Monday, June 1, 2015

காலம் கடந்த திருமணங்கள் தீர்வு என்ன - டாக்டர். என்.என்.கண்ணப்பன்,

இக்கட்டுரைக்கு உந்துதலாக இருந்தவை, நான் பல ஆண்டுகளாக, பார்த்து, கேட்டவற்றோடு, என்னிடம் ஆலோசனைக்கு வந்த நம்பவே முடியாத, நம் இளவயது தம்பதியர்கள் கொண்டுவந்த மண முறிவு பிரச்னைகள் தான்.


அன்று: பெரும்பான்மையான 99 சதவீத திருமணங்கள் பெற்றோர் கைகாட்டிய பெண் அல்லது ஆண் மகனை பேசி முடித்து நடந்த திருமணங்கள். அந்த திருமணங்களில் 99 சதவீதம் மணமுறிவுகள் ஏற்பட்டதில்லை. அனுசரித்து போனார்கள் அந்த காலத்து சம்பந்திகள், மணமக்கள். திருமணமும் குறிப்பிட்ட வயதிற்குள் நடந்தது.


இன்று: திருமணம் ஆவதற்கே பெரும்பான்மையான பெண்களுக்கு 25 வயதுக்கு மேலும், ஆண்களுக்கு 30 வயதுக்கு மேலும் ஆகிறது. இதற்கான முக்கிய காரணம் இருபாலருமே ஆரம்பத்தில் சொல்வது படிப்பு முடியட்டும்... பின் வேலை கிடைக்கட்டும்... பின் நல்ல வேலை கிடைத்து சொந்த காலில் நிற்க வேண்டும்... என தள்ளி போட்டு கொண்டே வந்து அவர்கள் எண்ணப்படி நல்ல சம்பளம் கிடைப்பதற்குள் மேற்சொன்ன வயதாகி விடுகிறது.


திருமண வயதிலிருக்கும் பெண்களின் எதிர்பார்ப்புகள் 


1. பெண் நன்றாக படித்து விட்டால் (எவ்வளவு வசதி குறைவான வீட்டில் பிறந்திருந்தாலும்) மாப்பிள்ளை தனக்கு மேல் படித்திருக்க வேண்டும் என நினைக்கிறாள்.


2. தன்னை விட அதிக சம்பளம் பெறும் மாப்பிள்ளை தான் வேண்டும் என நினைக்கிறார்கள்.


3. திருப்தியான தாம்பத்தியத்திற்கு உடல்ரீதியாக வயது ஒரு பிரச்னை இல்லை எனினும், சிறிதளவு வயது வித்தியாசம் இருந்தால் கூட அந்த மாப்பிள்ளை அழகு, அந்தஸ்து இருந்தாலும் வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்கள்.


4.பெண்களை பெற்ற 10 சதவீத பெற்றோர் அவர்களின் சம்பள பணத்தை, இன்னும் கொஞ்ச நாள் அனுபவிப்பதற்காக ஜாதகத்தை சொல்லி வரன்களை தட்டிக் கழிக்கின்றனர். இது சம்பந்தபட்ட பெண்ணுக்கே தெரியாமல் நடக்கும். இப்படி சில வீடுகளில் நடக்கிறது.


திருமண வயதில் இருக்கும் ஆண்கள்


1. 10 சதவீத ஆண்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை, வயது தான். அதுவும் அவர்கள் அதிக சம்பளத்தில், சொந்த காலில் நிற்க எடுத்து கொண்ட காலம், திரும்பி பார்க்கும் போது 30 வயதாகி விடுகிறது.


2. அதிக சம்பளம் பெறாத, அதிகம் படிக்காத, வசதியான குடும்பத்தில் பிறக்காத மாப்பிள்ளைகளுக்கு, பெண் கிடைப்பதே அரிதாகிவிட்டது.


3. இப்போது அதிக ஆண், பெண்கள் நிராகரிக்கப்படுவது ஜாதக பொருத்தமில்லை என்ற காரணம் கூறித்தான்.


எவ்வளவோ வயது வித்தியாசத்தில் இரண்டாம் திருமணம் செய்யும் நமது சமூகத்தில், முதல் திருமணத்திற்கு குறைந்த வயது வித்தியாசத்தை ஒரு தடையாக பார்க்கக்கூடாது என்பது என் கருத்து. திருப்தியான தாம்பத்ய உறவும், குழந்தை பேறும் ஆண், பெண் இருபாலரின் உடல் கூறில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


மணமுறிவுக்கு மிகவும் முக்கியமான காரணமாக நான் பார்ப்பது...


1.சம்பந்திகளுக்கு இடையே கவுரவ பிரச்னை.


2. மணமக்களுக்கு இடையே கவுரவ பிரச்னை.


3. அதிகமான எதிர்பார்ப்பு, - அந்த எதிர்பார்ப்பு நடக்கவில்லை எனில், ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி மணமுறிவு.


4. ஒரு பக்கம் தாம்பத்திய உறவு பற்றிய தவறான கருத்துக்கள் கொண்டு அதனால் ஏற்படும் மணமுறிவுகள்.


5. இன்னொரு பக்கம் தாம்பத்திய உறவு பற்றி ஒன்றும் தெரியாமல் ஏற்படும் மணமுறிவுகள்.


ஒரு பக்கம் கடவுளே இல்லை என்போரும் நன்றாக வாழ்கின்றனர். இன்னொரு பக்கம் மிகுந்த கடவுள் நம்பிக்கையோடு இருப்போரும் நன்றாக வாழ்கின்றனர். இன்னொரு பக்கம் என் கடவுள், உன் கடவுள் என அடித்து கொண்டு சாகின்றனர்.


எதுவுமே அளவுக்கு அதிகமானால் நஞ்சு. எனவே ஓர் இறைசக்தி உள்ளது என்ற நம்பிக்கை நமக்கு மனதிருப்தியை கொடுக்கும்.அதோடு நிறுத்தி கொண்டு ஜோதிடம், சாமியார் ஒப்புதல், வயது என்று திருமணங்களை தள்ளி போடாதிருந்தால் முதிர் கன்னிகள், முதிர் பிரமச்சாரிகள் அதிகமாகி கொண்டே போகமாட்டார்கள்.


எது முக்கியம் :வயது, ஜோதிட பொருத்தத்தை விட திருமணத்திற்கு முன்பு கீழ்கண்டவை முக்கியம்:


1. உடல் பொருத்தம்: டாக்டருடன் திருமணத்திற்கு முன் ஆலோசனை.


2. மனப்பொருத்தம்: ஆண், பெண் இருவரும் பேசி அதன் பின் சம்மதம் தருதல், உடல் அழகை விட மன அழகே முக்கியம் என்பதை இருவரும் உணர வேண்டும்.


3. உயரப்பொருத்தம்: கொஞ்சம் உயர வித்தியாசம் இருந்தால் பரவாயில்லை, அதிக வித்தியாசம் இருந்தால் பிராக்டிகலாக சில பிரச்சனைகள் வரும்.


4. தெளிவாக அறிந்து கொள்ளுதல்: திருமணத்திற்கு முன்பே ஆண், பெண் பற்றி (அவர்கள் வசதியை பற்றி அல்ல), அவர் தம் குணம் பற்றி தீர விசாரித்து, நல்ல முடிவெடுப்பது தான் முக்கியம்.மேற்கூறியவை தான் நல்ல திருமண வாழ்வை அமைத்து கொடுத்து, சாகும் வரை தம்பதியருக்கு மகிழ்வான வாழ்க்கையை கொடுக்கும்.


ஒவ்வொரு பெண்ணும் செல்லமாக வளர்ந்த வீட்டை விட்டு போகும்போது, வரப்போகும் மாமியார், மாமனார் தன்னை மகளாக கருதி நடத்துவார்கள் என எதிர்பார்க்கிறாள். அதே போல் ஒவ்வொரு ஆணும் வரப்போகும் தன் மனைவி தன்னை தாய்போல் கவனித்து கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிறான்... இந்த எண்ண ஓட்டங்கள் நல்லவை தானே! இவர்கள் நினைத்தபடி அமைந்து விட்டால் அந்த குடும்பம், 'சூப்பர் குடும்பம்' ஆகிவிடும்.


-- டாக்டர். என்.என்.கண்ணப்பன், மதுரை.

drnnk1@gmail.com