Saturday, January 3, 2015

வீடில்லா புத்தகங்கள் - சார்லியும் சாக்லேட்டும்

 எஸ்.ராமகிருஷ்ணன் 
 
சென்னை, அண்ணா நகரில் உள்ள சாலையோர புத்தகக் கடையில் ஒரு வயதானவரைச் சந்தித்தேன். குழந்தைகள் புத்தகமாகத் தேடி வாங்கிக் கொண்டிருந்தார். யாருக்காக அவற்றை வாங்குகிறார் என அறிந்துகொள்ள அவருடன் உரையாடத் தொடங்கினேன்.
 
''என்னுடைய பேரனுக்குத் தினமும் புத்தகம் படித்துக் காட்டுகிறேன். அதற்காகத்தான் இந்தப் புத்தகங்கள்'' என்றார். ''பேரனுக்கு எத்தனை வயது?'' ''எட்டு வயது நடந்து கொண்டிருக்கிறது. அவனுக்குத் தமிழில் வாசிக்க வரவில்லை. நான்தான் படித்துக் காட்டுகிறேன். தினமும் ஒரு மணி நேரம் படித்துக் கதைகள் சொல்கிறேன். இந்தக் கதைகளைப் படிக்கப் படிக்க நானே குழந்தையாகிப் போனது போல சந்தோஷமாக இருக்கிறது.''
 
''உங்கள் மகன் என்ன செய்கிறார்'' என்று கேட்டேன். ''அமெரிக்காவில் கணிப்பொறித் துறையில் வேலை செய்கிறான். பேரனும் அங்கேதான் இருக்கிறான்'' என்றார்.
''அமெரிக்காவில் உள்ள பேரனுக்காகச் சென்னையில் இருந்து கதைகளைப் படித்துக் காட்டுகிறீர்களா…'' என வியப்போடு கேட்டபோது அவர் சொன்னார்:
 
''அதுதான் டெக்னாலஜி வளர்ந்துவிட்டதே, இதில் என்ன சிரமம்? என்னுடைய லேப்டாப்பில் ஸ்கைப் இருக்கிறது. கேமரா முன் அமர்ந்து கதை சொல்கிறேன், பேரன் அமெரிக்காவில் இருந்து தினமும் இரவு 8 மணிக்கு அழைப்பான். நமக்கு அது காலை நேரம். இருவரும் கதைகள் பேசுவோம், இதனால் அவன் நன்றாகத் தமிழ் பேசுகிறான், ஒய்வு பெற்ற எனக்கும் மனது சந்தோஷமாக உள்ளது.
 
சில நாள் கதை படிக்க வேண்டாம் என்று சொல்வான், அன்றைக்குப் பாடல்கள் படித்துக் காட்டுவேன், சில சமயம் விடுகதை, பழமொழிகள் கூடச் சொல்வதுண்டு.  எந்தக் காரணம் கொண்டும் வீட்டில் தமிழ் பேசுவது நின்று போகக்கூடாது. அதை ஒவ்வொருவரும் கடமையாகச் செய்ய வேண்டும். என்னாலான சிறிய முயற்சி இது. விருப்பத்தோடு செய்து கொண்டிருக்கிறேன்'' என்றார்.  
 
எத்தனையோ பேரின் பிள்ளைகள், பேரன்கள் அயல்நாடுகளில் வசிக்கிறார்கள். அவர்களில் எத்தனைப் பேருக்கு இப்படிக் கதை படிக்கும் தாத்தா கிடைத்திருக்கிறார்? எத்தனை பேரன், பேத்திகள் தமிழில் கதை கேட்க ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். தமிழை வளர்ப்பதற்கு எவ்வளவு எளிய, அருமையான முயற்சி இது. அவரைப் பார்க்கும்போது பெருமிதமாக இருந்தது!
 
அவருக்காக அந்தப் புத்தகக் குவியலுக்குள் நானும் சிறுவர் புத்தகங்களைத் தேடினேன். விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள ரோல் தால் (Roald Dahl) எழுதிய 'சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி' என்ற சிறார்களுக்கான நாவல் கிடைத்தது. எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இதனைச் சிறப்பாக தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
 
அந்தப் புத்தகத்தை நான் வாசித்திருக்கிறேன். 'சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி' நாவல் குழந்தைகளுக்கான திரைப்படமாகவும் வெளியாகியிருக்கிறது. சிறார்கள் அவசியம் வாசிக்க வேண்டிய சுவாரஸ்யமான புத்தகம் இது.
 
பிரபலமான சாக்லேட் நிறுவனங்கள் தங்களது போட்டியாளர்களின் தொழிற்சாலைக்குள் உளவாளிகளை அனுப்பி, தொழில் ரகசியங்களைத் தெரிந்து கொண்டு வர முயற்சிப்பது இன்றும் தொடரும் வழக்கம். இந்தக் களத்தை அடிப்படையாக வைத்தே 'ரோல் தால்' இந்த நாவலை எழுதியிருக்கிறார்.
 
வில்லி வோங்காவின் சாக்லேட் பேக்டரி ஒரு விந்தையான மாய உலகம். அதனுள் எப்படி சாக்லேட் தயாரிக்கப்படுகிறது என்பது பரம ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் யாரும் அந்தப் பேக்டரிக்குள் சென்றதே இல்லை.
 
வில்லி வோங்கா ஒருமுறை பரிசுப் போட்டி ஒன்றினை அறிவிக்கிறார். அதன்படி ஐந்து சாக்லேட் பாக்கெட்டு களில் தலா ஒரு தங்க டிக்கெட்டுகள் வைக்கப்படுகின்றன. அந்தத் தங்க டிக்கெட்டுகள் கிடைக்கப் பெற்ற அதிர்ஷ்டசாலிகள் வோங்காவின் சாக்லேட் தொழிற்சாலையினைச் சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.
 
இதில் நான்கு தங்க டிக்கெட்டுகள் நான்கு பணக்கார சிறுவர்களுக்குக் கிடைக்கின்றன. பரிசுப் போட்டி அறிவிக்கப்பட்டதில் இருந்தே சார்லி என்ற ஏழைச் சிறுவன் தங்க டிக்கெட்டை அடைய ஆசைப்படுகிறான். ஆனால், சாக்லேட் வாங்க அவனிடம் காசு இல்லை. நான்கு பணக்காரப் பையன்கள் தங்க டிக்கெட்டுகளை வென்றுவிட்டார்கள் என்று தெரிந்தவுடன், ஐந்தாவது யாருக்குக் கிடைக்கப் போகிறது என்று ஆதங்கத்துடன் சார்லி காத்திருக்கிறான்.
 
ஐந்தாவது தங்க டிக்கெட்டும் ஒரு பணக்காரப் பையனுக்கே கிடைத்துவிட்டதாகத் தகவல் வெளியாகிறது. சார்லி மனம் உடைந்து போகிறான். ஆனால், அது வெறும் வதந்தி. உண்மையில் யாருக்கும் கிடைக்கவில்லை என்று அறிந்ததும், ஓடிப் போய் ஒரு சாக்லேட் வாங்குகிறான். அதன் உறையைப் பிரித்தால் உள்ளே தங்க டிக்கெட் பரிசாகக் கிடைக்கிறது.  
 
சார்லி மிகவும் ஏழை. வீடு வீடாகப் போய் நியூஸ் பேப்பர் போடுபவன். மிகவும் சிறிய வீட்டில் வசிக்கிறான். ஆனால், மிகமிக நல்லவன்.
 
பரிசு பெற்ற ஐந்து பேரும் குறித்த நாளில் சாக்லேட் பேக்டரியைச் சுற்றிப் பார்க்கத் தயார் ஆகிறார்கள். தொழிற்சாலைக்குள் நுழையும் முன்பாக அவர்களுக்குச் சில நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. அவற்றைப் பின்பற்றத் தவறினால் உடனே வெளியேற்றப்படுவார்கள் என எச்சரிக்கையுடன் உள்ளே அனுப்பப்பட்டார்கள்.
 
சாக்லேட் பேக்டரியைச் சுற்றிப் பார்க்கும் சிறுவர்கள் தங்களுக்குள் சச்சரவு செய்து வோங்காவின் விதிமுறைகளை மீறிவிடுகிறார்கள். ஆனால், சார்லி மட்டும் நிபந்தனைகளை முறையாகக் கடைப்பிடிக்கிறான்.
 
முடிவில் அந்த சாக்லேட் பேக்டரியின் உரிமையாளர் வில்லி வோங்கா, நேர்மையும் எளிமையும், பொறாமையற்ற மனதும் கொண்ட சார்லியைப் போன்ற ஒருவனைத் தேடியே… இந்தப் பரிசுப் போட்டி அறிவிக்கப்பட்டதாகச் சொல்லி, அவனையே தனது பேக்டரியின் அடுத்த வாரிசாக அறிவிக்கிறார்.
 
சாக்லேட் பேக்டரி என்பது இங்கே வாழ்க்கையின் குறியீடு போல சுட்டிக் காட்டப்படுகிறது. நேர்மையும், உறுதியும், தன்னம்பிக்கையும் கொண்ட ஒருவன் முடிவில் வெற்றி பெறுவான் என்பதைச் சுவாரஸ்யமான கதை மூலம் 'ரோல் தால்' விவரிக்கிறார்.
'
ரோல் தால்' ராணுவத்தில் பணியாற்றியவர். இவரது கதைகள் உலகெங்கும் சிறுவர்களால் கொண்டாடப்படுகின்றன. நகைச்சுவையே அவரது முக்கிய பலம். உலகெங்கும் சிறுவர்களைச் சந்தோஷப்படுத்திய ரோல் தாலின் சொந்த வாழ்க்கை துயரங்களால் நிரம்பியது.  
 
அவரது மகள் ஒலிவியா ஏழு வயதில் இறந்து போனாள். மகன், விபத்தில் மரணம் அடைந்தான். மனைவியோ ரத்தக் கசிவு நோயால் அவதிப்பட்டார். எட்டுக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் டாலுக்கும் நடைபெற்றிருக்கின்றன. இத்தனை நெருக்கடிகளுக்கிடையிலும் அவர் குழந்தைகளைச் சந்தோஷப்படுத்தத் தொடர்ந்து கதைகள் எழுதிக் கொண்டேயிருந்தார்.
 
'ரோல் தால்' எழுதியிருக்கும் புத்தகங்கள் அனைத்தும் முழுமையாகத் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும். கதைகளை விரும்பும் சிறுவர்களுக்கு 'ரோல் தால்' புத்தகங்களை அறிமுகப்படுத்தினால் நிச்சயம் பிடிக்கும்.
 
நேரம் இருப்பவர்கள் தங்களுக்கு விருப்பமான கதைகளைப் படித்தோ, தெரிந்த கதைகளைச் சொல்லியோ யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யலாம். 10 பேர் தினமும் ஒரு கதை வீதம் பதிவேற்றம் செய்தால்போதும். ஒரு வருஷத்துக்குள் 3,650 கதைகள் இணையத்தில் பதிவேற்றமாகிவிடும். அதன் பிறகு உலகின் எந்த மூலையில் தமிழில் கதைகள் கேட்க விரும்புகிற குழந்தை இருந்தாலும் யூ டியூப் வழியாக இந்தக் கதைகளைக் கேட்கலாம்தானே?!
 
 
இந்தப் புத்தாண்டில் இந்த எளிய முயற்சியையாவது நாம் தொடங்க லாமே!
 
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com