Monday, August 24, 2015

குழந்தைகள் உலகம் அழகானது. அதை இயந்திரமாக்கிக் கொண்டிருக்கிறோம்!

'நேரமாச்சு எழுந்திரு', 'பிரஷ் பண்ணு', 'சீக்கிரம் குளி', 'யூனிஃபார்ம் போட்டாச்சா?', 'மிச்சம் வைக்காம சாப்பிடு', 'ஸ்கூல் வேன் வந்துடுச்சு... பை', 'ஹோம்வொர்க் பண்ணு!'

- குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பெரும்பாலும் காலையும் மாலையும் இப்படித்தான் பரபரப்பாக இருக்கும்.

''குழந்தைகள் உலகம் அழகானது. அதை இயற்கையிலிருந்து புறந்தள்ளிவிட்டு செயற்கையாக அவர்களை இயந்திர மாக்கிக் கொண்டிருக்கிறோம்!'' குழந்தைகளுக்கான ரிலாக்ஸ் நேரத்தை எப்படி உருவாக்கித் தரலாம்.

`நடமாடும் கூகுள்'... நம் வீட்டுப் பெரியவர்கள்!

''இந்தத் தலைமுறை குழந்தைகளின் உலகம் ஐபாடிலும் ஆண்ட்ராய்டிலும் தான் கழிகிறது. கூட்டுக் குடும்பங்கள் தொலைந்து போனதால், நம் முந்தைய தலைமுறையைப் பற்றியும், பாரம் பர்யத்தைப் பற்றியும் சொல்லித்தர தாத்தாக்களும் பாட்டிகளும் இப்போது அரிதாகவே குழந்தைகளுக்குக் கிடைக் கிறார்கள். ஆண்ட்ராய்டில் பார்க்கும் உலகத்தைவிட, நம் குழந்தைகள் தாத்தா வின் தோள்களில் உட்கார்ந்து எட்டிப் பார்க்கும் உலகம் அழகாக இருக்கும். சுருக்கமாக சொல்லப்போனால், வீட்டுப் பெரியவர்கள் ஒவ்வொருவருமே `நட மாடும் கூகுள்' எனலாம். சின்னச் சின்ன அடிப்படையான விஷயங்களைக்கூட இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளுக் குச் சொல்லித் தருவதில்லை. குழந்தை களுக்கு முதலில் நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் குறித்துச் சொல்லித் தருவது மிகவும் அவசியம்.

பூ மலரும் அனுபவத்தை பரிசளியுங்கள்!

அறிவியலையும் சூழலியலையும் பற்றி நம் குழந்தைகள் பாடங்களில் படிக்கிறார்கள். ஆனால் குழந்தைகள் பலருக்கு கடல், மலை என்பதும், பூ காயாவதும், கனியாவதும், விதையாவதும் பாடமாக மட்டும் தெரியுமே தவிர, இயற்கையின் அந்த வித்தையை அனுபவித்திருக்க மாட்டார்கள். ஆறு, மலை, காடு, கடல் போன்ற இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று அவர்களுக்கு இயற்கையை சொல்லித்தரலாம். விளையாட்டாக குழந்தைகளுக்கு விவசாயம் கற்றுத்தரலாம். அருகம்புல், சோற்றுக்கற்றாழை, ஆடாதோடா, கற்பூரவள்ளி, கீழாநெல்லி என மூலிகைகளை வீட்டில் வளர்க்கச் சொல்லித் தரலாம். உங்கள் குழந்தைகள் பின்னாளில் என்ன வேண்டுமானாலும் படிக்கட்டும், படிப்புக்கேற்ற வேலைக்குப் போகட்டும். ஆனால், அவர்களுக்கு அடிப்படை விவசாயம் தெரிந்திருக்க வேண்டும். 'ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம்' என்று நம் சிறு வயதுகளில் விளையாடியிருப்போம். அந்தப் பூ மலரும் அனுபவத்தை அவர்களுக்குப் பரிசளிக்க, வீட்டில் செடி வைத்து, அவர்களை தண்ணீர் ஊற்றச் செய்யுங்கள்.

விடுமுறையைத் தின்னும் சம்மர் வகுப்புகள்!

குழந்தைகளுக்கு கோடையில் விடுமுறை விடுவதே அவர்களுக்கான ஓய்வையும் புத்துணர்வையும் கொடுப்பதற்குதான். இந்த நாட்களிலும்கூட அவர்களை சம்மர் கிளாஸ் என்கிற பெயரில் வாட்டுவது கொடுமை! இன்றைக்கு நடத்தப்படும் சம்மர் கிளாஸ்கள் பெரும்பாலும் வியாபார நோக்கில் நடத்தப்படுபவையே. பெற்றோர்கள் அவர்களை அங்கு அனுப்புவதற்குப் பதிலாக, தங்கள் நேரத்தை குழந்தைகளுடன் செலவிட்டாலே மிகச்சிறப்பு. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு அவர்களை அழைத்துச் செல்லலாம். சக குழந்தைகளுடன் விளையாடவிடலாம். ரயில் பயணம், படகு சவாரி என புதிய உலகை அவர்களுக்கு அறிமுகம் செய்யலாம். வீட்டின் அருகில் உள்ள கடைகளுக்கு அழைத்துச் சென்று விலைவாசியை சொல்லித் தரலாம். வண்ணத்துப் பூச்சிகளின் உலகத்தை முடிந்தவரை கூட்டில் அடைக்காமல் சுதந்திரம் கொடுங்கள். மதிப்பெண்ணைத் தாண்டியும் விரிந்து கிடக்கும் வாழ்க்கையை அவர்களைத் தரிசிக்கச் செய்யுங்கள்.

ஆடம்பரம் தவிர்ப்போம்!

குழந்தைகளை ஷாப்பிங் மால்களுக்கு அழைத்துச் செல்வது, அவர்களுக்கான உற்சாகமான பொழுதுபோக்கு என்று பெற்றோர்கள் பலர் நினைக்கிறார்கள். ஆனால்... அங்கே விற்பனைக்கு இருக்கும் பல பொருட்களும், அந்தப் பொருளின் மதிப்பைவிட பல மடங்கு விலையில் இருக்கும். `குழந்தைகள் அடம்பிடித்து எப்படியும் தங்கள் பெற்றோரை வாங்க வைத்துவிடுவார்கள்' என்பது, அந்த வணிகர்களின் வியாபார உத்தி, நம்பிக்கை. அதுவே, பிளே ஸ்டேஷன் முதல் உணவு வகைகள் வரை குழந்தை சம்பந்தப்பட்ட அனைத்தும் அங்கு அதிக விலையில் இருக்கக் காரணம். பொம்மைகள், சாக்லேட்டுகள் என பலவும் தாறுமாறான விலையில் விற்பனையாகின்றன.

ஆரோக்கியம் இல்லாததும் அவசியம் இல்லாததுமான பொருட்களை குழந்தை களுக்கு வாங்கித் தராமல் எளிமையான விளையாட்டுப் பொருட்களை வீட்டிலேயே குழந்தைகள் செய்யவும், அதை வைத்து விளையாடவும் சொல்லித் தரலாம். காய்கறி அலங்காரம், பூ கட்டுவது என்று அவர்களை சுவாரஸ்யப்படுத்தலாம். நம்மால் முடிந்த பொருட்களை நாமே உருவாக்குவோம் என்பதை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து, சேமிப்புப் பழக்கத்தை வலியுறுத்துங்கள்.

நீதி போதனை... நிச்சயம் தேவை!

'பாட்டி கதை சொன்னால்தான் தூங்குவேன்' என்ற தலைமுறை அழிந்து, இப்போது தொலைக்காட்சிகளிலும் கார்ட்டூன்களிலும் சீரியல்களிலுமே நேரத்தைத் தொலைக்கிறார்கள் நம் குழந்தைகள். ஆயா வடை சுட்ட கதையைப் போன்ற நீதிக்கதைகள், இப்போதும் அவர்களின் வாழ்க்கைக்கு அவசியமான ஒன்று. முன்பு பள்ளிகளில் இருந்த நீதி போதனை வகுப்புகள் இப்போது அரிதாகிவிட்டன. குழந்தைகள் செய்யும் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. அதனால் கதைகள் சொல்ல முடியாவிட்டாலும், நல்ல நூலகத்தை அவர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். மதிப்பெண் புத்தகங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, மனிதம் சொல்லித் தரும் புத்தகங்களை குழந்தைகள் கைகளில் தாருங்கள். செய்தித்தாள் படிப்பது, நல்ல கருத்தரங்கங்களுக்கு அழைத்துச் செல்வது, கண்காட்சிகளுக்கு அழைத்துச் சென்று அவர் களுக்குப் புதிய விஷயங்களை புரிய வைப்பது, தரமான திரைப்படங்களுக்கு அழைத்துச் செல்வது என அவர்களின் அழகான நேரத்தை பொக்கிஷம் ஆக்குங்கள்!''

குழந்தை பாதுகாப்பு டிப்ஸ்!

தொட்டிகள் அல்லது பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி திறந்து வைப்பதைத் தவிர்க்கவும். பெற்றோரின் கவனம் இழந்த சில நிமிடப் பொழுதிலும், குழந்தை அதில் தவறி விழ நேரலாம். அதேபோல, குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு சமைப்பதையும் தவிர்க்கவும். தாளிக்கும் பொருட்கள் குழந்தையின் மேனியிலோ, கண்களிலோ பட வாய்ப்பிருக்கிறது.