Saturday, October 3, 2015

கல்யாணம் டாம்பீகம் ஏன்?

டாம்பீகம் ஏன்?
'இப்போதெல்லாம் மிடில்கிளாஸ் குடும்பங்கள் வீட்டுக் கல்யாணங்கள்ல வரதட்சணை பிரச்னை கடந்த கால நிகழ்வா போயிடுச்சு, கவனிச்சீங்களா?' என்றபடியே என் வீட்டுக்குள் நுழைந்தார் பக்கத்து வீட்டுக்காரர். உடன் அவரது மனைவியும், கையில் அரை டஜன் பட்டுப்புடவைகளுடன்! அவர்களது செல்ல மகளுக்குத் திருமணம். தகதகவென ஜொலிக்கும் அழைப்பிதழே மிரட்டியது. அழைப்பிதழ் அடிக்கவே லட்சக்கணக்கில் செலவழித்திருப்பார்கள்போல! 

'அது சரிதான். ஆனா, இப்பதான் எல்லா கல்யாணமும் ஆடம்பர வைபவம் ஆயிடுச்சே! நீங்களேகூட உங்க மகளுக்கு ராஜேஸ்வரில கல்யாணம்னு சொன்னீங்க.

ஏ.கே.பி.பழனிவேலின் தவிலுடன் நாகஸ்வரம். சுதா ரகுநாதன் ஊஞ்சல் பாடப்போறாங்க. ரிசப்ஷனுக்கு ஜேசுதாஸ். நூறு பவுனுக்கு நகை. சண்டைக்கார சம்பந்தியா இருந்தாலும் சரணாகதிதான்!' என்றேன்.

பக்கத்து வீட்டுக்காரருக்கு வாய் முழுவதும் பற்கள்! அவரின் மனைவி, தான் எடுத்து வந்த புடவைகளைத் தரையில் பரப்பி வைத்தார்.

'நேத்துதான் காஞ்சிபுரம் போய், பட்டுப் புடவைகளை அள்ளிட்டு வந்தோம். இது நிச்சயதார்த்தப் புடவை. இது ஊஞ்சலுக்கு. இதோ, இந்தப் புடவை ரிசப்ஷனுக்கு. அப்புறம் இந்தப் புடவை ஸ்பெஷல் தறியில நெய்யப்பட்ட கூரைப் புடவை. தவிர, எங்க உறவுக்காரங்க எல்லோருக்குமே பட்டுப் புடவையாவே எடுத்துட்டேன்' என்றவரிடம், 'மொத்தம் எவ்வளவு ஆச்சு?' என்று என் மனைவி விசாரிக்க, அவர் சொன்ன தொகையில் கேளம்பாக்கம் ஏரியாவில் வசதியான ஒரு ஃப்ளாட் வாங்கிவிடலாம்!

சமையலுக்கு மட்டும் பட்ஜெட் 30 லட்சமாம்! கல்யாண வேலைகள் மொத்தத்தையும் ஈவன்ட்ஸ் மேனேஜர் ஒருத்தரிடம் கொடுத்துட்டாராம். இன்விடேஷன்ல ஆரம்பிச்சு, கல்யாணம் முடிஞ்சு பூசணிக்காய் உடைக்கிற வரையில் அவர் பொறுப்பாம். இதற்குக் கூலி, ஏழு லட்சம் ரூபாய்.

'ஏதேது... மொத்தச் செலவு ஒரு கோடியைத் தாண்டிடும் போலிருக்கே..?' என்று நான் கேட்க, இரண்டு சுட்டு விரல்களையும் ஒன்றும் அரையுமாக மடித்துக் காட்டி, ஒன்றரைக் கோடி எனக் குறிப்பால் உணர்த்தி, பெருமிதப் புன்னகை ஒன்றை உதிர்த்தார்.

கையிலிருந்த அழைப்பிதழை மீண்டும் புரட்டிப் பார்த்தேன். அதில், 'ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரியார் அனுக்கிரஹத்துடன்...' என்ற வரி நெருடியது.

வரதட்சணைப் பழக்கமும், கல்யாணங்களை டாம்பீகமாக நடத்தும் வழக்கமும் தொலையவேண்டும் என்று அழுத்தம்திருத்தமாக உபதேசம் செய்த மகான், மகா பெரியவா. இதற்காக அவர் ஓர் ஆயுதப் பிரயோகம்கூடச் செய்திருக்கிறார். அதாவது, 'இப்படி வரதட்சணை வாங்குகிறவர்களும், கொடுப்பவர்களும் அப்படிப்பட்ட கல்யாணப் பத்திரிகைகளில் என் அனுக்கிரகத்தோடு நிச்சயிக்கப்பட்டதாக தயவுசெய்து போட வேண்டாம்...' என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மிடில்கிளாஸ் மாதவன்கள் யோசிப்பார்களா?