Saturday, December 13, 2014

ஒரு கொசுவத்தி 100 சிகெரட்டுகளை புகைப்பதற்கு சமம்.

பூட்டிய அறையில் ஒரு கொசுவத்தியை கொளுத்துவது 100 சிகெரட்டுகளை புகைப்பதற்கு சமமாகும்.

கொசுவத்தி, ஊதுவத்திகளில் இருந்து வரும் புகையை நுகர்வதால் நுரையீரல் பாதிப்பு மட்டும் ஏற்படுவதில்லை கேன்சர் நோய் வரக்கூட வாய்ப்பிருக்கிறது என கூறுகிறார் புனேவின் செஸ்ட் ரிசேர்ச் பவுண்டேஷன் இயக்குநர் சால்வி.

தேசிய அளவிளான கருத்தரங்கு ஒன்றில் பேசிய சால்வி, "பூட்டிய அறையில் ஒரே ஒரு கொசுவத்தியை கொளுத்துவது 100 சிகெரட்டுகளை புகைப்பதற்கு சமமாகும்" என்றார்.

அவர் மேலும் கூறுகையில்: "பூஜைகளுக்கு பயன்படுத்தப்படும் ஊதுவத்தியிலிருந்து வெளியேறும் புகையில் லெட், அயர்ன், மேன்கனீஸ் போன்ற நச்சுப் பொருட்கள் உள்ளன. இதேபோல், வீடுகளில் பயன்படுத்தப்படும் கொசுவத்தியில் பைரத்திரின் (pyrethrin) என்ற பூச்சிக்கொல்லி மருந்து இருக்கிறது. இவை நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.

புகை குறைவாக வெளியிடும் கொசுவத்திகள் என விளம்பரப்படுத்தப்படும் பொருட்களில் நச்சுத்தன்மையின் அளவு சற்று குறைவாக இருக்கும். இருப்பினும் அத்தகைய பொருட்கள் வெளியிடும் கார்பன் மோனோ ஆக்ஸைடு அளவு அதிகமாகவே இருக்கும்.

லிகுவிடேட்டர்களில் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்கள் மீதான ஆய்வுகள் இன்னும் நிறைவு பெறவில்லை. இருந்தாலும், அவையும் நுரையீரலில் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.

புனேவை சுற்றியுள்ள 22 கிராமங்களில் மேற்கொண்ட ஆய்வில், பல குடும்பத்தினர் கொசுவத்தி, ஊதுவத்தி பயன்பாட்டின்போது வீடுகளின் கதவு, ஜன்னல்களை மூடிவைப்பது தெரியவந்துள்ளது. இது, புகையால் அவர்களை அதிகமாக பாதிக்கிறது" என்றார்.

நோய்களிலிருந்து தற்காப்பு

கொசு கடிப்பதால் ஏற்படும் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள கொசுவலைகளை பயன்படுத்துவது மிகச்சிறந்த வழி என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், நச்சுப் பொருட்கள் அடங்கிய கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை பொது நலன் கருதி தடை விதிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றி, அதனை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் கருத்தரங்கில் முடிவு செய்யப்பட்டது.