Monday, June 22, 2015

அன்பு வழி!



 
 



பத்து ஆண்டுகளுக்கு முன்பிருக்கும். கண்ணகி சிலையை ஒட்டிய மெரினா கடற்கரையில் காலை 6 மணியளவில் அவர்கள் இருவரையும் பார்த்தேன். பையனுக்கு 8 வயது இருக்கக்கூடும். போலியோ தாக்கி மெலிந்த கால்கள். இடுப்பு ஒடுங்கியிருந்தது. சற்றே பெரிய தலை. சுருங்கி, ஒடுங்கிப் போன முகம்.
 
அவனை தூக்கிக் கொண்டு மணலில் நடந்து வந்து கொண்டிருந்த பெண் ணுக்கு 30 வயது இருக்கலாம். ஏழ்மையான தோற்றம். அடர்நீலவண்ணச் சேலை கட்டியிருந்தார். கைகளில் ஒரு பிளாஸ்டிக் கூடை. அதில் தண்ணீர் பாட்டில், ஒரு துண்டு. அந்தப் பெண் தனது மகனை மணலில் உட்கார வைத்துவிட்டு பத்தடி தள்ளிச் சென்று இரண்டு கைகளாலும் மணலைத் தோண்டி குழி பறித்துக் கொண்டிருந்தார். பையன், தூரத்தில் தெரியும் கடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். பையனைத் தூக்கிக் கொண்டுபோய் இடுப்பளவு உள்ள மணற்குழியினுள் இறக்கி நிற்கவைத்து, சுற்றிலும் மணலைப் போட்டு மூடினார். அந்தப் பையன் எதிர்ப்பு காட்டவே இல்லை.
 
மண்ணில் புதைந்து நின்ற பையன் அம்மாவை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அம்மா அவன் அருகில் சம்மணமிட்டு உட்கார்ந்தபடியே, தனது கையில் இருந்த ஒரு பையைத் திறந்து பைண்டிங் செய்யப்பட்ட ஒரு புத்தகத்தை வெளியே எடுத்து வாசித்துக் காட்ட ஆரம்பித்தார். மணலுக்குள் புதைந்திருந்த பையன் அமைதி யாக அம்மா படிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
 
என்ன செய்கிறார்கள் என்றே எனக்குப் புரியவில்லை. அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
 
அம்மாவின் மெல்லிய குரல் சீராக எதையோ சொல்லிக் கொண்டிருந்தது. அதைக் கேட்க வேண்டும் என்பதற் காகவே அருகில் நடந்து போனேன். அவர் படித்துக் கொண்டிருப்பது ஒரு கதை. அதுவும் பழைய அம்புலிமாமா இதழில் வெளியான கதை.
 
அந்தப் பெண் என் வருகையைக் கண்டதும் படிப்பதை நிறுத்திவிட்டு, என்னை ஏறிட்டு பார்த்தார்.
 
''பையனுக்கு என்ன செய்கிறது?'' எனக் கேட்டேன். ''காலு சரியில்லை. போலியோ வந்து முடங்கிப்போச்சி. அதான் ஈரமணலில் நிற்க வச்சா கால் சரியாகிரும்னு சொன் னாங்க. தினமும் கூட்டிட்டு வந்து நிக்க வைக்கிறேன். ஒரு மணி நேரம் நிக்கணும்ல, அதான் கதை படிச்சிக் காட்டுறேன். அதைக் கேட்டுக்கிட்டே வலியை மறந்து நிற்பான். நானும் செய்யாத வைத்தியமில்லை. காட்டாத டாக்டரில்லை. புள்ள சரியாகலை. பெத்த மனசு கேட்க மாட்டேங்குது.
அதான் கோடம்பாக்கத்துலேர்ந்து தினமும் பஸ் பிடிச்சி பையனைக் கூட்டிட்டு கடற் கரைக்கு வர்றேன். நாலு மாசமா மணல்ல நிக்கிறான். பாவம் பிள்ளை. வலியைப் பொறுத்துகிட்டு நிக்கிறான். வீட்டுக்காரர் பழைய பேப்பர் வியா பாரம் செய்றாரு. நான் அச்சாபீஸ்ல வேலை பாத்தேன். ஆனா, இப்போ முடியலை. வீட்ல வேற ஆள் துணையில்ல. ஒத்த ஆளா இவனை தூக் கிட்டு அலையுறேன். ஆனா, சாமி புண் ணியத்துல என் பிள்ளைக்கு சரியா கிரும்னு நம்பிக்கையிருக்கு…'' என தன்னை மீறி பீறிடும் கண்ணீரைத் துடைத்தபடியே சொன்னார்.
 
அதைக் கேட்டபோது மனது கனத்துப் போனது. ஒரு தாயின் வலியை, வேதனையை எவரால் புரிந்து கொள்ள முடியும்? உலகில் இதற்கு இணையான அன்பு வேறு என்ன இருக்கிறது?
 
''உங்கள் மகனுக்கு நிச்சயம் சரியாகிடும்மா…'' என்று சொன்னேன். அந்தத் தாயின் முகத்தில் நிமிஷ நேரம் மலர்ச்சி தோன்றி மறைந்தது. அந்தப் பையன் தன்னைப் பற்றிப் பேசுவதை விரும்பாதவன் போல, ''படிம்மா…'' என்றான். அந்தத் தாய் மீண்டும் வாசிக்க ஆரம்பித்தாள்.
 
நம்பிக்கைதான் இந்த உலகின் மகத்தான சக்தி! அதை கொஞ்சம் கொஞ்சமாக மகனின் மனதில் அந்தத் தாய் உருவாக்கிக் கொண்டிருக்கிறாள். வேறு எவர் தரும் நம்பிக்கையை விடவும் தாய் தரும் நம்பிக்கை மேலானது. அதுதான் ஒரு மனிதனை வலுவேற்றி வளரச் செய்கிறது!
 
இந்தத் தாயைப் போல எத்தனை பேர் தனது உடற்குறைபாடு கொண்ட, மன வளர்ச்சியில்லாதப் பிள்ளைகளைத் தூக்கிச் சுமக்கிறார்கள்? அவர்கள் நலம் அடைவதற்காக அல்லாடு கிறார்கள்? கண்ணீரால் பிரார்த்தனை செய்கிறார்கள்? அவர்களின் அன்பை விட அரிய பொருள் இந்த உலகில் எதுவுமே இல்லை! கடலை விட்டு மேலேறி சூரியன் அவர்களை பார்த்தபடியிருந்தது. மகன் வலி தாளமுடியாமல் முனங்கினான். அந்தத் தாய் ''பொறுத்துக்கோ, இன்னும் பத்து நிமிஷம்தான்…'' என ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தார்.
 
அந்தக் காட்சியை என்னால் மறக்க முடியவேயில்லை. இந்த நிகழ்வின் வழியே தாயின் அன்பை மட்டுமில்லை; மனிதர்களை ஆற்றுப்படுத்த புத்தகங் கள் துணை நிற்கின்றன என்பதை யும் முழுமையாக உணர்ந்து கொண்டேன். ஆம் நண்பர்களே! வலியை மறக்க செய்யும் நிவாரணியாக கதைகள் இருப்பதை அன்று நேரில் கண் டேன். கதை, கவிதை, இலக்கியம் என்பதெல்லாம் வெறும் பொழுது போக்கு விஷயங்கள் இல்லை. அவை மானுடத் துயரை ஆற்றுப்படுத்துகின்றன. மனிதனை நம்பிக்கைக் கொள்ள வைக்கின்றன. மனித மனதை சந்தோஷம் கொள்ளவைத்து, வாழ்வின் மீதான பிடிப்பை உருவாக்குகின்றன.
 
நீண்ட காலத்துக்குப் பிறகு, அந்தப் பெண்ணையும் அவள் மகனையும் நினைவுபடுத்தியது அருண்ஷோரி எழுதிய Does He Know A Mother's Heart என்கிற புத்தகம் . 40 வருஷங்களாக மனத் துயரை அடக்கி வைத்திருந்த ஒரு தந்தையின் வலியைச் சொல்கிறது இந்தப் புத்தகம்! முன்னாள் மத்திய அமைச்சர், பொருளாதார நிபுணர், பத்திரிகை ஆசிரியர் என பன்முகம் கொண்ட அருண்ஷோரி, தனது மூளை வளர்ச்சி குறைவான மகனை வளர்ப்பதற்காக எப்படி எல்லாம் போராடினார் என்பதை நெகிழ்வாக விவரிக்கிறார்.
 
அருண்ஷோரியின் மகன் ஆதித்யா 'செரிபரல் பேல்சி (Cerebral Palsy)' எனப்படும் உடற்குறைபாடு கொண்டவன். இதன் காரணமாக கைகால்கள் சீராக இயங்கவில்லை. ஆகவே நடக்க இயலாது. பார்வை திறனும், மன வளர்ச்சியும் குறைவு. ஆதித்யாவை அவனது அம்மா அனிதா மிகுந்த அக்கறை எடுத்து கவனித்துக் கொள்கிறார். மருத்துவரீதியாக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் அருண்ஷோரி கவனிக்கிறார். மன வளர்ச்சியற்ற பிள்ளையை தங்களின் காலத்துக்குப் பிறகு யார் கவனிப்பார்கள்? யார் தூக்கிக் குளிக்க வைப்பார்கள்? இந்த உலகம் அவனை எப்படி ஏற்றுக் கொள்ளும் என்ற துயரமே இப்புத்தகம் எழுதக் காரணமாக இருந்திருக்கிறது.
 
ஆதித்யாவின் பிறப்பு, அவனது பிரச்சினைகள், அதை தீர்க்க அவர்கள் மேற்கொண்ட முறைகள் இவற்றை விவரிப்பதுடன்; கடவுள் ஏன் இப்படி குழந்தைகளை சோதிக்கிறார்? உடல்குறைபாடு கொண்ட, மனவளர்ச்சி இல்லாத குழந்தைகளைவுடைய பெற்றோர்களின் வலியை ஏன் இந்த உலகம் புரிந்துகொள்ள மறுக்கிறது? அவர்கள் எப்படி நம்பிக்கை கொள்கிறார்கள்? அதற்கு மதமும், தத்துவமும் எப்படி உதவி செய்கின்றன என்பதை அருண்ஷோரி இதில் விவரிக்கிறார்.
 
'உங்கள் பாவம்தான் பிள்ளைக்கு இப்படி குறையாக வந்துள்ளது…' என யாரோ ஏளனமாக சொல்லும் போது, அது பெற்றோர் மனதை எப்படி பாதிக்கிறது என்பதை கண்ணீர் துளிர்க்க அருண்ஷோரி எழுதியிருக்கிறார்.
 
அருண்ஷோரியின் அரசியல் கருத்துகளுடன் உடன்பாடு இல்லாதவர்களும் கூட இந்தப் புத்தகத்தை படிக்கும்போது, ஒரு தந்தையின் வலியை நிச்சயம் புரிந்துகொள்வார்கள்.

-->