Monday, February 16, 2015

பெண்களே மது அருந்தும் ஆண்களை ஏற்றுக்கொள்ளாதீர்கள்!

டலுக்கும் உள்ளத்துக்கும் நலம் சேர்க்கும் நிகழ்ச்சி 'தமிழ் மண்ணே வணக்கம்.' ஜூனியர் விகடனும், தி சென்னை ஸ்கூல் ஆப் பேங்கிங் அண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனமும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள ஸ்ரீசுப்ரமணியா பொறியியல் கல்லூரியில் அரங்கேறியது.
 

முதலில் மருத்துவர் கு.சிவராமன். ''நாம் உண்ணும் உணவானது உடலுக்கு ஆரோக்கியமானதாகவும், வரக்கூடிய நோய்களில் இருந்து பாதுகாப்பதாகவும், இருக்கின்ற நோய்களை குணப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். திருக்குறளில் மருந்து எனும் அதிகாரத்தில் ஏழு பாடல்களை உணவுக்கு மட்டுமே பாடியிருக்கிறார் என்றால், வள்ளுவர் காலத்தில் இருந்தே உணவு என்பது எவ்வளவு மகத்துவமான மருந்தாக இருந்தது என்பதை உணர வேண்டும்.

ஒரு காலத்தில் உணவுகளில் காரம் என்றால் அது மிளகு மட்டும்தான். '10 மிளகு பாக்கெட்டில் இருந்தால், பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்' என்று பழமொழி உண்டு. அந்த அளவுக்கு மருத்துவக் குணங்கள் நிரம்பியது மிளகு. ஒரு கட்டத்தில் மிளகுக்கு பதில், மிளகாய் பயன்படுத்த ஆரம்பித்தோம். மிளகு போன்ற காரம் கொண்டதால்தான் அது மிளகாய் என்று அழைக்கப்பட்டது. அந்த மிளகாய் நேரடியாகவே புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டது என்பது யாருக்கும் தெரியாது. மிளகாயைத் தவிர்த்து மிளகைப் பயன்படுத்தினால் நமக்கு வரும் பெரும்பாலான நோய்கள் கட்டுப்படுத்தப்படும்.

இன்றைக்கு பெரும்பாலான பெண்களுக்கு ரத்தச்​​சோகை இருக்கிறது. அவர்கள், மாதவிடாய் சமயத்தில் அதிகப்படியான ரத்தத்தை இழக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு இயல்பாகவே இரும்புச்சத்து அதிகம் தேவைப் படுகிறது. இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவு எது தெரியுமா? கம்பு! கம்பங்கூழில் மோர் கலந்து, சின்ன வெங்காயத்துடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எந்த பீட்சாவோ, பர்க்கரோ இந்த கம்பங்கூழுக்கு பக்கத்தில்கூட நிற்க முடியாது.

அதேபோல வைட்டமின் சி நிறைந்த பழம் நம்ம ஊர் நெல்லிக்காய். அதை ரோட்டில் போட்டு விற்கிறார்கள். அதைவிட சத்துக்குறைவான கிவி பழம் கடைகளில் ஏசி ரூமில் வைத்து விற்கிறார்கள். நெல்லிக்காயின் மகத்துவம் தெரியாமல் நாம், கிவி பழத்தை நாடி ஓடுகிறோம். இன்றைய இளைஞர்களை ஆட்டிப்படைக்கும் முக்கியமான விஷயம் மது. சிலர் என்னிடம், 'கொஞ்சமா குடிச்சா ஹார்ட்டுக்கு நல்லதாமே சார்!' என்று கேட்கிறார்கள். ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். ஆறு சதவிகிதம் ஆல்கஹால் உள்ள மதுவைக் குடித்தால் ஆறு வருடத்தில் சங்கு. 40 சதவிகிதம் ஆல்கஹால் உள்ள மதுவைக் குடித்தால் நான்கு வருடத்தில் சங்கு. எப்படி இருந்தாலும் சங்கு சங்குதான்! ஆகவே ஆண்களே மதுவை தவிருங்கள். பெண்களே நீங்கள் மது அருந்தும் ஆண்களை ஏற்றுக்கொள்ளாதீர்கள்!' என்று முடித்தபோது அரங்கம் அதிர்ந்தது.