Saturday, August 8, 2015

நீ தேடுவதும் அடைய விரும்புவதும் உனக்குள்ளேயே இருக்கிறது


த்ம அனுபவத்தை, நிலையான பேரின்பத்தை, எல்லை இல்லாத ஆனந்தத்தை அனுபவிக்க விரும்பிய சீடன் ஒருவனுக்கு,   அனுபவசாலியான  குருநாதர் பாடம் நடத்துகிறார். 

'சீடனே! நீ தேடுவதும் அடைய விரும்புவதும் உனக்குள்ளேயே இருக்கிறது' என்று சொல்லி, அவனுக்கு ஆத்ம  தத்துவ உபதேசம் செய்கிறார்; அதுகுறித்து விரிவாக விளக்குவதுடன், 'அனுபவித்து அறிவாய் நீயே' என்கிறார்.

'அறிபொருள் ஆகும் உன்னை

அனுபவித்து அறிவாய் நீயே'

பிரச்னையே இங்குதான்! 'இந்தக் கோயிலுக்குப் போ, இது கிடைக்கும்; அந்தக் கோயிலுக்குப் போ, அது கிடைக்கும்; இப்படிச் செய், அப்படிச் செய்' என்ற பொதுவான வழிகாட்டுதல்களே இருக்கின்றன. அதாவது, பொறி புலன்களால் வேட்டையாடக்கூடிய வழிவகைகளே காணப்படுகின்றன.

ஆத்ம அனுபவத்தைச் சொல்லி வழிகாட்டக்கூடிய நூல்களே இல்லையா என்றால், ஏராளமாக உள்ளன. ஆனால், அவை எடுபடவில்லை. ஆயிரத்தில் ஒருவருக்குத்தான், ஆத்ம அனுபவத்தைப் பற்றிய சிந்தனை வரும்;

அப்படி வந்தவர்களிலும் ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் அதை உணர வேண்டும் என்ற ஆர்வம் வரும்; அவ்வாறு ஆர்வம் கொண்டவர்களிலும் ஆயிரத்தில் ஒருவர்தான், அதற்குண்டான வழிவகைகளைத் தேடுவார். அப்படி ஆர்வத்துடன் தேடக் கூடியவர்களுக்கு, சத்குரு வாய்ப்பார்.

அப்படிப்பட்ட சத்குருதான், ஆத்ம அனுபவம் அடைய விரும்பிய சீடனுக்கு ஆத்ம தத்துவ உபதேசம் செய்து, 'அறிபொருள் ஆகும் உன்னை அனுபவித்து அறிவாய் நீயே'  என்கிறார். இவ்வாறு சொன்ன குருநாதர், மற்றொன்றையும் சொல்கிறார்.

'எல்லாம் கண்டு அறியும் என்னை

ஏது கொண்டு அறிவேன் என்று

சொல்லாதே சுயமாம் சோதிச்

சுடருக்குச் சுடர் வேறுண்டோ' (கை.நவநீதம் 66)

'சீடனே! எல்லாவற்றையும் கண்டு அறியும் என்னை, எதைக் கொண்டு அறிவேன் என்று பேசாதே!' என்கிறார் குருநாதர்.

தொடர்ந்து, 'அனைத்தையும் காட்டி அறிவுறுத்தும் தீபத்தைக் காண வேறொரு தீபம் வேண்டுமா? அதுபோல, சுயம்பிரகாச ஜோதியான, அனைத்தையும் அறிவிக்கும் ஆத்மாவை அறிவிக்க மற்றொன்று உண்டா என்ன? தேவையா என்ன?' எனக் கேட்கிறார்.

குருநாதர் சொன்ன தத்துவ உபதேசங்களை ஏற்ற சீடன், அந்த வழியிலேயே செயல்பட்டான். அப்புறம் என்ன?!

ஓர் ஊருக்குச் செல்லும்போது, வழிகாட்டிப் பலகைகள் அறிவிக்கும் வழியில் பயணம் செய்தால், அந்த ஊரை அடைந்துவிடலாம் அல்லவா? அதுபோல், குருநாதர் சொன்ன அந்தத் தத்துவ வழியில் செயல்பட்டு, பரிபூரண சொரூபத்தைத் தரிசித்தான் சீடன்.