Thursday, February 19, 2015

பிளஸ்-2 முடித்துவிட்டு நேரடியாக எம்.எஸ்சி - ஒரு சிறப்பம்சம்

பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்பில் சேருவார்கள். மேற்படிப்பு படிக்க விரும்பினால் முதுகலைப் படிப்புக்கு விண்ணப்பிப்பார்கள்.

ஆனால், பிளஸ்-2 முடித்துவிட்டு நேரடியாக எம்.எஸ்சி. படிக்கவும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. 'நெஸ்ட்' எனப்படும் சிறப்பு நுழைவுத்தேர்வு (National Entrance Screening Test-NEST) எழுதித் தேர்வு பெற்றால் அந்த வாய்ப்பைப் பெறலாம். அதோடு மாதம்தோறும் ரூ.5 ஆயிரம் தவித்
தொகையையும் பெறலாம்.
எங்கு படிக்கலாம்?
 
மத்திய அரசால் அகில இந்திய அளவில் இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. நுழைவுத் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்கள் 5 ஆண்டு காலத்துக்கு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்பில் சேரலாம். இதில், அடிப்படை அறிவியல் படிப்புகளான இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் எனப் பிடித்தமான பாடத்தைத் தேர்வுசெய்துகொள்ளலாம்.
இந்தப் படிப்பை ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திலும் (National Institute of Science Education and Research-NISER), மும்பை பல்கலைக்கழகத்தின் அணுசக்தித் துறையிலும் படிக்கலாம்.
 
தேர்வு எப்போது?
 
இந்த ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்பதில் ஒரு சிறப்பம்சம் இருக்கிறது. இதில் சேருவோருக்கு மத்திய அரசின் 'இன்ஸ்ஃபயர்' திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் கல்வி உதவித்தொகை கிடைக்கும். 2015-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நெஸ்ட் நுழைவுத்தேர்வு வருகிற மே மாதம் 30-ம் தேதி நடைபெற உள்ளது.
நுழைவுத் தேர்வில் பங்கேற்க 2013, 2014-ம் ஆண்டுகளில் பிளஸ்-2 முடித்தவர்களும், தற்போது பிளஸ்-2 படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தகுதிகள் என்ன?
 
நுழைவுத் தேர்வில் பங்கேற்க 1995 ஜூலை 15 அன்றோ அல்லது அதற்குப் பின்போ பிறந்தவராக இருக்க வேண்டும். எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை உண்டு. பிளஸ்-2-வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். மேற்சொன்ன இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் என்றால் 55 சதவீத மதிப்பெண்கள் போதுமானவை.
எப்போது விண்ணப்பிக்கலாம்?
 
தகுதியுள்ள மாணவர்கள் மார்ச் 7-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப நடைமுறை, தேர்வுமுறை, முந்தைய ஆண்டு வினாக்கள் உள்ளிட்ட விவரங்களை www.nestexam.in என்ற இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
 
 
 
.