Sunday, September 6, 2015

பெரிய சொத்து ஒன்று பிள்ளைகளுக்காக நாம் தர வேண்டியுள்ளது

வெளிநாட்டுப் பயணங்களின் போது, இந்தியா மற்றும் இந்தியர்களை பற்றி இளக்காரமாய், கேலி பேசுவோரிடம் விட்டுக் கொடுக்காமல் பேசுவது உண்டு.
நம் ஊரின் அசுத்தம் பற்றி பேசினால், 'எங்கள் அக வாழ்க்கையின் துாய்மைக்கு முன், உங்கள் நாடு எம்மாத்திரம்...' என்பேன்.

'போக்குவரத்து விதிமுறைகளில் ஒழுங்கு கடைப்பிடிக்கப்படுவதில்லை...' என்கிற குற்றச் சாட்டை முன் வைக்கும் போது, 'தனிப்பட்ட வாழ்வில், எங்கள் மக்கள் பின்பற்றும் ஒழுங்கு முறைகள், உங்கள் நாட்டில் உண்டா?' என்று கேட்பேன்.
'உங்களுக்கு நாட்டைப் பற்றிய அக்கறை இல்லை; எல்லாம் சுயநலப் போக்கு...' என்று கூறும் போது, 'எங்களவர்கள் தங்கள் பிள்ளைகளுக்காகவும், தலைமுறைக்காகவும் வாழும் சுயநலமற்ற தியாகிகள்; நீங்களோ, பிள்ளைகளைப் பற்றிக் கவலைப்படாமல், பெத்துப் போட்டு, அத்து விடும் ரகம்; அதனால், நீங்கள் பேசாதீர்கள்...' என்பேன்.

இப்படி விட்டுக் கொடுக்காமல் பேசினாலும், நம் நாட்டில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் சமூக நிலை என்ன?

வாயைக் கட்டி, வயிற்றைக்கட்டி வாழ்ந்து, எல்லாவற்றையும் பிள்ளைகளுக்கு கொட்டிக் கொடுத்து, காலமெல்லாம் துன்பப்படுகின்றனர் சில பெற்றோர்!
சிலர் பிள்ளைகளுக்காக, தேவைக்கு மேல் சொத்து சேர்த்து வைக்கின்றனர். இவர்கள் சேர்த்து வைப்பது சொத்தை அல்ல, 'எனக்கு என்ன குறைச்சல்; நான் ராஜா...' என்கிற அகந்தையை!

வீட்டில் வளர்க்கப்படும் நாய், வீட்டிலிருந்து தப்பி, தெருவிற்கு வருகிற போது, அது வாகனங்களில் அடிபட்டுச் சாகிறது. தெருவில் வாழ்கிற நாயோ, வாகன நெரிசல்களினுாடே அழகுறக் கடந்து செல்கிறது.

கூவத்தின் கரையில் வாழும் குழந்தை, கொழு கொழுவென இருக்க, 'மினரல் வாட்டர்' குடிக்கும் பெரிய மனுஷன் வீட்டுக் குழந்தையோ, வைரஸ் காய்ச்சலில் படுத்து விடுகிறது.

பழக்கப்பட பழக்கப்பட உடம்பும், மனதும் எதையும் தாங்கிக் கொள்ளத் தயாராகி விடுகின்றன. ஆனால், நாம்தான் நம் வாரிசுகளுக்கு இதற்கு வாயிலைத் திறந்து விட மறுக்கிறோம்.

ஆம்! வாழ்க்கைத் துன்பங்களுக்கு பழக்கப்படாதபடி, நம் பிள்ளைகளை நாம் அடை காத்தே வளர்த்து விட்டோம்.

'கையை கெட்டியாப் பிடிச்சுக்கோ...' என்று சொல்லி, சாலையை கடக்க கூட, கற்றுக் தராத நாம், வாழ்க்கைப் பாதையைக் கடக்க, பிள்ளைகளுக்கு எப்போது கற்றுத் தரப் போகிறோம்!

நல்ல கல்வி மற்றும் சொத்து சேர்த்து வைத்தால் போதும்; அதுதான் பிள்ளைகளுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்ற முடிவுக்கு வந்த பெற்றோர், அவை மட்டுமே வாழ்வின் தலையாய அம்சங்களாகி விடாது என்பதை தற்போது கண்கூடாக காண்கின்றனர்; சிலரோ கண்களையே மூடி விடுகின்றனர்.
பல பிள்ளைகளுக்கு பண்பாகப் பேசவோ, பழகவோ தெரியவில்லை; நல்ல குணநலன்கள் இதயத்தில் படியவில்லை; எல்லாம் அனாவசியம்; எதிலும் அலட்சியம்! 

வீட்டு வாசல் மணிச் சத்தம் கேட்டாலே ஓடிப் போய் தங்கள் அறைக் கதவை சாத்திக் கொள்கின்றனர். அறைக்குள் விழித்திருக்கின்றனர் என, தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, கத்துகிற தொலைக்காட்சியின் ஒலியைக் குறைத்து, தலையணைக்குள் முகம் புதைத்துக் கொள்கின்றனர்.

பெரியவர்களை மதிக்கத் தெரியாததுடன், அவர்களைப் பார்த்து, 'ஹாய்...' என்று ஆடு, மாடு ஓட்டுகின்றனர். எவருக்கும் உறவினர்கள் மேல் பாசமோ, சிநேகமோ இல்லை; நண்பர்களே உலகம் என்று வாழ்கின்றனர்; கணினியின் திரையில் முகத்தைப் பதித்துக் கொள்கின்றனர். உலகிலேயே இவர்களுக்கு பிடித்த ஒரே கருவி, மொபைல் போன்; உயிரற்ற மொபைல் போனின் மீது உள்ள பாசம், உறவினர்கள் மீது இல்லை.

'இந்தப் பொண்ணை பையனை என்னவாய் வளர்த்திருக்கின்றனர்! பிள்ளைன்னா இது பிள்ளை!' என்கிற பாராட்டுச் சான்றிதழே, பிள்ளைகளுக்கு நாம் சேர்த்து வைக்கும் உண்மையான சொத்து!

இப்போது கூட ஒன்றும் குடிமுழுகிப் போய் விடவில்லை...

'வளர்ந்துட்டாங்க; இனிமேல் நாம சொல்லியா கேக்கப் போகுதுங்க?' என்ற அவநம்பிக்கை தேவையில்லை. கோரிக்கைகளை அவர்கள் நீட்டும் போதெல்லாம், பண்பு எனும் நிபந்தனைகளை, பதிலுக்கு நீட்டுங்கள்!

சிறுவயதில் கன்னங்களை அழுத்தமாகப் பிடித்து, வாயில் விளக்கெண்ணெய் ஊற்றி விட்டது போன்று இன்று, அன்பால் ஒரு பிடிபிடித்து, மாற்றப் பார்க்கலாம்.
இதைவிட பெரிய சொத்து ஒன்றும் நாம் தர வேண்டியுள்ளது. அது, நமக்குக் கெட்ட பெயர் இல்லாத வாழ்க்கையை, நாம் வாழ்ந்து காட்டி, அவர்களுக்கு, நம்மால் ஏதும் தலைக்குனிவு வந்து விடாதபடி பார்த்துக் கொள்வது!




லேனா தமிழ்வாணன்