Tuesday, February 3, 2015

பிளஸ் 2 பொதுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களுக்கான பொறுப்பு ???



பிளஸ் 2 தேர்வுகள் நெருங்கி வருகின்றன. அதற்கு முன்னதாக பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு எளிமையாக ஒரு தேர்வு...

உங்கள் குழந்தைக்கு பிடித்த உணவு எது?
பிடித்த உடை எது?
பிடித்த விளையாட்டு எது?
பிடித்த பாடம் எது?
பிடித்தமான ஆசிரியர் யார்?
உங்கள் குழந்தை என்னவாக விரும்புகிறார்?

மேற்கண்ட ஆறு கேள்விகளில் ஐந்து கேள்விக்கு பதில் தெரியும் எனில் நீங்கள் தேர்ச்சி அடைந்துவிட்டீர்கள். தேர்ச்சி அடையவில்லையா? ஒன்றும் பிரச்சினை இல்லை. இப்போதுகூட உங்கள் குழந்தையிடம் கேட்டு அறிந்துகொண்டு தேர்ச்சி பெறுங்கள்.

சரி, விஷயத்துக்கு வருவோம். வரும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் உங்கள் மகன்/மகள் பெறும் மதிப்பெண்களுக்கான பொறுப்பு அவர்களுக்கானது மட்டும் அல்ல... அது ஆசிரியர்களுக்கு நிகராக உங்களையும் சார்ந்தே உள்ளது. இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வை எதிர்கொண்டுள்ள ஒவ்வொரு வீடும் பரபரப்பு களமாக மாறியுள்ளது. தேர்வைச் சுற்றியே பெற்றோர், குழந்தைகளின் கவனம் சுழன்று கொண் டிருக்கும் தருணம் இது. இப்போது நிதானமாக பெற்றோர்கள் யோசித்து, ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும்.

இந்த போட்டியில் மூன்று தரப்பிலி ருந்து உங்கள் குழந்தை அழுத்தங்களை எதிர்கொள்கிறது. 1. பெற்றோர் 2. பள்ளி நிர்வாகம் 3. சமூகம். உங்கள் குழந் தையின் பலம், பலவீனம், எதிர்பார்ப்பு, கோபம், ஆனந்தம், ஆத்திரம் உள்ளிட்ட சகல குணங்களை அறிந்து ஏற்றுக் கொண்டிருக்கும் பெற்றோரால் மட்டுமே மேற்கண்ட மன அழுத்தத்தை நேர்மறை மன அழுத்தமாக, ஆரோக்கியமான மன அழுத்தமாக உங்கள் குழந்தையின் மீது செலுத்த முடியும். ஏனெனில் சமூகத்துக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் அந்த பொறுப்புகள் கிடையாது. பொரு ளியல் அல்லது ஏதோ ஓர் எதிர்பார்ப்பு அடிப்படையில் அவை இயங்குகின்றன.

பெரும்பாலான பெற்றோர் தங்களின் குழந்தைகள் முதல் மதிப்பெண் பெற வேண்டும்; மருத்துவராக அல்லது பொறியாளராக வர வேண்டும் என்று ஆசை கொண்டுள்ளனர். இது இயலும் அல்லது இயலாது என்பது அடுத்த விஷயம்.

ஆனால், ஒவ்வொரு குழந்தையும் தங்களிடம் இருக்கும் திறமைக்கு ஏற்ப மட்டுமே மதிப்பெண் பெறும் என்கிற அடிப்படை உண்மையை பெற்றோர் உணர வேண்டும். படிப்பு வராத குழந் தைக்கு ஓவியத்திலோ அல்லது வேறு ஏதோ ஒன்றிலோ அபரிமிதமான தனித் திறமை இருக்கும். திறமையே இல்லாத குழந்தை என்று யாரும் கிடையாது.

ஆனால், அதனை கண்டறிவதுதான் பெற்றோரின் சாமர்த்தியம். குழந்தை யின் திறமை குறித்து தெரிந்து கொள்ள முடியாத பெற்றோர், உங்கள் பிள்ளையின் நண்பர்கள், நெருங்கிப் பழகும் உறவினர்கள், குழந்தையின் ஆசிரியர் ஆகியோரிடம் கேட்டு அறிந்து கண்டறிய வேண்டும். அந்த தனித் திறமைக்கு ஏற்ற வகையிலான துறை சார்ந்த பணிக்கான பாடப் பிரிவுகளை தேர்வு செய்ய பெற்றோர் உதவ வேண்டும்.

ஆனால், மேற்கண்ட விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு தடையாக இருப்பது பெற்றோரின் சுயநலமே. விருப்பத்தை, நிறைவேறாத அல்லது தங்களால் சாதிக்க இயலாத ஒன்றை குழந்தையின் தலையில் சுமத்துவதே நடைமுறையில் அதிகமாக இருக்கிறது. உங்கள் நிறைவேறாத ஆசைகளின் வடிகால் அல்ல உங்கள் பிள்ளைகள். உங்களின் நிறைவேறாத கனவுகளை கண்டடையும் தேவதூதர்களும் அல்ல அவர்கள். அவர்களுக்கு உங் களைப் போன்றே சுயமான ஆசைக ளும் கனவுகளும் கொண்ட சராசரி மனிதர் கள்தான். அவர்களை சூப்பர் மேன்களாக கற்பிதம் செய்துகொள்ளாதீர்கள். எனவே, ஒருபோதும் உங்கள் பிள்ளையின் விருப்பத்துக்கு மாறான படிப்பை, தொழிலை உருவாக்கி கொடுக்கும் சூழலை ஏற்படுத்திவிட வேண்டாம்.
மிரட்டல் அல்லது கட்டாயப்படுத்தும் விதத்தில் மதிப்பெண் இலக்கு நிர்ண யிக்கக் கூடாது. இலக்கு அடைய முடியாதபட்சத்தில் விபரீதமாக எதையும் செய்யத் துணியும் பதின்ம வயதில் உங்கள் பிள்ளை இருக்கிறார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக தேர்வுக்கு தயாராகி வரும் குழந்தைகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். இரவு 10 மணிக்கு படுக்கைக்கு குழந்தைகளை அனுப்பி அதிகாலை 5 மணிக்கு எழுப்பி படிக்க வையுங்கள். ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் ஓய்வு அவசியம்.

தேர்வு சமயத்திலும்கூட குழந்தை கள் தினமும் அரை மணி நேரமாவது அவர்கள் விரும்பிய இசை, தொலைக் காட்சி, விளையாட்டு உள்ளிட்ட பொழுது போக்குகளில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அப்போது தான், கவனக்குறைவின்றி (Lack of concentration) தேர்வுக்கு அவர்க ளால் தயாராக முடியும்.

பெற்றோரின் அன்பும் அரவ ணைப்புமே குழந்தைகளின் தேர்வு பயத்தை போக்கும் அருமருந்து. தினமும் குழந்தைகளை பத்து நிமிடம் தியானப் பயிற்சி எடுக்கச் செய்யலாம்.

தியானத்தில் இருக்கும் போது, தேர்வு அறையில் பதற்றமின்றி அமர்ந்து இருப்பதை போன்றும், கேள்வித்தாள் எளிமையாக இருப்பதாகவும், நல்ல முறையில் தேர்வு எழுதி முடிப்பதை போலவும் அழகான கற்பனை உலகை நினைவில் நிறுத்த கற்றுக்கொடுங்கள். இதனால், உளவியல் ரீதியாக மனதில் நேர்மறை சிந்தனை அதிகரித்து, நல்ல முறையில் தேர்வுக்கு தயாராக முடியும்.

கட்டாயம் தவிர்க்க வேண்டிய வசனங்கள்...

 "உனக்கு என்ன வேண்டுமோ கேட்டு வாங்கிக்கொள்... எது வேண்டுமானாலும் செய்துகொள். மதிப்பெண் மட்டும் வாங்கிவிடு..." ரீதியிலான வசனங்களை தவிர்க்கவும். காசு கொடுத்து வாங்குவது அல்ல மதிப்பெண்கள்!

 அவரைப் போல வரவேண்டும்; இவரைப் போல வர வேண்டும் என்று ஒப்பிடாதீர்கள். ஏனெனில் உங்கள் பிள்ளை என்பவர் உங்கள் பிள்ளை மட்டுமே. நீங்கள் குறிப்பிடும் அவரோ இவரோ அல்ல.

 "மதிப்பெண் குறைவாக எடுத்துவிட்டால் எங்களால் வெளியே தலைகாட்ட முடியாது..." என்று சொல்லி உங்கள் பிள்ளையின் தனிப்பட்ட திறன் சார்ந்த விஷயத்தை சமூகம் சார்ந்த பிரச்சினையாக உருவாக்காதீர்கள்.

 "நீ எடுக்கும் மதிப்பெண்ணில்தான் நம் குடும்பத்தின் எதிர்காலமே இருக்கிறது..." என்று உங்கள் பொறுப்பை உங்கள் பிள்ளையின் மீது சுமத்தாதீர்கள்.

பேராசிரியர் எஸ்.கதிரவன், உளவியல் துறைத் தலைவர், பெரியார் பல்கலைக்கழகம்



நேரத்தை நேர்த்தியாக திட்டமிடுங்கள்!

கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி

படிப்பது, புரிந்து கொள்வது, சூத்திரங்களை மனப்பாடம் செய்வது - இவை எல்லாம் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியம் நேரத்தை நேர்த்தியாக திட்டமிடுவது. பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு சாதாரணமாக படிக்கும் ஒரு மாணவர்கூட நேரத்தை நேர்த்தியாக வடிவமைத்து படித்தால் எதிர்பார்த்ததை விட கூடுதல் மதிப்பெண்கள் பெறலாம்.

இன்ன பாடத்துக்கு இத்தனை நாட்கள் என ஒதுக்கீடு செய்து படிக்கலாம். இதற்காக ஓர் அட்டவணையை தயார் செய்து உங்கள் டெஸ்க்கில் ஒட்டி வைத்துக்கொள்ளுங்கள். இந்தாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதத்துக்கு ஏழு நாள் விடுமுறை உள்ளது. இந்த அவகாசத்தில் உண்மையிலேயே கணிதத்தை கரைத்துக் குடிக்கலாம்.

பொதுவாக ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு, ஹிந்தி ஆகிய மொழிப் பாடங்களுக்கு தலா இரு நாட்கள் ஒதுக்கிக்கொள்ளுங்கள். இயற்பியல், வேதியியல், உயிரியல், கணக்குப் பதிவியல், வணிகவியல் ஆகிய பாடங் களுக்கு தலா நான்கு நாட்கள் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். மீதி உள்ள நாட்களை எந்த பாடத்துக்கு ஒதுக்கி படிக்க வேண்டும் என்பதுதான் இந்த திட்டமிடுதலில் முக்கியமான விஷயம்.

உதாரணத்துக்கு, மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் உயிரியலுக்கு கூடுதலாக ஒருநாளை எடுத்து படிக்கலாம். ஏனெனில், மருத்துவ படிப்புக்கு கடும் போட்டி நிலவி வருவதால், உயிரியல் பாடத்தில் பெறும் மதிப்பெண் முக்கியத்துவம் வாய்ந்தது. அதேபோல, பிற பிரிவு மாணவர்களும், அவர்கள் படிக்க விரும்பும் மேற்படிப்புக்கு ஏற்ற பாடத்துக்கு ஒருநாள் கூடுதலாக ஒதுக்கி படிக்க வேண்டும். இதுதவிர மீதம் உள்ள நாட்களில், எந்தெந்த தேர்வுக்கு இடையே விடுமுறை இல்லாமல் தேர்வு வருகிறது என்பதை பார்த்து, அந்த தேர்வுக்கான பாடத்தை படிக்க கூடுதல் நாட்களை ஒதுக்கலாம்.

ஆண்டுதோறும் பொதுத் தேர்வில், கடைசி தேர்வுக்கு தயாராவதில் மாணவர்கள் அக்கறை காட்டுவதில்லை. முந்தைய தேர்வுகள் எழுதிய களைப்பில், நாளை முதல் பள்ளி நாட்கள் நிறைவடைகிற உற்சாகத்தில் கொண்டாட்டம் மற்றும் அலட்சியம் கலந்த மனோபாவத்தில் இறுதித் தேர்வை எதிர்கொள்கின்றனர். இறுதித் தேர்வு என்பது இறுதிப் போட்டி போன்றது. கடைசி நேர கட் ஆஃபை நிர்ணயிப்பதில் இறுதித் தேர்வுக்கும் பங்கு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். எனவே, இறுதித் தேர்வில் அலட்சிய போக்கை கைவிட்டு, அந்த தேர்வுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து, ஆர்வமுடன் படித்தால் கூடுதல் மதிப்பெண் பெறலாம்.

தேர்வுக்கு தயாராகி வரும் நீங்கள் இரவு வழக்கமாக எத்தனை மணிக்கு படித்துவிட்டு படுக்கைக்கு உறங்கப் போவீர்கள் என்கிற நேரத்தை வரையறுத்துக்கொள்ள வேண்டும். வழக்கமாக நீங்கள் இரவு உறங்கச் செல்லும் நேரம் 10 மணி என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், தேர்வுக்காக ஒரு மணி நேரம் கூடுதலாக செலவிடு கிறீர்கள். அதாவது, இரவு 11 மணிவரை படித்துவிட்டு உறங்கச் செல்கிறீர்கள். அவ்வாறு எனில் இரவு 10 மணியுடன் படிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் ஃபார்முலா, வரைபடம், ஜாமெட்ரி என எழுத்து சார்ந்த பயிற்சியில் ஈடுபட வேண்டும். ஏனெனில், வழக்கமாக இரவு 10 மணிக்கு தூங்க பழக்கப்பட்ட நிலை யில், அந்த நேரத்துக்கு கண்கள் சொருக ஆரம்பித்துவிடும். இதனை தவிர்க்கவே, எழுத்து பயிற்சியில் ஈடுபடுவது அவசியமாகிறது.

அதேபோல் நள்ளிரவு, அதிகாலை என நேரம் மாறி மாறி படிப்பதால் உடல் நலம் கெடும். விடிய விடிய பிரமாதமாக படித்தோம், சாதிப்போம் என்பதெல்லாம் மாயை. எனவே, மனதை லேசாக வைத்துக் கொண்டு, மூளைக்கும், கண்களுக்கும் நல்ல ஓய்வு கொடுத்து, ரிலாக்ஸாக படித்தால் போதுமானது. எனவே, இரவு நேர படிப்பு முறையில் நேரம் ஒதுக்கீடு முக்கியத்துவம் பெறுகிறது.
தேர்வு அறைக்கு கண்டிப்பாக கையில் கடிகாரம் கட்டிக்கொண்டு போக வேண்டாம். அடிக்கடி மணி பார்த்து தேவையில்லாத பதற்றம் அடைவார்கள். தேர்வுத் தாளில் அலங் காரம், ஜோடனை செய்வதை தவிர்க்க வேண்டும். கேள்விக்கான பதிலை முதலில் எழுதுங்கள். முதல் பிரிவில் உள்ள அனைத்து கேள்வி-பதிலும் எழுதி முடித்த பின்,நேரம் இருந்தால் மட்டுமே நீங்கள் எழுதிய பதிலுக்கு தேவையான இடங்களில் அடிக்கோடு இடுவதையும், வண்ணம் தீட்டுவதையும் வைத்துக் கொள்ளலாம்.

ஒரு கேள்விக்கான பதிலை எழுதி முடித்த பின்பு, இரண்டு வரிகள் எழுது வதற்கு தேவையான இடங்களை விட்டு, அடிக்கோடு போடுங்கள். ஏனெ னில், கடைசி தருணத்தில் முதலில் எழுதிய பதில்களுக்கான முக்கிய குறிப்பு கள் மனதில் தோன்றும். அப்போது, ஏற்கெனவே விட்டு வைத்துள்ள இடத்தில், பதிலுக்கான முக்கிய குறிப்பு களை எழுத வசதியாக இருக்கும்.

கணிதம், அறிவியல் பாடங்களில் வரைபடங்கள் மிகவும் நேர்த்தியாகவும், கோடு பிசகாமலும் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. வரைபடத் துக்கான தோற்றம், வரைபடம், குறிப்பு கள் சரியானதாக இருந்தாலே முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என்கிறது விதிமுறை. அதற்காக கிறுக்கி வைக்க வேண்டும் என்பதில்லை. கட்டம் கோணலாக இருக்கிறதே என்று மதிப்பெண்கள் குறைக்க போவ தில்லை. ஸ்கேலை வைத்துக் கொண்டு நேராக கோடு போடுகிறேன் என்று நேரத்தை வீணடிக்க வேண்டாம். கையாலே கோடு போட்டு, சரியான விடை எழுதுங்கள்.

தேர்வு அறையை விட்டு வெளியே வந்ததும், அடுத்த தேர்வுக்கான பாடத்தை படிப்பதில் மட்டுமே அக்கறை செலுத்த வேண்டும். நடந்து முடிந்த தேர்வை பேசி பயனில்லை. நண்பர்களுடன் விவாதம் செய்து நேரத்தை வீணாக் காதீர். தேர்வு ஆரம்பித்து முடியும் வரை ஒவ்வொரு நொடியும் உங்கள் பாடத்துக்கானதாகவும், தேர்வுக்கானது மாக பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் எதிர்கால வாழ்க்கை பிரகாச மாக அமையும்!



பாடங்களை இனிக்கவைக்கும் கற்பனைச் சுற்றுலா!

கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி

வாழ்க்கையில் மனதுக்குப் பிடித்தமான விஷயங்கள் நடந்துவிட்டால், உள்ளம் கொண்டாடும். விருப்பம் இல்லாத விஷயத்தை எதிர்கொள்ள நேர்ந்தால், மனதில் குழப்பங்கள் மூளும். இது அடிப்படை உளவியல். படிப்பை நீங்கள் பிடித்தமான விஷயமாக நினைத்தால் இந்த குழப்பங்கள் இல்லை. இதற்கு ஒரு சுலபமான, எளிமையான தீர்வு உள்ளது.

உங்கள் படிப்பைப் பற்றிய நேர்மறை கற்பனை உலகுக்கு அடிக்கடி ஓர் இன்பச் சுற்றுலா சென்று வாருங்கள். இதற்கு பணம் தேவையில்லை. நண்பர்களும் தேவையில்லை. உளவியலில் இதை ‘மென்டல் டூர்’ (Mental Tour) என்பார்கள். அதாவது, நன்றாக படித்து, நிறைய மதிப்பெண்கள் பெற்று, உங்களுக்குப் பிடித்தமான துறையில் பிடித்தமான வேலையில் இருக்கிறீர்கள். அல்லது சுயதொழிலில் பெரிய அளவில் சாதனை செய்துகொண்டிருக்கிறீர்கள். இப்படிப்பட்ட கற்பனை உலகில் அடிக்கடி உலவுங்கள். பின்பு படித்தால், எந்த பாடமும் பனங்கற்கண்டாக இனிக்கும். இது உளவியல் உண்மை!

தேர்வு காலத்தில் காலடி எடுத்து வைத்துள்ள மாணவர்கள் கண் விழித்துப் படித்துவிட்டு, படுக்கைக்குச் சென்றவுடன் ‘உடனே தூக்கம் வராதா’ என ஏங்குவர். ஏனெனில் அல்ஜீப்ராவும் கெமிஸ்ட்ரி பார்முலாக்களும் மூடிய கண்களுக்குள் அவ்வப்போது வந்து மன இறுக்கத்தை ஏற்படுத்தும். எனவே, சூத்திரம் மனப்பாடம் செய்வதை, படுக்கைக்குச் செல்வதற்கு 2 மணி நேரம் முன்பாக நிறுத்திக்கொள்ளவும்.

நல்ல மதிப்பெண் மூலமாகவே தரமான கல்லூரியில், விரும்பிய மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். இது உண்மைதான். அதே நேரம், மன அழுத்தத்துக்கான முக்கியக் காரணமும் இதுதான். ‘மதிப்பெண் குறைந்தால் டாப்10 கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் போய்விடுமோ’ என்ற அச்சம் இப்போது தேவையில்லாத ஒன்று. டாப் 10 கல்லூரிகள் என்பதில் வணிகம் உட்பட பல்வேறு சூட்சுமங்கள் இருக்கின்றன. அதற்குள் விரிவாக செல்லத் தேவையில்லை. உண்மையில் இங்கு டாப் 100 கல்லூரிகள் உள்ளன. அதில் சேர்ந்து திறமையை நிரூபிப்போம் என்ற மனப்போக்கை வளர்த்துக்கொள்ளுங்கள்.

மன அழுத்தத்துடன் தேர்வு எழுதச் செல்பவர்கள், கவனக்குறைவுக்கு ஆட்பட்டு சிறு பிழைகளை செய்து அதிக மதிப்பெண்களை இழக்கின்றனர். இதை ஒவ்வோர் ஆண்டும் கண்கூடாகப் பார்த்துவருகிறேன். குறிப்பாக சிலருக்கு, கடந்த ஓராண்டாக இல்லாத மன அழுத்தம் திடீரென தேர்வுக்கு ஒரு மாதம் முன்பாக தொற்றிக்கொள்ளும். பதற்றம் அதிகரிக்கும். இதயம் வேகமாக துடிக்கும். உள்ளங்கை, உள்ளங்கால் வியர்க்கும். உடல் சூடாகி லேசான காய்ச்சல் போல உணர்வார்கள். பார்வையும்கூட லேசாக மங்கும். நாக்கு வறளும். படித்தது மொத்தமும் மறந்துபோகும். ஆண்டுக்கு 10 மாணவர்களை இப்படி சந்திக்கிறேன். தவறு மாணவர்கள் மீது அல்ல. அதிகமான அழுத்தத்தை, எதிர்கால பாரத்தை ஓராண்டாக அவர்கள் மேல் சுமத்தியவர்கள் மீதுதான் தவறு.

இதுபோன்ற சூழலில், மாணவர்கள் பயப்படக்கூடாது. பதற்றம் ஏற்பட்டால் எல்லோருக்குமே உடலில் அட்ரீனல், கார்டிசால் ஆகிய ஹார்மோன்கள் சுரப்பது வழக்கம். அவை சுரப்பதால் ஏற்படும் உடலியல் ரீதியான பிரச்சினைகள்தான் உங்களுக்கும் ஏற்படுகின்றன. உங்களுக்குத் தெரிந்த மனநல மருத்துவரிடம் கவுன்சலிங் பெறுவதன் மூலம் ஓரிரு நாட்களில் வெகு சுலபமாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.

எதிர்காலத்தை நன்கு திட்டமிட்டு, லட்சியத்தை அடையும் நோக்கத்துடன் நடந்தால் வீண் குழப்பங்கள், பதற்றம், அச்சம் ஆகிய அனைத்தையுமே தவிர்க்கலாம். அவசரமாக படிப்பது, புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்வது, தெரியாத வினா-விடையையே நினைத்துக்கொண்டு இருப்பது, பாடத்திட்டத்தை விட்டு வெளியே இருந்து கேள்வி வருமா என சந்தேகம் கொள்வது ஆகிய வீண் சந்தேகங்கள், குழப்பங்களை தவிர்க்க வேண்டும். இவையும் மன அழுத்தத்துக்கு முக்கியக் காரணிகள்.

அதேபோல, மாணவர்கள் பெரும்பாலும் ஒரு மதிப்பெண், 3 மதிப்பெண் கேள்விகளில் சிறு தவறு செய்கின்றனர். இவர்கள் என்னிடம் வந்து, ‘நன்றாக தெரிந்த பதில். எப்படி தவறு செய்தேன் என்றே தெரியவில்லை’ என்பார்கள். காரணம், மன அழுத்தம் மட்டுமே. எனவே, தங்கள் பிள்ளையை மன அழுத்தம் வாட்டுகிறதா என்பதைக் கண்டறிவது பெற்றோரின் முக்கியக் கடமை.

மாணவர்கள் பெரும்பாலும் இடத்தை விட்டு நகராமல் ஒரே இடத்தில் அமர்ந்து படிக்கிறார்கள். அதை தவிர்க்கலாம். வீட்டிலேயே மாடியில் சில மணி நேரம் படிக்கலாம். தோட்டம் இருந்தால் அங்கு சிறிது நேரம் படிக்கலாம். பாதுகாப்பான, கவனத்தை சிதறடிக்காத பூங்காக்கள் அருகில் இருந்தால், அவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இவை எல்லாம் படிப்பு தொடர்பான மன அழுத்தங்களைப் போக்கும் உத்திகள். எங்கு படித்தாலும், அக்கம்பக்கத்தில் வேடிக்கை பார்க்காமல் உங்கள் கவனம் படிப்பில் மட்டுமே இருக்கவேண்டும்.

ஒரே பணியில் வெகு நேரம் கவனம் செலுத்துவது கடினம் என்பதால் மனதை மாற்றுச் சூழலுக்கு கொண்டு செல்வது மனதை சமநிலைப்படுத்தும். மனச் சமநிலையுடன் படிக்கும் போது தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்த்துக்கள்!

இவை எல்லாம் முக்கியம்..

# வினா வங்கி மற்றும் பாடப் புத்தகத்தில் இருந்தே 80 சதவீத கேள்விகள் கேட்கப்படுவதால், அதை நன்றாக படித்து வைத்துக்கொள்ளுங்கள்.

# நன்றாக படித்த பாடங்களை ஒருமுறைக்கு 2 முறை எழுதிப் பாருங்கள். 20 நிமிடம் படித்தால், 10 நிமிடம் அதை எழுதவேண்டும்.

# மாதிரி தேர்வில் செய்த தவறுகளை பட்டியலிட்டு, அதில் செய்யவேண்டிய திருத்தங்களுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். மாதிரி தேர்வில் சாய்ஸில் விட்ட கேள்விகளை அக்கறை எடுத்துப் படித்து, எழுதிப் பாருங்கள்.

# வகுப்பில் எழாத பாட சந்தேகங்கள், படிக்கும்போது எழலாம். உடனே ஆசிரியரை அணுகி தீர்வு காணுங்கள்.

# எல்லாவற்றையும்விட முக்கியம்.. படிப்பையும் தேர்வையும் தாண்டி மிகப் பெரிய உலகம் ஒன்று இருக்கிறது. அதை மனதில் நிலைநிறுத்துங்கள். வெற்றி உங்களுக்கே!