Saturday, February 27, 2016

தேர்வுக்கு தயாரா....



சென்னை, ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியீடான, 'மாணவனே... உன்னை உலகம் கவனிக்க...' நூலிலிருந்து:


தேர்வுக்கு முன் பதற்றம், மறந்து போகுமோ என்ற பயம் வருவதை தவிர்ப்பது எப்படி?
தேர்வு, 10:00 மணிக்கு எனில், குறைந்தது, ஒரு மணி நேரத்திற்கு முன், 9:00 மணிக்கே படிப்பதை நிறுத்தி, மனதை டென்ஷன் இன்றி, நெகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.
மேலும், தேர்வுக்கு முன் தளர்ச்சியின்றி படித்திருந்தால் மட்டுமே பதற்றமும், பயமும் போய், தன்னம்பிக்கை பிறக்கும்.

படிக்கும் போது பாடங்கள் எல்லாம் நினைவில் உள்ளன; ஆனால், தேர்வு அறைக்கு போனதும் எல்லாம் மறந்து விடுகிறதே...
'மக்கப்' செய்து படித்தால், மறந்து தான் போகும். பாடத்தை புரிந்து, படிக்க வேண்டும். மேலும், இந்தப் பாடம் இவ்வளவுதான் என்று மனதில் பிடிபடும் வரை, ஆழ்ந்து படிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், மறந்து போவது பற்றிய பயம் நீங்கும்.

பாடங்களை நன்கு படித்திருந்தும், படித்ததை தேர்வில் எழுத முடியாதது ஏன்?
தேர்வுக்கு முன், பாடங்களை பலமுறை படித்து பயிற்சி பெறுகின்றனர் மாணவர்கள். ஆனால், தேர்வுக்காக எத்தனை முறை, எழுதி பயிற்சி பெறுகின்றனர்! அதனால், பாடங்களை படிப்பதுடன் மட்டுமல்லாமல் எழுதி பார்ப்பதால், தேர்வில் பயம் நீங்கி, தைரியமாக எழுதி, நல்ல மதிப்பெண் பெறலாம்!

தேர்வு முடிவுகளை கண்டு அஞ்சி, சில மாணவர்கள் தற்கொலைக்கு துணிந்து விடுகின்றனரே...
தேர்வுக்கு முன் சுறுசுறுப்பாக இருப்பவன், தேர்வுக்கு பின் பரபரப்பாக இருக்க மாட்டான்.
தேர்வுக்கு முன், நேரம், கவனம் மற்றும் படிப்பில் இருக்க வேண்டிய ஆர்வத்தை, 'கொலை' செய்பவர்கள் தான், தேர்வுக்கு பின், மனசாட்சியின் உறுத்தலை பொறுக்க முடியாமல், 'தற்கொலை' செய்து கொள்ள முனைகின்றனர்!

படித்ததை எழுதி பார்க்குமாறு பெற்றோர் கூறுகின்றனர். ஆனால், அப்படி செய்வதால், நேரம் வீணாகுவதாக எண்ணுகிறேன். இது சரியா?
தான் உணர்ந்து, அறிந்த சில அனுபவ பாடங்களை உன்னுடன் பகிர்ந்து கொள்கின்றனர் பெற்றோர். இது, தவறில்லை.
நல்ல ஆலோசனைகளையும், கருத்துகளையும், வரவேற்க கற்று கொள்ளுங்கள். ஏனெனில், அவற்றில் சிறந்த ஒன்று, அரசனாக முடி சூட்டப்படும் என்ற ஒரு கூற்று உண்டு.
பெற்றோர் கூறுவதை, திறந்த மனதுடன் கடைப்பிடியுங்கள். அதில் பலன் தெரிந்தால், அதைப் பின்பற்றுங்கள் அல்லது உங்கள் ஞாபக சக்தியிலும், கிரகிக்கும் திறனிலும் உங்களுக்கு தன்னம்பிக்கை இருந்தால், உங்கள் வழியையே பின்பற்றுங்கள்!

ஒன்றை படிக்கும் போது, படித்து முடிக்காத பிற பாடங்கள் நினைவுக்கு வருவதை எப்படி தவிர்க்கலாம்?
இதற்கு, மனதிலுள்ள குழப்பங்களே காரணம். ஆழமாக படிக்காமல், அரைகுறையாக படிப்பதாலேயே இந்த சிரமம் வருகிறது.
ஒரு பாடத்தை எடுத்தால், 10 அல்லது 15 நிமிடங்களே இருந்தாலும், அதை மட்டுமே படிப்பது என தீர்மானித்து படிக்க வேண்டும். மேலும், அதைப்பற்றி குறிப்பு எடுத்து வைத்த பின்னரே, அடுத்த பாடத்திற்கு போக வேண்டும்.
எதை செய்தாலும், அதை முழு கவனத்துடன் செய்வேன் என முடிவெடுத்தால், இந்த பிரச்னை தீரும்.

கவனம் சிதறாதிருக்க வழிகள்?
முதலில், நம் கவனத்தை சிதைப்பவற்றை பட்டியலிட வேண்டும்; உதாரணம்: 'டிவி' மற்றும் சினிமா பார்த்து, அதைப் பற்றியே எண்ணுவது...
* அதிக நேரம் மொபைல் போன் உபயோகிப்பது.
* ஊர் சுற்ற நினைப்பது.
* விளையாட்டில் யாரோ, எப்போதோ செய்த சாதனைகளை தானே செய்தது போல் பேசுவது.
இவற்றை தவிர்த்து, உன் வளர்ச்சியைப் பற்றி சிந்தித்து, சாதித்தே தீருவேன் என்று உறுதியெடுத்து, படிப்பதில் கவனத்தை செலுத்த வேண்டும்.
மனதை தொந்தரவு செய்யாதபடி நல்லவற்றை மட்டும் சிந்தித்தால், கவனம் சிதறாது.

மனம் குழம்பும் போது படிக்க முடிவதில்லையே... என்ன செய்வது?
குழப்பத்தில் படிக்க முடியவில்லை என்பது உண்மை அல்ல; ஆர்வத்துடன் படிக்காததே குழப்பத்திற்கு காரணம்.
ஆர்வமின்மை + இலக்கின்மை = குழப்பம்.
ஊக்கம் + உழைப்பு = குழப்பம் கடந்த தெளிவு.

படிக்க இடையூறு ஏற்பட்டால் என்ன செய்வது?
எந்த மாதிரியான இடையூறு என்பதை கவனிக்க வேண்டும். தானாக வந்த இடையூறா, நீங்களே வரவழைத்து கொண்ட இடையூறா, உங்கள் கவனக் குறைவால் வந்த இடையூறா?
படிப்பதற்கு வேண்டிய சரியான மனநிலையையும், ஆர்வத்தையும் உன்னிடம் வைத்து கொள்ளாத காரணத்தால் வந்த இடையூறா என்பதை கவனித்து, இடையூறை களைய வேண்டும்.
இடையூறு கண்டு சோர்ந்து விடாமல், உங்களது விடா முயற்சியால் வெற்றி கொள்ளுங்கள்!

மொபைல் மற்றும் இணையதளம் போன்றவற்றில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்துவதால், படிப்பில் கவனம் சிதறுகிறது. இதை மாற்ற என்ன வழி?
எந்த அறிவியல் வசதியுமே, அதை நாம் எப்படி, எதற்காக பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே நம் வெற்றி அமைகிறது.
இணையதளத்தின் உதவியால் படிப்பிற்கான பல புது விஷயங்களை கற்கலாம்.
புத்திசாலிக்கு வறுமை கூட, நல்ல வாழ்வுக்கு அஸ்திவாரம் அமைத்து தரும். முட்டாளுக்கு, முதல்வர் பதவி கிடைத்தாலும், ஏதோ ஒரு வகையில் பிச்சைக்காரராகவே இருப்பார்.

என்னால் ஒரு மணி நேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக படிக்க முடியவில்லை; இதிலிருந்து மீள்வது எப்படி?
சிலரால் எதையும் தொடர்ச்சியாக செய்ய முடியாததற்கு பல காரணங்கள் உண்டு. குடும்ப சூழ்நிலை, உங்களை சுற்றி உள்ளவர்கள் நடந்து கொள்ளும் விதம், உங்கள் உடல் மற்றும் மன நிலை இவற்றாலும் தொடர்ச்சியாக படிக்க முடியாமல் போகலாம். அதனால், உங்கள் மனதிற்கு அன்புக் கட்டளையிடுங்கள்...
'அருமை மனமே... நான், நன்கு படிக்க உன் ஒத்துழைப்பு மிக முக்கியம். அங்குமிங்கும் அலைந்து என் மனோ சக்தியை வீணடிக்காதே. நான் இப்போது படிக்க போவது, நிச்சயமாக என் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும்.
'அதற்கு, மனமே நீ ஆர்வத்துடன் படிப்பில் ஈடுபட்டால் தான் என் ஆசை பூர்த்தியாகும்...' என வேண்டுங்கள்.
இப்பழக்கம், உங்களை பக்குவப்படுத்தும். திடமான சங்கல்பம் செய்து கொண்டால், ஒரு மணி நேரம் என்ன, பல மணி நேரம் கூட தொடர்ந்து படிக்க முடியும்.

காலையில் படிக்க துவங்கியதும் வரும் தூக்கத்தை தடுக்க என்ன வழி?
பத்து நிமிடம் தூங்கி எழுந்து, பின் படிக்கலாம். ஒரு சிறு, 'டெக்னிக்' கூறுகிறேன்...
காலையில் பல் தேய்க்கும் போது, விரலால் நாக்கை நன்றாக தேய்த்து வழித்தெடுத்து, அடிவயிற்றிலிருந்து சத்தம் எழுப்புங்கள். இது போல், இரண்டு, மூன்று முறை செய்தால், ஓரளவிற்கு தூக்கம் குறையும்.

அதிகாலையில் படிப்பது நல்லதா, இரவில் படிப்பது நல்லதா?
ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு நேரம், சக்தி மிக்க நேரமாக இருக்கும். அந்த நேரத்தில் அவர்களது மனம் இயல்பாகவே அமைதியாக இருக்கும்.
அப்போது படித்தால் மனதில் பதியும். அப்படிப்பட்ட நேரம், உங்களுக்கு காலையில் உள்ளதா அல்லது இரவில் உள்ளதா என, நீங்களே கவனித்து பார்த்து, அந்நேரத்தில் படியுங்கள். ஆனால், எப்போது படித்தாலும், ஆர்வத்துடன் படியுங்கள். ஆர்வம், கவனத்தை தரும். இரண்டும் உங்களுக்கு வெற்றியை தரும்.

தனியாக படிக்கலாமா அல்லது நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து படித்தால் நல்லதா?
உன்னிடம் கேட்டு தெரிந்து கொள்ள, பல செய்திகள் உள்ளன; உன்னிடம் பேசினாலே அவர்களால் ஊக்கத்துடன் படிக்க முடியும் என, உன் நண்பர்கள் நினைக்குமளவிற்கு நீங்கள் வளர வேண்டும்.
அந்நிலையை அடைவதற்கு முதலில் நீங்கள் தனியாக படியுங்கள். படித்ததை நினைவில் வைத்து கொள்வதில் திடமாக விளங்குங்கள்.
அதன்பின், புரிந்து கொண்டதை, நண்பர்களுக்கு எடுத்து சொல்லி உதவுங்கள்!

இரைந்து வாய்விட்டு படிப்பது நல்லதா அல்லது மனதுக்குள் படிப்பது நல்லதா?
இறைவனது நாமத்தை (பெயரை) ஓதி ஜபம் செய்பவர்கள், வாயாலும் உச்சரிக்கின்றனர்; உதடுகளை அசைத்தும் சொல்கின்றனர்; மவுனமாக மனதாலும் ஜபிக்கின்றனர். இவற்றுள், மூன்றாவதே அதிக பலனை தரும். மற்ற இரண்டும் சற்று குறைவான பலனை தரும் என்கிறது சாஸ்திரம். இந்த விதி படிப்பிற்கும் பொருந்தும்.
இரைந்து படிப்பது பிறருக்கு தொந்தரவாக இருக்கலாம்; மனதுக்குள் ஆழ்ந்து படித்தால் பிறருக்கு தொந்தரவாக இருக்காது. அதோடு, படிப்பதும் நன்கு புரியும்.

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இவையே வெற்றிக்கு இன்றியமையாத மூன்று!
— விவேகானந்தர்.