Friday, July 31, 2015

அப்துல் கலாம் - அதிசய மனிதரின் மற்றொரு பரிமாணம்

அப்துல் கலாம் தன் வாழ்வின் ஒவ்வொரு பரிமாணத்தையும் பாடமாக்கி சென்றுள்ளதை அவருடன் பழகிய பலரும் கூறுகின்றனர்.

கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த ஈரோடு புத்தக திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் அப்துல் கலாம் பங்கேற்றார். ஈரோட்டில் இருந்து புறப்படும்போது, அவருக்கு வெட் கிரைண்டர் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசை வழங்கியவரிடம், 'எங்களது வீட்டுக்கு வெட்கிரைண்டர் தேவை. ஆனால், இதனை பரிசாக நான் பெற்றுக்கொள்ள மாட்டேன். இதற்கான தொகையை செலுத்திவிட்டுதான் பெற்றுக்கொள்வேன்' என்று கலாம் தெரிவித்துள்ளார்.

நடந்தவை குறித்து சவுபாக்யா கிரைண்டர் தயாரிப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் வி.ஆதிகேசவன் 'தி இந்து'விடம் கூறியதாவது:

எங்களது நிறுவன கிரைண்டரை கலாமுக்கு நண்பர் ஒருவர் (பெயர் வெளியிட விரும்பவில்லை) பரிசாக வழங்கியுள்ளார். கிரைண்டரை வீட்டு உபயோகத்துக்குப் பயன்படுத்த விரும்பிய கலாம் அதற்கான தொகையை பெற்றுக்கொள்ளுமாறு கூறியும், அவர் பெற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து கிரைண்டருக்கான பில்லில் இருந்த விலையான ரூ. 4,850-க்கான காசோலை ஒன்றை அப்துல் கலாமின் உதவியாளர் எங்களுக்கு அனுப்பினார். அப்துல் கலாம் கையெழுத்திட்டிருந்த அந்த காசோலையை நாங்கள் வங்கியில் செலுத்தாமல் அதனை பொக்கிஷமாக கருதி, 'பிரேம்' செய்து பாதுகாத்தோம். இரண்டு மாதங்களுக்கு பின், அப்துல் கலாமின் அலுவலகத்தில் இருந்து எங்களை தொடர்புகொண்டனர். கிரைண்டர் வாங்கியதற்காக வழங்கப்பட்ட காசோலையை இதுவரை நீங்கள் வங்கியில் செலுத்தி பணம் பெறவில்லை. நீங்கள் பணம் பெறாவிட்டால், இதுவரை பயன்படுத்தாமல் வைத்துள்ள வெட் கிரைண்டரை திருப்பி அனுப்பிவிடுமாறு கலாம் சார் கூறிவிட்டார் என்று தெரிவித்தனர். இதையடுத்து வேறு வழியில்லாமல், காசோலையை நகல் எடுத்து வைத்து கொண்டு நாங்கள் வங்கியில் காசோலையை செலுத்தி பணம் பெற்றோம் என்றார்.