Tuesday, June 30, 2015

என் அனுபவம் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்கட்டும்!

நகைச் சீட்டு... நாணயமற்ற போக்கு!

சிதம்பரத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் மாதாந்தர சீட்டு கட்டி முடித்து, நகை வாங்க கடைக்குச் சென்றேன். நான் சேர்த்த தொகைக்கு நகையைத் தேர்வு செய்துவிட்டு பணம் கட்ட வேண்டிய இடத்தில் பாஸ்புக்கை நீட்டினேன். உடனே ``மேடம், நகையைத் தேர்வு செய்றதுக்கு முன்னாடியே `சீட்டு'ன்னு சொல்லக் கூடாதா?!'' என்று பதறினார் அந்த ஊழியர். உடனே நான், ``எல்லாமே தங்க நகைகள்தானே... சீட்டுக்குனு தனியா தரமில்லாத நகையா தருவீங்களா?'' என்று கேட்டதும், நான் தேர்வு செய்திருந்த அதே நகையைக் கொடுத்து அனுப்பிவிட்டார்.

நான் இப்படி செய்ததற்குக் காரணம்... என் தோழி பெற்ற அனுபவம்தான்! ``முதலில் சீட்டைக் காட்டிவிட்டால் அதுக்குன்னு சில நகைகள் வெச்சிருக்காங்க... எல்லாம் பழைய டிசைன். சீட்டுக்கு இதான் என்று தலையில் கட்டிவிடுவார்கள்'' என்று கூறியிருந்தாள்.

ரொக்கத்துக்கு ஒரு மாதிரி, சீட்டு கட்டி நகை வாங்கு வோருக்கு ஒரு மாதிரி என்று ஏன் இப்படி ஏமாற்று வேலையில் இறங்குகிறார்களோ?!

சீட்டு கட்டி நகை வாங்கும் பெண்களே... எச்சரிக்கையாக இருங்கள்.

நம்பிக்கை விளக்கு ஏற்றுங்கள்!

சமீபத்தில் என் கணவருக்கு பாஸ்போர்ட் அப்ளை செய்யச் சென்றபோது, அந்த அலுவலகத்தின் அருகிலிருந்த ஜெராக்ஸ் கடைக்குச் சென்றோம். அங்கிருந்த பெரியவர், என் தோழியின் தந்தை போல் தெரியவே... அறிமுகம் செய்துகொண்டு தோழியைப் பற்றி விசாரித்தேன். ``என் பொண்ணு வர்ற நேரம்தான்" என்றார். சில நிமிடங்களில் அங்கு வந்த தோழி, அன்போடு நலம் விசாரித்தாள்.

"என்னடி, உனக்கு உலகமே தெரியாதுனு நெனைச்சேன். இப்போ முதலாளியா இருக்கே!" என்றேன். அதற்கு அவள், "இல்லடி, எங்கப்பாவுக்கு ஓய்வூதியம் கிடைச்சப்போ எனக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணினார். நான்தான் `எனக்கு ஜெராக்ஸ், ஜாப் டைப்பிங் கடை வெச்சுத் தாங்க'னு கேட்டேன். இந்த கடையை வெச்சுக் கொடுத்தார். நல்லா போயிட்டிருக்கு. அதுல ரெண்டு பொண்ணுங்க வேலை பார்க்கிறாங்க. என் கல்யாணத்துக்கு தேவையான நகையை இந்த வருமானத்திலயே எடுத்துட்டிருக்கேன். விரைவில் திருமண அழைப்பிதழோட உன் வீட்டுக்கு வர்றேன்" என்றாள்.

பெண்களை நம்பி அவர்களின் பெற்றோர் தொழில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தால், குடும்ப பாரத்தைக் குறைப்பார்கள் என்பதை கண்கூடாக பார்த்ததில், உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்தது எனக்கு! 

`மிஸ்டு கால்' வினை!

டி.வி-யில் ஒரு விளம்பரம் கண்டேன். அதில் சமையல் வேலையை சுலபமாக்கும் நவீன வீட்டு உபயோகப் பொருட்களைப் பற்றி பேசினர். ``எங்கள் செல்போன் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். நீங்கள் விரும்பும் பொருள் பற்றி விரிவாக விளக்கம் தருவோம். பொருளை வீடு தேடி வந்து கொடுத்துவிட்டு உரிய பணத்தைப் பெற்றுக் கொள்வோம்'' என்றனர். ஒரு பொருள்மீது ஆர்வம் கொண்டு மிஸ்டு கால் கொடுத்துவிட்டேன். அதன் பின் கணவரிடம் சொல்ல... அவர், ``இதுபோன்று வாங்கப்படும் பொருட்களில் பலதும் தரமற்றவையாக இருக்கும்'' என்று தமது நண்பர்களின் அனுபவத்தைப் பகிர்ந்தார். இதனால், மேற்கொண்டு அந்தப் பொருளை வாங்க நான் ஆர்வம் கொள்ளவில்லை. ஆனால், நான் ஆலோசிக்காமல் கொடுத்த மிஸ்டு கால் என்னை பெரும் அவஸ்தைக்கு ஆளாக்கிவிட்டது.

அந்த விளம்பர கம்பெனியினர் தினமும் ஐந்து ஆறு முறை வெவ்வேறு எண்களில் போன் செய்து ``மேடம்... ஆர்வமாக மிஸ்டு கால் கொடுத்தீர்களே! எந்தப் பொருள் வேண்டும்? உங்கள் விலாசத்தைச் சொல்லுங்கள். வீட்டுக்கு கொண்டு வருகிறோம்... அப்போது பணம் கொடுத்தால் போதும்" என்று ஒரு வாரத்துக்கு கேட்டுக்கொண்டே இருந்தனர். கடைசியில் பொறுமை இழந்த நான் மிகவும் கோபமாக பேசியவுடன்... போன் தொல்லை நின்றது.

தோழியரே... என் அனுபவம் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்கட்டும்!