Saturday, August 29, 2015

ஏன் லேட்டு?

'ஏன் லேட்டு?'

'லேட் ஆயிடுச்சு சார்!'

இந்தப் பள்ளிக்கூடத்து வசனங்களை, வளர்ந்த பின்பும் பலர் தொடர்வர்!
'லேட்டாக்கிட்டேன்... தப்பு தான்...' என்பது தானே சரியான பதில்! நான், இனி என்னை திருத்தி கொள்வேன் என்று உத்தரவாதம் தரப்பட்டதாக அமையும்!
பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமல்லாமல், வளராத நாடுகளான லாவோஸ் மற்றும் கம்போடியா போன்ற நாட்டினர் கூட, குறித்த நேரம் என்பதற்கு அபார முக்கியத்துவம் தருகின்றனர். ஒரு நிகழ்ச்சிக்கு தாமதமாக செல்வதை, வெட்கக்கேடான செயலாகக் கருதுகின்றனர்.

இந்(திய)த மண்ணில் மட்டும் தான், தாமதமாக ஒரு கூட்டத்திற்கு வருவோரை, 'நீங்க கெட்டிக்காரர்; சரியா ஆரம்பிக்கிற நேரத்துல நுழையுறீங்க...' என்று பாராட்டி, மகிழ்கிறோம்.

தமிழகத்தில், பல நேரங்களில் தாமதமாக வருபவர்கள் நுழைந்ததும் தான் கூட்டமே ஆரம்பிக்கிறது. நேரம் கடந்தாலும், சபை நிறைந்ததும் தான், நாடகத்திற்கு பூஜை மணி அடிக்கப்படுகிறது.

ஒரு முறை, ஈரோட்டில் உள்ள ராணா அரங்கில், ஒரு குறிப்பிட்ட அமைப்பின் கூட்டம் நடந்தது. தாமதமாக வருபவர் எவராக இருப்பினும், பின் வரிசையில் தான் அமர வேண்டும் என்பதும், தாமதமாக வருகிற எவருக்கும், எந்த முன்னுரிமையும் கிடையாது என்பதையும் அங்கு கண்டேன்.

நேர உணர்வு வளராத அக்காலத்திலேயே, குறித்த நேரத்தில் கூட்டத்தை துவங்கும் பண்பை கடைபிடித்தவர், கம்பன் அடிப்பொடி, சா.கணேசன்!

ஒருமுறை, அப்போது முதல்வராக இருந்தவர் குறித்த நேரத்திற்கு வராமல் போக, 'கம்பன் அடிப்பொடி இன்று என்ன செய்யப் போகிறார் பாப்போம்...' என்று, கூட்டத்தினர் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க, 'ஆரம்பியுங்கள் கூட்டத்தை...' என்றார்.
'விழாத் தலைவர்... அதுவும் முதல்வர்! அவர் வராமல் எப்படி...' என, விழாக் குழுவினர் திகைக்க, 'பரவாயில்ல; நமக்கு குறித்த நேரம் தான் முக்கியம்...' என்று சொன்ன, துணிச்சல் மனிதர், சா.கணேசன்.

சமூகத் தொண்டு நிறுவனங்களாக, உலக அளவில் சிறந்து விளங்கும் சில சங்கங்களின் தமிழகக் கிளைகள் கூட, அரசியல் கூட்டங்கள் போல் ஆகிவிட்டன. நூற்றுக்கு, 90 கூட்டங்கள் தாமதமாகவே ஆரம்பிக்கப்படுகின்றன; நடத்தப்படுகின்றன.

உலகச் சங்கங்களின் அங்கங்கள் என்கிற போது, நாமும் உலகோடு ஒட்டொழுக வேண்டாமா... உள்ளூர் அரசியல் கூட்டங்கள் போலவா நடத்துவது!
'மணி, 7:00 தானே ஆகுது... 7:30க்குத் தான் ஆரம்பிப்பர்...' என்கிற தவறான உணர்வை, உறுப்பினர்கள் மத்தியில் பதித்தால், அது யாருடைய குற்றம்?
போதுமான உறுப்பினர்கள் வந்துவிட்டால் கூட்டத்தை ஆரம்பித்துவிட வேண்டியதுதானே... சபை நிறைய வேண்டும் என்று காத்திருக்க வேண்டியதில்லையே!

தாமத வருகைக்கு பெரும்பாலும், நம்மவர்கள் சொல்லும் காரணம், 'ஏகப்பட்ட, 'டிராபிக்ஜாம்' என்னை என்ன செய்ய சொல்றீங்க...' என்பர். மோசமான போக்குவரத்தை எதிர்பார்த்து, கூடுதல் நேரம் ஒதுக்கிப் புறப்பட வேண்டியது தானே!

வண்டி பஞ்சர், ரயில்வே கேட் மூடுதல் என, எதிர்பாராததை எல்லாம் எதிர்பார்த்து, அதற்கும் நேரம் ஒதுக்கியல்லவா, புறப்பட்டிருக்க வேண்டும்!
'கிளம்புற நேரத்துல ஒருத்தர் வந்து தொலைச்சுட்டார்... என்ன செய்ய சொல்றீங்க...' என்பர் ஒரு சிலர்.

நம்மிடம் முன் அனுமதி பெறாமல், தகவல் தெரிவிக்காமல் வருவோருக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லையே... 'அவசரமாக் கிளம்புறேன்; நீங்களும் என்னுடன் வருகிறீர்களா?' என்று கேளுங்கள், அவரே நழுவி விடுவார்.
காபி கலந்து கொண்டிருக்காமல், பச்சைத் தண்ணீரோடு ஆளைக் கை கழுவுங்கள்; நீண்ட உரையாடலும் வேண்டாம்; உங்கள் அவசரத்தை அவசியம் புலப்படுத்துங்கள்.

வருகிற வழியில் வேறு வேலைகளை வைத்துக் கொள்ள கூடாது. வழியில் வைத்துக் கொள்ளும் எந்த ஒரு வேலையும், தறிகெட்டு ஓடும் வாகனத்தின் போக்கிற்கு சமம். நேரே இலக்கு தான்; இலக்கு முடிந்ததும் தான் வழிப் பணிகள்.
தாமதக்காரர்களிடம் ஒன்று கேட்கிறேன்... நம் முதல்வருடன் அப்பாயின்மென்ட் என்றால் தாமதம் செய்வீர்களா... முன்னதாகவே போய் விட மாட்டீர்கள்?
ஒப்புக்கொள்கிற ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் முக்கியத்துவம் தாருங்கள். 'லேட்டாப் போனா என்ன, தலையை சீவிடுவாங்களா...' என்கிற தத்துவத்தை மூட்டை கட்டுங்கள்.

ஜேம்ஸ் ஹெச்.வேல்ஸ் என்கிற அமெரிக்கப் பணக்காரர், 'நான் வருகிறேன் என்று சொன்ன நேரம் கடந்து விட்டதா... ஜேம்ஸ் செத்துப் போயிட்டான் என்கிற முடிவிற்கு வந்து விடுங்கள்...' என்று கூறினார்.

இதுவன்றோ குறித்த நேரத்திற்கு முக்கியத்துவம் தரும் அழகு! 

லேனா தமிழ்வாணன்