Sunday, June 5, 2016

ஒரு ரூபாய்க்கு நெய் வாங்கிக் கொண்டு பண்டரிபுரத்துக்கு வா

 

'ஒரு ரூபாய்க்கு நெய் வாங்கிக் கொண்டு பண்டரிபுரத்துக்கு வா' 

(கனவில் தோன்றி செய்த ஒரு அற்புதம்)

காஞ்சி மகானின் கருணை நிழலில்- புத்தகத்திலிருந்து

மகா பெரியவர் 1981-ஆம் வருடம் பண்டரிபுரத்தில் முகாமிட்டிருந்தார். வரிசையாக பக்தர்கள் மகானை தரிசித்துக்கொண்டு வரும்போது, கூட்டத்தின் நடுவே
வடநாட்டைச் சேர்ந்த சேட் ஒருவர்,பெரியவாளின் முன் ஒரு டின் நிறைய நெய் கொண்டுவந்து வைத்தார்.

அதைப் பார்த்த மகான்,"ஒரு ரூபாய்...ஒரு ரூபாய்..." என்று கூறினார். அங்கு கூடியிருந்த மக்களுக்கு மகான் எதற்காக அப்படிக் கூறுகிறார் என்று தெரியவில்லை. அவர் நிஜமாகவே ஒரு ரூபாய் கேட்பதாக நினைத்துக்கொண்டு,அங்கிருந்தவர்கள்
ஆளுக்கு ஒரு ரூபாய் வீதம் பணத்தை எடுத்தனர்.

மகான், தன் அருகில் இருந்த மடத்துச் சிப்பந்தியிடம் சொன்னார்; "அந்த சேட்டிடம் ஒரு ரூபாய்க்குத்தானே நெய் வாங்கி வரச்சொன்னேன்...ஏன் ஒரு டின் நெய் வாங்கி வந்தார் என்று கேள்!"

எல்லோரும் இதைக்கேட்டு வியந்து போனார்கள்.

பெரியவர் எப்போது இந்த சேட்டிடம் ஒரு ரூபாய்க்கு நெய் வாங்கிவரச் சொல்லி இருக்கக் கூடும்?" என்று விளங்காமல் விழித்தனர்.

இதைப் புரிந்துகொண்ட சேட், நிதானமாக பதில் சொன்னார்.

"என் மகளை யாரோ கடத்திக்கொண்டு போய்விட்டார்கள் நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தபோது,'ஸ்வாமிஜி' என் கனவில் தோன்றி, 'ஒரு ரூபாய்க்கு நெய் வாங்கிக் கொண்டு பண்டரிபுரத்துக்கு வா,உன் மகள் சேதமின்றி வீடு திரும்புவாள்' என்று கூறினார்.

சொன்னபடியே, மறுநாள் என் பெண் பத்திரமாக  வீட்டுக்குத் திரும்பிவிட்டாள்.அதான் பெரியவா சொன்ன ஒரு ரூபாய் நெய்க்கு பதிலாக ஒரு டின் நெய் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன்" என்று அவர் சொன்னதைக் கேட்ட பக்தர்கள் அனைவரும் வியப்பு அடைந்தனர்.

சேட்டுக்கு கனவில் தோன்றி, தான் சொன்னது வாஸ்தவம்தான் என்கிற உண்மையை அந்த மகான் எல்லோருக்கும் புரிய வைத்துவிட்டார் அல்லவா?

சர்வ வல்லமை படைத்த அந்த மகான் சகலத்தையும் அறிந்து, உதவவேண்டிய பக்தர்களுக்கு அவ்வப்போது தவறாமல் உதவி வருகிறார்.