Saturday, December 5, 2015

எண்: 66

கோடிக்கணக்கான ரூபாய் புரளும் ஆன் - லைன் வர்த்தகத்தில் முக்கியப் புள்ளி சித்தார்த். சென்னையில் இருப்பதே அபூர்வம். தொழில் விஷயமாக வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருப்பவன், சில நாட்களாக பணத்தை விட குடும்பம் முக்கியம் என்ற உணர்வு ஏற்பட, சென்னையில் இருக்கிறான். அப்படியும் ஓய்வு இல்லாமல் பிசினஸ், மீட்டிங் என்று பிசியாக இருந்தான்.
மதியம், மகனின் பள்ளியிலிருந்து, ''சார்... உங்க மகன் அனுராக் பற்றி கொஞ்சம் பேசணும்,'' என்று சிஸ்டர் வெரோனிகா போனில் கூறியதும், திடுக்கிட்டு, 'மீண்டும் ஏதாவது பிரச்னையோ...' என நினைத்து, ''அவனுக்கு என்ன... கிளாஸ் ரூமில் தானே இருக்கான்...'' என்று கேட்டான் பதற்றத்துடன்!
''பிரச்னை அது இல்ல சார். தயவு செய்து நீங்க நேரில் வர முடியுமா?'' என்றாள்.
அதற்கு மேல் சித்தார்த்தால் அமைதியாக அலுவலகத்தில் உட்கார முடியவில்லை. 'வியாபாரமாவது மண்ணாவது... என் பிள்ளை நல்லா இருந்தால் போதும்; இப்பத்தான் ஒரு பிரச்னையிலிருந்து தப்பிச்சு வந்திருக்கான், புதுசா வேறு எதுவும் இருக்கக் கூடாது, கடவுளே காப்பாற்று...' என நினைத்து கொண்டே, மகன் படிக்கும் பள்ளிக்கு கிளம்பினான்.
சிஸ்டர் வெரோனிகா அவனுக்காக தன் அறையில் காத்திருந்தாள்.
''சொல்லுங்க சிஸ்டர்,'' என்றான் பதற்றத்துடன்!
''சார்... அந்த சம்பவம் நடந்ததிலிருந்தே உங்க மகன் பழைய மாதிரி இல்ல,'' என்றவள், மூன்றாம் வகுப்பு படிக்கும் எட்டு வயது சிறுவன் அனுராக்கின் நோட்டுப் புத்தகங்களை எடுத்துக் காட்டி, ''ஹோம் ஒர்க் கொடுத்தா செய்யறதில்ல. பக்கத்துக்கு பக்கம் இந்த நம்பரையே கிறுக்கி வைக்கிறான்,'' என்றாள்.
நோட்டு, புத்தகங்களை புரட்டிப் பார்த்தான். அனைத்து பக்கங்களிலும் ஒரே எண்ணையே எழுதியிருந்தான். எதற்காக இதையே திரும்பத் திரும்ப எழுதியுள்ளான் என்பது அவனுக்கு புரியவில்லை.
''உங்க பையன் எழுதியிருக்கும் எண்: 66; நீங்க அவனை கண்டிக்காம, இதைப் பற்றி விசாரிங்க,'' என்றாள்.
பள்ளியிலிருந்து திரும்பிய சித்தார்த்திற்கு ஒரே குழப்பாக இருந்தது. 'என் செல்ல மகனுக்கு என்ன ஆச்சு... இப்பத்தான் பெரிய ஆபத்தில சிக்கினான். அவனை மீட்டு வந்து, 10 நாட்கள் கூட ஆகலையே! அதற்குள் இது என்ன புதுப் பிரச்னை...' என நினைத்தான்.
பத்து நாட்களுக்கு முன், சித்தார்த் ஜெர்மனியில் இருந்தபோது தான், அந்த அதிர்ச்சி தகவல் வந்தது. பள்ளிக்கு சென்ற அனுராக், மாலையில் வீட்டிற்கு திரும்பவில்லை என்றும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகள் என எங்கு தேடியும் அவனை காணவில்லை என்று!
உடனே, அங்கிருந்தவாறே போலீசில் புகார் கொடுத்தவன், அடுத்த விமானத்தை பிடித்து, சென்னை வந்து சேர்ந்தான். அரண்மனை போன்ற அவனது வீட்டில், அழுது அழுது சோர்ந்து கிடந்தாள் அவனது மனைவி.
சித்தார்த்தை பார்த்ததும் ஓடி வந்தவள், 'ஏங்க நம்ப புள்ள எங்க போனான்னு தெரியலைங்க. என் உலகமே அவன் தாங்க. அவனுக்கு ஏதாவது ஆச்சுன்னா அப்பறம் நான் உயிரோடயே இருக்க மாட்டேன்...' என்று கூறி அழுதாள்.
'அழாதே... அதான் நான் வந்துட்டேன்ல்லே... எப்படியாவது பிள்ளைய கண்டு பிடிச்சுடுவேன்...' என்றான்.
சென்னையில் உள்ள பெரிய பணக்காரர்களில் சித்தார்த்தும் ஒருவன் என்பதால், அவன் வந்த தகவல் அறிந்ததும், அசிஸ்டெண்ட் கமிஷனர், போலீஸ் படையுடன் அவன் வீட்டிற்கே வந்து விட்டார்.
'சார்... உங்க வீட்டை சுத்தி போலீஸ் கண்காணிப்பு போட்டிருக்கோம். பணத்துக்காக உங்க மகனை கடத்தியிருக்கலாம். கவலைப்படாதீங்க; கண்டுபிடிச்சிடலாம்...' என்றவரை, மவுனமாக வெறித்தான்.
'உங்க எல்லா டெலிபோன் மற்றும் மொபைல் லைன்களையும் பதிவு செய்ய ஆரம்பிச்சிருக்கோம்...' என்றார் போலீஸ் கமிஷனர்.
'ஆனா, இதுவரைக்கும் பணம் கேட்டு எந்த போனும் வரலயே...' என்றான் சித்தார்த்.
'பொறுமையா இருங்க... இந்த காரியத்த தனி ஆள் செஞ்சுருக்க மாட்டான். இதுக்கு பின் பெரிய கூட்டமே இருக்கும். உங்களுக்கு தொழில் முறையிலோ அல்லது உறவினர்ல யாராவது விரோதிகள் இருக்காங்களா?' என்று கேட்டார்.
'அப்படி சொல்ற அளவுக்கு எனக்கு எதிரிங்க யாரும் கிடையாது...' என்றான்.
அங்கிருந்த வேலைக்காரர்கள் ஒவ்வொருவரையும் போலீசார் தனித்தனியே விசாரித்துப் பார்த்தும் எந்த, 'க்ளு'வும் கிடைக்கவில்லை.
அனுராக் காணாமல் போய் நான்கு நாட்களாகி விட்டது. வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தான் சித்தார்த். எதுவும் சாப்பிடாமல் அழுதபடி பிதற்றும் மனைவியைப் பார்க்க கஷ்டமாக இருந்தது.
ஐந்தாவது நாள். மனைவியின் உடல் நிலை மிகவும் மோசமானது. அவள் அருகிலேயே கவலையுடன் அமர்ந்திருந்தான். அப்போது, போலீஸ் கமிஷனரிடமிருந்து போன் வர, எழுந்து, கமிஷனர் அலுவலகம் சென்றான்.
அங்கே சில முக்கிய அதிகாரிகளுடன் மீட்டிங்கில் இருந்தார் கமிஷனர். சித்தார்த்தை பார்த்ததும் உள்ளே அழைத்தவர், 'சார்... நாளைக்கு உங்க பையன் கிடைச்சுடுவான்; அவனை கடத்தியவன் எங்களுக்கு போன் செய்தான்...' என்றார்.
'யார் சார் அந்த அயோக்கியன்...'
'அவனை பாக்க தானே நாங்களும் காத்திட்டுருக்கோம்...'
'எங்கே வரணுமாம்?'
'திருவள்ளூர் மாவட்டத்துல, இறையூர்ன்னு ஒரு கிராமம் இருக்கு. அங்க இருக்கிற தர்காவுல நாளைக்கு உரூஸ்ன்னு ஒரு திருவிழா நடக்குதாம். அங்கே வச்சு பையனை ஒப்படைக்கிறதா சொல்லியிருக்கிறான். பையனை அடையாளம் காட்ட, நீங்க மட்டும் வந்தா போதும். உங்க கூட மப்டியில் போலீசார் வருவாங்க. அதனால, நீங்க எதுக்கும் கவலைப்பட வேணாம். பையனை நீங்க அடையாளம் காட்டியதும், அந்த கூட்டத்தை நாங்க சுற்றி வளைச்சுருவோம். இந்த விஷயம், பத்திரிகைகாரங்களுக்கோ ஏன்... உங்க மனைவிக்கோ கூட இப்போ தெரிய வேணாம்...' என்றார் கமிஷனர்.
மறுநாள், போலீசார் மப்டியில் புடை சூழ, இறையூர் தர்காவிற்கு வந்திறங்கிய சித்தார்த், கண் கலங்கியபடி கூட்டத்தில் மகனை தேடினான். அவனுக்கு சிறிது தொலைவில் கூட்டத்தோட கூட்டமா போலீசார் கலந்திருந்தனர். வெளியே தெரியாத மைக்ரோ போனில், சித்தார்த்துடன் தொடர்பில் இருந்தார் போலீஸ் கமிஷனர்.
கூட்டத்தில் அலைந்து தேடி களைத்துப் போன சித்தார்த், ஓர் இடத்தில் அப்படியே தொய்வாக தரையில் அமர்ந்தவன், 'அப்பா...' என்ற குரல் கேட்டு நிமிர்ந்தான். மகன் அனுராக் கையில் பஞ்சு மிட்டாயுடன் நின்றிருந்தான். அப்படியே பாய்ந்து சென்று, அவனை அணைத்துக் கொண்டான் சித்தார்த்.
'சார்... பையனை அப்படியே பத்திரமாக கூட்டிட்டு வெளியே வந்திடுங்க...' என்றார் மைக்ரோ போனில் கமிஷனர்.
கூட்டத்தை விலக்கி, கமிஷனர் நின்றிருந்த இடத்திற்கு, மகனுடன் வந்தான் சித்தார்த்.
'இனி நீங்க வீட்டுக்கு போகலாம்...' என்றார் கமிஷனர்.
'என்ன சார் இவ்வளவு சாதாரணமாக வீட்டுக்கு போன்னு சொல்றீங்க... என் மகன கடத்தி வச்சு, எங்களுக்கு மன உளைச்சல கொடுத்த அந்த அயோக்கியன நான் என் கையால கொல்லணும். அப்பத்தான் என் ஆத்திரம் அடங்கும்...' என்றான்.
'அவனை நாங்க பிடிச்சிட்டோம்; நாளைக்கு எங்க ஆபீசுல வச்சு அவன நீங்க பாக்கலாம்...' என்றார்.
மகனை பார்த்ததும், சித்தார்த்தின் மனைவிக்கு மறு பிறவி எடுத்தது போலிருந்தது. ஓடிவந்து, அவனை அணைத்து, கொஞ்சினாள்.
ஆனால், சித்தார்த்தின் கவனமெல்லாம் தன் மகனை கடத்தியவனை பற்றியே இருந்தது. 'பையனக் கடத்தியவன், பணம் எதுவும் கேட்கல; பையன் உடம்பில் சிறுகீறல் கூட இல்ல. பின் ஏன், என் வாழ்க்கைய இந்த ஆறு நாட்களும் நரகமாக்கினான்...'என யோசித்துக் கொண்டிருந்தான்.
விடிந்ததும் முதல் வேலையாய் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றான். அவனை பார்த்ததும் கமிஷனர் முறைத்தபடி, 'இவரோட பிள்ளைய கடத்தியவன அழைச்சுட்டு வாங்க...' என்றார்.
உள்ளே நுழைந்த ஆளை பார்த்து திடுக்கிட்ட சித்தார்த், தலைகுனிந்தான்.
'ஆறு நாள்... ஆறே நாள் தான்... உன் பிள்ளைய பாக்காமல் தவிச்சுப் போயிட்டியே... ஆறு வருஷமா நீ வருவே, உன்னை பாக்கலாம்ன்னு நான் காத்திருந்த வலி எப்படிப்பட்டதுன்னு உனக்கு தெரிய வேணாமா...' என்று சொல்லி, வெளியேறினார், சித்தார்த்தனின் அப்பா.
அந்த ஆறு நாள் சம்பவங்களின் அதிர்ச்சியிலிருந்தே சித்தார்த் இன்னும் மீளவில்லை. 'சிஸ்டர் வெரோனிகா வேறு புதிய பிரச்னைய கிளப்புகிறாரே...' என்று எண்ணியபடி அனுராக்கின் அறைக்குள் நுழைந்தான்.
அவன் ஹோம் ஒர்க் செய்வதாக நினைத்து, மனைவி, 'டிவி' பார்த்துக் கொண்டிருந்தாள். அனுராக்கின் கையில் இருந்த நோட்டை வாங்கி பிரித்துப் பார்த்தான் சித்தார்த்.
சிஸ்டர் வெரோனிகா சொன்ன அதே எண்: 66!
''இது என்ன நம்பர் அனுராக்?'' என்று கேட்டான்.
''இது வீட்டு நம்பர்ப்பா...''
''எந்த வீடு?''
''ஊர்ல தாத்தா இருக்கார் இல்லயா... அந்த வீட்டோ நம்பர். அங்க ஒரு ரூம் மட்டும் தான் இருக்கும். நம்ம வீடு மாதிரி எந்த வசதியும் இருக்காது...''
''சரி... அத ஏன் நோட்டு, புத்தகம் என எல்லாத்திலயும் கிறுக்குறே...'' 
''நானும், பெரியவனா ஆனதும், உங்கள அந்த வீட்ல போய் விட்டுடுவேன்ல,'' என்றதும், அதிர்ந்து, சிலையாக நின்றான் சித்தார்த்.