமாற்றம்:

நீங்கள் சொல்லும் வார்த்தைகள் குழந்தைக்கு ஆரம்பத்தில் புரியாது. ஆனால், அந்த வார்த்தைகளின் ஒலியை அப்படியே திரும்பச் சொல்ல முயலும். இப்படித்தான் வார்த்தைகளைக் குழந்தை கற்றுக்கொள்கிறது.