Wednesday, January 21, 2015

காளமேகம், தி கிரேட் பொயட்! அவர் சொன்னா அப்பீலேது?'

ண்பரைப் பார்ப்பதற்காக அவரது ஃபிளாட்டுக்குச் சென்றிருந்தேன். வாசலை நெருங்கும்போதே உள்ளே அப்பாவும் மகனும் சத்தம் போட்டு விவாதித்துக் கொண்டிருந்தது கேட்டது. 

அப்பாவுக்கு, அதாவது என் நண்பருக்கு வயது 63. மகன் கடந்த மார்கழியில் 36ஐக் கடந்திருந்தான்.

''எவன்டா உன்கிட்டே சொன்னது, ஆன்மிகமும் பக்தியும் வயசானவங்களுக்கு மட்டும்தான்னு?'' என்று சிவந்த முகத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார் அப்பா.

''எவனும் சொல்ல வேணாம்; எல்லாம் எனக்கே தெரியும். அவ்வளவு ஏன்... நாற்பது வயசுல நீங்க என்ன செய்துட்டிருந்தீங்கன்னு சொல்லவா? இப்போ நீங்க போடறது பக்திமான் வேஷம். வெறும் பொழுதுபோக்குக் கவசம்...'' என்று மகனும் ராக்கெட் விட்டுக் கொண்டிருந்தான்.

''வார்த்தைகளை அளந்து பேசுடா! உன்னோட நல்லதுக்குத்தான் சொல்றேன். இப்போ கோட்டை விட்டுட்டு, அப்புறம் கடைசி காலத்துல 'சங்கரா... சங்கரா'ன்னு சரணாகதி பண்றதுல ஒரு பிரயோஜனமும் இல்லை.'

நான் உள்ளே நுழைந்ததை கவனிக்காமலே அவர்களின் விவாதம் தொடர்ந்தது...

''அப்பா! அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. நீங்க அம்பதுல தொடங்கிக் கத்துக்கறதை நான் எழுபதுல தொடங்கி, பத்தே வருஷத்துல ஊதித் தள்ளிடுவேன். இப்ப என்னை என் போக்குலேயே விடுங்க!''

''அப்பனே! பக்திங்கறது பலூன் இல்லேப்பா, ஊதி வெடிக்கறதுக்கு!'' என்று அப்பா பஞ்ச் டயலாக் அடிக்க, நான் இடையில் புகுந்து தந்தை, தனயன் இருவருக்கும் அட்வைஸித்தேன்...

''உங்க ரெண்டு பேருக்கும் ஒண்ணு சொல்லவா?

'முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன் அக்காலரைக் கால் கண்டு அஞ்சாமுன்  விக்கி இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது!'ன்னு பாடியிருக்கார் காளமேகப் புலவர்...''

''என்ன இது அங்கிள்... வாய்பாடு மாதிரி முக்கால், அரைக்கால்னு?'' என்றது 36.

'அதானே... மாகாணிங்கிறதுகூட ஓர் அளவாச்சே?!' என்று வியந்தது 63.

''மூப்பு, யம பயம், வியாதி, சாவு இதெல்லாம் வருமுன் காஞ்சி ஏகாம்பரநாதனை இப்போதிலிருந்தே பாடு என்பது இதன் ஒன்லைன்! அதாவது, இரண்டு காலோடு மூன்றாவது காலாகக் கழியைப் பிடித்துக் கொள்ளுமுன், முன்னுச்சி முடியில் நரை ஏற்படுவதற்குமுன், காலர் அதாவது, எமனின் காலடிச் சுவடு காண்பதற்கு முன், முதுமையில் கபம், விக்கல், இருமல் எல்லாம் வருவதற்குமுன், மயானத்துக்குப் போவதற்கு முன், மாமரத்தின் அடியில் இருப்பவரான ஏகாம்பரநாதரை ஓது என்கிறார் புலவர். பக்தி என்பதை இளமை முதலே வளர்த்துக்கொள்ள வேண்டும்; வயதான பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடக்கூடாது என்கிறார்' என்று விளக்கினேன்.

''காளமேகம், தி கிரேட் பொயட்! அவர் சொன்னா அப்பீலேது?'' என்று புன்னகைத்தான் மகன்.