Thursday, May 28, 2015

புகைத்தலை கைவிடுங்கள்...

புகைத்தலை கைவிடுங்கள்...

புகையிலையின் பயன்பாடு மற்றும் புகைத்தலின் பாதிப்புகள் இந்தியாவில்,சிகரெட், சுருட்டு, பீடி, சிம்லி எனப் பல வகைகளில் புகையிலை புகைக்கப்படுகிறது.பான், வெற்றிலையுடன் சேர்த்து புகையிலை சேர்த்து மெல்லப்படுகிறது.இது தவிர, குட்கான, பான் மசாலா போன்ற போதைப் பொருட்களில் புகையிலை பயன்படுத்தப்படுகிறது.

உலக அளவில் தவிர்கக்கூடிய மரணங்கள் நிகழ்வதற்குப் புகையிலை முன்னணி காரணமாக இருக்கிறது.ஒரு சிகரெட் புகைக்கும்போது, வாழ்வில் தோராயமாக 11 நிமிடங்களை இழக்கின்றனர்.ஒவ்வொரு ஆறு நொடிக்கும் ஒருவர், புகையிலை தொடர்பான பிரச்னை காரணமாக உயிரிழக்கிறார்.புகைப் பழக்கம் இல்லாதவர்களைக் காட்டிலும், புகைப்பவர்களின்  இறப்பு விகிதம் 60- 80 சதவிகிதம் அதிகம்.
ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் இந்தியர்கள் புகையிலை காரணமாக உயிரிழக்கின்றனர். பீடி, சிகரெட் என, எந்த ஒரு புகையிலைப் பழக்கம் உள்ளவர்களும், பழக்கம் இல்லாதவர்களைக் காட்டிலும் 6-10 ஆண்டு முன்னதாகவே உயிரிழக்கின்றனர்.
நிகோடின் புகையிலையில் நிகோடின் என்ற ரசாயனம் உள்ளது. இது போதைக்கு அடிமைப்படுத்தும் தன்மை கொண்டதும், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியதுமாகும். சிகரெட் புகைக்கும்போது, அதில் இருந்து வெளிப்படும் நிகோடினை, நம்முடைய நுரையீரல்கள் மிக வேகமாக ஈர்த்துக்கொள்ளும். அது மூளையை மிக வேகமாக 8 விநாடிகளுக்குள் சென்று சேரும்.

நிகோடின் மூளையைச் சென்று அடைந்ததும், அங்கு சில ரசாயனங்களைச் சுரக்கத் தூண்டுகிறது. உடன் மூளையும் அதைச் செய்கிறது. இதனால், மிகவும் அருமையாக இருப்பது போன்ற மனநிலை ஏற்படுகிறது. இந்தச் செயல்பாடானது, நிகோடின் அளவு மூளையில் குறையத் தொடங்கியதுமே குறைந்துவிடும். இதனால், உடனடியாக அடுத்த சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். மூளை எப்போதும், ரம்யமான அல்லது அருமையான மனநிலையைத் தக்கவைக்க வேண்டும் என்பதற்காக, புகைத்தல் பழக்கத்தை ஏற்கிறது.

புகைத்தலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்

உடல் முழுவதும் பல்வேறு பாதிப்புகள் இதனால் ஏற்படும்.

மூளை: பக்கவாதத்துக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

கண்கள்: ரத்தக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தி, கண்களில் ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்படுத்துகிறது. இதனால்,  பார்வை இழப்பு ஏற்படும்.

வாய்: ஈறுகள் நிறம் மாறும். சுவை மற்றும் வாசனை நுகரும்தன்மை குறையும்.

தோல்: சுருக்கங்கள், சருமம் உலருதல், நிறம் மாறுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

முடி: முடியின் நிறம் மாறுதல் மற்றும் முடி உதிர்தல்.

கைகள்: சிகரெட் பிடிக்க பயன்படும் விரல்கள், நகங்களின் நிறம் மாறும்.

நுரையீரல்: நுரையீரல் வளர்ச்சி குறையும், சுவாசப் பாதை குறுக ஆரம்பிக்கும். நுரையீரல் புற்றுநோய் ஏற்பட 
மிக முக்கிய அல்லது முன்னணி காரணம் சிகரெட் புகைத்தல்தான்.

இதயம்: ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு விகிதம் அதிகரிக்கும். ரத்தக் குழாய்களின் தன்மை கடினமாகும்.
எலும்பு: எலும்பு அடர்த்திக் குறைவு ஏற்படும்.

புகைத்தல் பழக்கத்தை நிறுத்த வழிகள்...

இன்றைய காலக்கட்டத்தில் புகையிலை புகைப்பதை நிறுத்த ஏராளமான வழிகளும் வாய்ப்புகளும் உள்ளன. இவை, அதிகப்படியான பக்கவிளைவுகள் இன்றி சிகரெட்  பழக்கத்தை நிறுத்தவல்லன என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில், நிகோடின் ரீப்பிளேஸ்மென்ட் தெரப்பி (என்.ஆர்.டி) மற்றும் நான்-நிகோடின் டிரக் தெரப்பியும் அடங்கும்.

நிகோடின் ரீப்பிளேஸ்மென்ட் தெரப்பி (என்.ஆர்.டி)

என்.ஆர்.டி-யில் நிகோடின் இருக்கும். ஆனால், சிகரெட்டில் உள்ள அளவுக்கு  இல்லாமல் மிகக்சிறிய அளவில் இருக்கும். என்.ஆர்.டி- மிகக் குறைந்த அளவிலான நிகோடினை அளிக்கிறது. இது, நிகோடின் அளவு குறைவாக இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக நிகோடினே இல்லை என்ற நிலையை உடல் அடைய பெரிதும் உதவியாக இருக்கும். இதன்மூலம், ஒரு கட்டத்தில் புகைப்பதை முற்றிலுமாக நிறுத்த முடியும். என்.ஆர்.டி-யானது கம்ஸ், பேட்ச்சஸ், இனிப்பு, மூக்கில் நுகரும் ஸ்பிரே. மாத்திரை, இன்ஹேலர் எனப் பல வடிவங்களில் கிடைக்கிறது. இவைகளில், நிகோடின் கம் அனைவராலும் விரும்பப்படும் வடிவம் ஆகும்.

நிகோடின் கம்

1984-ம் ஆண்டு உலகச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. நிகோடின் கம் தற்போது இந்தியாவில் 2 மி.கி மற்றும் 4 மி.கி அளவுகளில் கிடைக்கிறது. சிகரெட் புகைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்போது இதை எடுத்துக்கொண்டால், அந்த உணர்வு மறையும். இதன் வெற்றி விகிதம் 50 - 70 சதவிகிதம்.

2 மி.கி கம்மானது, ஒரு நாளைக்கு 20 அல்லது அதற்கு கீழ் புகையிலை புகைப்பவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. 4 மி.கி ஒரு நாளைக்கு 20  மேல் புகைப்பவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. 4 மி.கி நிகோடின் கம் மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

நிக்கோடின் இல்லா  மருந்து தெரப்பிஇதில், புப்ரோபியன்  (Bupropion) மற்றும் வாரெனிக்லைன் (Varenicline)  என்ற அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் சிகரெட் புகைப்பதை நிறுத்த புகைப்பவருக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன.
எப்படிக் கைவிடுவது?

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நீங்கள் செய்யும் மிக நல்ல காரியம், புகைப்பதை கைவிடுவதுதான். ஆனால், இதற்கு மிக அதிக அளவில் மன உறுதி தேவைவப்படும். இதற்கு புகைப்பவரும் அவரது உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் இணைந்து சரியான பாதையில் பயணிப்பது அவசியம். புகைப்பதைக் கைவிட விரும்புகிறவர்கள், ஒரு வல்லுனரின் ஆலோசனைப் பெற்று அதன்படி செய்யலாம்.

புகைப்பதை நிறுத்தும்போது கவனத்தில்கொள்ள வேண்டியவை:

மன உறுதியுடன் இருக்க வேண்டும். என்னால் புகைப்பதை நிறுத்த முடியும் என்று மனப்பூர்வமாக நம்ப வேண்டும்.

ஏன் கைவிட வேண்டும் என்று முதலில் பட்டியல் தயாரித்துக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு... நல்ல ஆரோக்கியம், நமக்கு நெருக்கமானவர்களின் நலன் என்று... இதைத் தினமும் படித்துப் பார்க்க வேண்டும். இது, உங்களின் சிகரெட் பழக்கத்தைக் கைவிட தூண்டுதலாக இருக்கும்.

குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள் என அனைவரிடமும் உங்கள் திட்டத்தைப் பகிர்ந்துகொண்டு, அனைவரது ஒத்துழைப்பையும் பெறுங்கள்... உங்கள் முயற்சி வெற்றிபெற உங்களை ஊக்குவிக்க அவர்களைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

உங்கள் மருத்துவரிடம் இதுபற்றி பேசுங்கள். அவரது ஆதரவையும் வழிகாட்டுதலையும் பெற்று, மிகவும் ஆரோக்கியமான பாதுகாப்பான முறையில் புகைத்தலை கைவிடுங்கள்.

உங்கள் வீடு, வாகனம், வேலை செய்யும் இடம் என எல்லா இடத்தில் இருந்தும் சிகரெட்டைத் தூக்கிஎறியுங்கள். சிகரெட் புகைக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்திடுங்கள்.

என்.ஆர்.டி உதவியை நாடுங்கள். சிகரெட்டுக்கு மாற்றாக நிகோடின் ரீப்பிளேஸ்மென்ட் தெரப்பி சுயிங்கம்மைப் பயன்படுத்துங்கள்.

சிகரெட் பிடிக்காததால் ஏற்படக்கூடிய எரிச்சல், சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற தூண்டுதல், ஓய்வீன்மை போன்றவற்றை என்.ஆர்.டி மூலம் தவிர்த்திடுங்கள். இந்த அறிகுறிகள் சிகரெட் நிறுத்திய முதல் இரண்டு வாரங்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.

ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள். மன அழுத்தம் இன்றி மகிழ்ச்சியாக இருங்கள்.

ஏன் நிறுத்த வேண்டும்?

புகைப்பதை நிறுத்துவதன் மூலம் உங்கள் மற்றும் உங்களுக்கு பிரியமானவர்களின் ஆரோக்கியத்தைக் காக்கறீர்கள். புகைப்பதை நிறுத்திய அடுத்த நிமிடத்தில் இருந்தே மாற்றங்கள் நிகழத் தொடங்கிவிடுகின்றன.

உடனடியாக: உங்களைச் சுற்றியுள்ள காற்று மண்டலம் உங்களுக்கும் மற்றவர்களுக்கு ஆபத்தில்லாததாக மாறுகிறது.

20 நிமிடங்ககளில்: ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு விகிதம் இயல்பு நிலைலக்குத் திரும்புகிறது. உங்கள் கைகள் மற்றும் பாதங்களின் வெப்பநிலை இயல்பு நிலைக்குத் திரும்புகிறது.

8 மணி நேரத்தில்: ரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்சைடு அளவு இயல்பு நிலைக்குத் திரும்புகிறது48 மணி நேரத்தில்: நரம்புகளின் முடிவு பகுதிகள் மறுவளர்ச்சி அடைய ஆரம்பிக்கின்றன. இதனால், சுவைத்தல் மற்றும் வாசனை நுகருதல் தன்மை மீண்டும் அதிகரிக்கிறது.

2-12 வாரங்களில்: சுவாம் மற்றும் ரத்த ஓட்டம் சீராகிறது. நடைப் பயிற்சி எளிமையாகிறது.

1-9 மாதங்களில்: இருமல், சைனஸ் பிரச்னைகள், சுவாசித்தலில் ஏற்பட்ட சிரமம் போன்றவை குறைய ஆரம்பிக்கின்றன.

1 ஆண்டில்: புகைப்பவர்களைக் காட்டிலும் உங்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு பாதியாகக் குறைகிறது.

5 ஆண்டுகளில்: பக்கவாதம், வாய், தொண்டை, உணவுக் குழாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு, புகைக்காதவர்களுக்கு உள்ள நிலையை அடைகிறது.

10 ஆண்டுகளில்: புகைபழக்கமே இல்லாதவர்களுக்கு இணையாக வாழ்நாள் நீட்டிக்ககப்படுகிறது. நுரையீரல் புற்றுநோய்க்கான வாய்ப்பு புகைப்பவர்களைக் காட்டிலும் பாதியாகக் குறைகிறது. உடலில் ஏற்கனவே இருந்த புற்றுநோய் தோற்றுவிக்கும் செல்கள் அகற்றப்படுகின்றன.

வாழ்க்கையைத் தேர்ந்தெடுங்கள்... சிகரெட்டை அல்ல!!

(Sponsored by Nicotex, Cipla)
பத்ம ஸ்ரீ பேராசிரியர் ஆர் குலேரியா,
எம்.டி., டி.எம் (நுரையீரல் மற்றும் உயிர் காக்கும் மருந்து)
பேராசிரியர் மற்றும் தலைவர், நுரையீரல் மருத்துவம் & ஸ்லீப் திரட்டு துறை,
எய்ம்ஸ்