Tuesday, December 16, 2014

யார் குடி நோயாளி? குடி நோயின் அறிகுறிகள், ஏற்படும் பாதிப்புகள்

சாந்தி ரங்கநாதன்
சாந்தி ரங்கநாதன்

ஒரு தனி மனிதனின் பழக்கம், அவனை மட்டுமல்லாமல் அவனது குடும்பத்தையும் அவன் சார்ந்திருக்கும் சமூகத்தையும் சேர்த்தே சீரழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா? இன்று தமிழகம் முழுக்க ஏராளமான குடும்பங்களில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. ஒருவர் மது அருந்துவதை ஏற்றுக்கொண்டு அமைதியாக இருக்கிற நாம், அவர் அதற்கு அடிமையாகி குடி நோயாளியாக மாறுவதை மறைமுகமாக அனுமதிக்கிறோம் என்று அர்த்தம். ஒரு பழக்கம் எப்படி நோயாக மாற முடியும் என்று கேட்கலாம். இந்தக் கேள்விக்கான பதிலாகத் தன் வாழ்க்கையையே பாடமாகச் சொல்கிறார் டாக்டர் சாந்தி ரங்கநாதன். குடி நோயாளிகளுக்காகப் பிரத்யேகமாக சென்னை இந்திராநகரில் இயங்கிவரும் டி.டி.கே மருத்துவமனையின் தலைவர் இவர். சாந்தி ரங்கநாதன், ஒரு மருத்துவமனையின் தலைவராக உயர்வதற்காகச் சாதனைகளைப் புரியவில்லை. தன் தனிப்பட்ட வாழ்வில் எதிர்கொண்ட துயரத்தையே இந்த மருத்துவமனைக்கு அடித்தளமாக மாற்றியிருக்கிறார்.

மதுவின் பிடியில்

எல்லாப் பெண்களையும் போல் கனவுகளையும் கற்பனைகளையும் சுமந்தபடி திருமண வாழ்வுக்குள் அடியெடுத்துவைத்தார் சாந்தி. டி.டி.கே குடும்பத்தின் மருமகளான இவருக்கு ஆரம்ப நாட்களின் மகிழ்வும் நிறைவும் அடுத்தடுத்த வருடங்களுக்குத் தொடரவில்லை. குடித்துவிட்டு வரும் தன் கணவரை எப்படி எதிர்கொள்வது, அவரை எப்படி மீட்பது என்று தெரியாமல் தவித்தார். தன் கணவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற துணையிருந்தார். அவரது முயற்சிகள் அத்தனையும் பயனற்றுப் போன ஒரு நாளில் இந்த உலகை விட்டு மறைந்தார் சாந்தியின் கணவர். முப்பது வயதில் கைம்பெண்ணாக நின்ற சாந்தி ரங்கநாதனின் மனதுக்குள் மதுப் பழக்கமும் அதன் விளைவுகளும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின.

"மதுப் பழக்கத்தால் என் கணவர் குடி நோயாளியாக மாறியது எனக்குப் பெரும் வேதனையாக இருந்தது. அந்தப் பழக்கத்தில் இருந்து அவர் விடுபட வேண்டும் என நினைத்தார். ஆனால் அவரால் முடியவில்லை. அப்போதுதான் அந்தப் பழக்கத்தின் தீவிரம் எனக்குப் புரிந்தது. மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்பதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன்" என்று சொல்லும் சாந்தி ரங்கநாதன், சென்னை சாந்தோம் பகுதியில் இருந்த தன் வீட்டில் 1980-ம் ஆண்டு குடி நோயாளிகளுக்காக ஒரு மையத்தைத் தொடங்கினார். சாந்தி ரங்கநாதனின் முயற்சிக்கு அவரது புகுந்த வீட்டில் முழு ஆதரவும் வரவேற்பும் கிடைத்தது.

மறுவாழ்வுப் பயணம்

" 'என் மகன் குடி நோயால இறந்துட்டான். இதுல வெட்கப்படவோ அவமானப்படவோ எதுவுமில்லை. நீ என்ன செய்யணும்னு நினைக்கிறாயோ அதைச் செய்'னு என் மாமியார் எனக்குத் தைரியம் கொடுத்தாங்க" என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டவர், ஏகப்பட்ட தடைகளைத் தாண்டித்தான் அந்த மையத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்னால் குடி நோயாளி என்ற வார்த்தையையே கேள்விப்பட்டிராத தலைமுறையிடம் இருந்துதான் தன் பணிகளை சாந்தி தொடங்கினார். ஆரம்பத்தில் எதிர்ப்பும் நகைப்பும்தான் கிடைத்தன. மருத்துவத்தால் முடியாததை இவர் எப்படிச் செய்ய முடியும் என்ற விமர்சனத்தைக்கூடச் சவாலாக எடுத்துக்கொண்டார். எதிலும் அறிவு சார்ந்த தெளிவு அவசியம் என்பதற்காகக் குடிப் பழக்கம் தொடர்பான மேற்படிப்பு படிக்க அமெரிக்கா சென்றார். பிறகு இந்தியாவில் பி.எச்டி. முடித்தார்.

டி.டி.கே நிறுவனத்தின் நிதியுதவியுடன் 1987-ம் ஆண்டு சென்னை இந்திரா நகரில் இருக்கும் மருத்துவமனை கட்டப்பட்டது.

மகிழ்ச்சியான வாழ்வு

பொதுவாக நோய் பாதிக்கப்பட்டவருக்கு மட்டும் சிகிச்சை அளிப்பதுதான் வழக்கம். ஆனால் குடி நோயாளியைப் பொறுத்தவரை நோயாளிகளுடன் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் சேர்த்தே மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.

"குடிப் பழக்கம் தனி மனிதனின் உடல்நலத்தை மட்டுமல்ல, அவன் சார்ந்திருக்கும் குடும்பத்தின் மகிழ்ச்சியையும் சீர்குலைத்து விடுகிறது. குடிப் பழக்கத்தால் குடும்ப வன்முறைகளும் விவாகரத்துகளும் அதிகரித்திருக்கின்றன. இப்போது மிக இளம் வயதிலேயே பலர் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகியிருப்பது வேதனை தருகிறது. சிகிச்சைக்காகத் தந்தையும் மகனுமாக வருகிற சமூக அவலம் நல்லதல்ல" என்று ஆதங்கப்படுகிற சாந்தி, குடிப் பழக்கத்தால் இளம் தலைமுறையினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டதையும் சுட்டிக்காட்டுகிறார்.

குடி நோய் குறித்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகக் கருத்தரங்குகளும் விழிப்புணர்வு முகாம்களும் நடத்துகிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஆறு கிராமங்களுக்குச் சென்று அங்கு குடி நோய் பற்றி எடுத்துரைத்து, மக்களிடம் மன மாற்றம் ஏற்பட வழிகாட்டுகிறார்கள். இதுவரை இந்த மையம் சார்பில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் மதுவின் பிடியிலிருந்து மீண்டிருக்கிறார்கள்.

ஒரே நாளில் குடிப் பழக்கத்தை விட்டுவிடலாம், குடிப்பவருக்கே தெரியாமல் மருந்தைக் கலந்து தரலாம் என்பது போன்ற நடவடிக்கைகளால் எந்தப் பலனும் இருக்காது என்று சொல்லும் சாந்தி ரங்கநாதன், மது வகைகள் கிடைப்பதில் ஒரு கட்டுப்பாடும் வரைமுறையும் இருக்க வேண்டும் என்கிறார்.

"இப்போது எங்கு பார்த்தாலும் எளிதில் மது வகைகள் கிடைத்து விடுகின்றன. அதுவும் வயது வித்தியாசம் இல்லாமல் யார் வேண்டு மானலும் மது அருந்த இங்கே வசதியிருக்கிறது. இவை இரண்டையும் கட்டுப்பாட்டில் வைத்தாலே, மக்களை ஓரளவுக்கு மதுவின் பிடியில் இருந்து மீட்கலாம். குடி நோய் என்பது தீர்க்ககூடியதுதான். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டால் நிச்சயம் மகிழ்ச்சியான மறுவாழ்வு உண்டு" என்று நம்பிக்கை தருகிறார் டாக்டர் சாந்தி ரங்கநாதன்.

யார் குடி நோயாளி?

# குடிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து குடித்துக்கொண்டே இருப்பவர்கள்.

# குடிக்கவில்லை என்றால் கை நடுக்கம், தூக்கமின்மை, மனச்சோர்வு ஆகியவற்றை அனுபவிப்பவர்கள்.

# குடியின் அளவைக் குறைக்கவோ, இடைவெளியை அதிகரிக்கவோ முடியாமல் இருப்பவர்கள்.

குடி நோயின் அறிகுறிகள்

# அதிக அளவு குடித்தால்தான் போது ஏற்படும் என்ற நிலை.

# குடித்த பிறகு நடந்த சம்பவங்களை மறந்துவிடுவது.

# எப்போதும் மதுவைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பது.

# குடிக்கும் அளவையோ, நேரத்தையோ கட்டுப்படுத்த முடியாத நிலை.

# குடிப்பதற்காகவே காரணங்களைத் தேடுவது.

# கோபம், சண்டை, தேவையற்ற பேச்சு, ஒழுக்கம் தவறுதல் போன்ற குணமாற்றங்கள் ஏற்படுவது.

# காரணமின்றி மனைவியின் நடத்தையையோ, நெருங்கியவர்களின் செயல்பாட்டையோ சந்தேகிப்பது.

# குடித்தால்தான் வேலைசெய்ய முடியும் என்ற நிலை.

ஏற்படும் பாதிப்புகள்

# வயிற்றுப் புண் மற்றும் அல்சர்

# புற்றுநோய் ஏற்படும் அபாயம்

# ஈரல் வீக்கம், மஞ்சள் காமாலை, கல்லீரல் அழற்சி

# இதயத் துடிப்பில் மாற்றம்

# ரத்தக் குழாய்கள் பாதிப்பு

# இதய தசைகள் பழுதடைதல்

# நரம்புத் தளர்ச்சி, உணர்ச்சியின்மை

# கணையத்தில் ரணம் ஏற்பட்டு பழுதடைவது

# தோல் சம்பந்தப்பட்ட பாதிப்பு