Tuesday, March 10, 2015

பெண் கொடுக்க மறுத்தால் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவேற்றும் போக்கு அதிகரிப்பு: போலீஸார் எச்சரிக்கை

திருமணத்துக்கு பெண் கொடுத்த மறுத்தால், அந்த பெண்ணின் புகைப்படத்தை ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றும் போக்கு அதிகரித்து வருவதாக போலீஸார் எச்சரித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது பெண்ணுக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர். இவருக்கும், ஓசூரைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. திருமணத்திற்கு முன்பே வரதட்சணை கொடுக்க வேண்டும் என அந்த இளைஞர் கேட்டுள்ளார்.

அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தினர். இதில் ஆத்திமடைந்த அந்த இளைஞர், அந்த பெண்ணுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இது குறித்து பெண் வீட்டார் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

புகாரின்பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே இதே போல் கிருஷ்ணகிரி பகுதியில் பெண் தர மறுத்த காரணத்தால் பேஸ்புக்கில் ஒரு பெண்ணின் படத்தை தவறாக வெளியிட்டதாக போலீஸார் ஒருவரை கைது செய்தனர். தற்போது மீண்டும் நடந்திருப்பதால் பொதுமக்கள், போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

அறிவியல் வளர்ச்சியால் நன்மைகள் அதிகம் இருந்தாலும், அதனை தவறாக பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களால் விபரீதங்கள் நடந்து வருகிறது. பெண்கள் பலர் தங்களது படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர்.

இதேபோல் சிலர் திருமணத்திற்கு முன்பே இருவரும் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். கருத்து வேறுபாடு உள்ளிட்ட காரணங்களால் திருமணம் தடைபடும்போது ஏற்கெனவே எடுத்த படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர். இதனால் அந்தப் பெண்ணுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது.

சமூக வலைதளங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். திருமணம் இறுதி செய்வதற்கு முன்பாக புகைப்படம் எடுப்பது, வெளியே செல்வது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும் என்றனர்.


(Dinamalar 11/3/15)