Saturday, September 10, 2016

சன்கிளாஸ் வாங்கச்செல்லும் முன்... கேர்ள்ஸ் நோட் இட்!

முக அமைப்பு, ஸ்கின்டோன், ஹேர்ஸ்டைல் என பெண்கள் தங்களின் ஒவ்வொரு அம்சத்துக்கும் பொருத்தமான சன்கிளாஸைத் தேர்ந்தெடுக்கும் விதம் பற்றிச் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்டைலிஸ்ட் கல்பனா. கேர்ள்ஸ் நோட் இட்!

1. சதுர வடிவம் (Square shape)

உங்களுக்கு முக எலும்புகள் பக்கவாட்டில் சற்று நீளமாகவும், நெற்றி அகன்று விரிந்தும் இருக்கும்.  முகம் பார்ப்பதற்கு சற்று அகலமாகத் தெரியும் என்பதால், நீங்கள் ஆஃப் ஃப்ரேம் (Half frame), பட்டர்ஃப்ளை (Butterfly) ரகக் கண்ணாடி அணியும்போது கிளாஸிக் லுக் கிடைக்கும். ட்ரெண்டி லுக் விரும்புபவர்கள், கேட் ஐ (Cat Eye)  ஃப்ரேமுடைய கண்ணாடியைப் பயன்படுத்தலாம். சதுர, செவ்வக வடிவமுடைய ஃப்ரேம்கள் உங்கள் முகத்தை சற்று முதுமையாகக் காட்டும் என்பதால் தவிர்க்கவும். 

2. வட்ட வடிவம் (Round shape)

இந்த முக அமைப்பு நூற்றில் ஒருவருக்கே அமையக் கிடைக்கும். தாடை எலும்புகள் வளையமாகவும், கன்னம் சற்று அகலமாகவும்,நெற்றி சிறியதாகவும் என தனித்துவ லுக் உள்ளவர்கள். நீங்கள் ஃபிரேம் இல்லாத கிளாஸ்கள், நெர்டு டைப் (Nerd type),வேஃபரர்(wayfarer) கண்ணாடிகளை  அணியும்போது உங்களை இன்னும் ஸ்மார்ட்டாகக் காட்டும். உங்கள் முக அழகைக் கெடுத்து நீளமாகக் காட்டும் பட்டர்ஃப்ளை, செவ்வகம், சதுர வடிவக் கண்ணாடிகள் உங்களுக்கு வேண்டாம். 

3. ஹார்ட்டின் வடிவம் (Heartin shape)

நெற்றி சற்று உயரமாகவும், கண்கள் சிறியதாகவும், தாடை எலும்புகள் சற்றுக் கூர்மையாகவும் இருக்கும். நீங்கள் கேட்-ஐ, ஏவியேட்டர் (Aviator), ஃப்ரேம் இல்லாத கிளாஸ்களை (Rimless) தேர்வு செய்வது நல்லது. இந்த வகைக் கண்ணாடிகள் உங்களுக்கு ட்ரெண்டி, ஸ்மார்ட் லுக் தரும். வேஃபரர் (Wayfarer) கண்ணாடிகள் உங்கள் முகத்தைக் குறுக்கிக் காட்டுவதோடு பொருத்தம் இல்லாமல் இருக்கும் என்பதால், அவை உங்களுக்கு வேண்டாம். 

4. நீள்வடிவம் (Oval shape)

முகம் சற்று நீளமாகவும், கன்ன எலும்புகள் லேசாக துருத்திக்கொண்டும்,நெற்றி அகன்றும் இருப்பவர்களா நீங்கள்? உங்களுக்கான சிறந்த தேர்வு, பக்கவாட்டில் முட்டை போன்று வடிவமுடைய பைலட் (Pilot) வகைக் கண்ணாடிகள் மற்றும் கேட்-ஐ கண்ணாடிகள். வட்டவடிவக் கண்ணாடிகள்  உங்கள் தோற்ற மதிப்பை குறைத்துக்காட்டும் என்பதை குறித்துக்கொள்ளுங்கள்.




ஸ்கின்டோனுக்கு ஏற்ற சன்கிளாஸ்! 

ஸ்கின்டோனுக்குப் பொருத்தமான நிறத்தில் ஃப்ரேம் கொண்ட சன்கிளாஸ் அணியும்போது, தோற்றம் இன்னும் க்ளாஸ் ஆக இருக்கும். அதற்கு...

  எந்த வகை ஸ்கின்டோன் என்றாலும், வயதான தோற்றத்தைக் கொடுக்கக்கூடிய வெள்ளை நிற ஃப்ரேம்களைத் தவிர்த்துவிடுங்கள். 

லைட் ஷேடட் ஸ்கின்டோன் கொண்டவர்களுக்கு பிளாக், பிரவுன், டார்க் புளூ, ரெட் போன்ற ஃப்ரேம்கள் பொருத்தமாக இருக்கும்; லைட் கிரேயைத் தவிர்க்கலாம்.

ஸ்கின்டோன் டார்க் எனில்,  கறுப்பு, வெளிர் நிறங்கள் போன்றவற்றைத் தவிர்த்து ஊதா, கிரே போன்ற ஃப்ரேம்களைத் தேர்வு செய்யலாம். 

நீங்கள் அணியும் டாப்ஸின் நிறத்துக்கு கான்ட்ராஸ்ட் நிற ஃப்ரேம்கொண்ட சன்கிளாஸ் அணியும்போது ட்ரெண்டியா இருக்கும்.

ஹேர்ஸ்டைலுக்குப் பொருத்தமாக..! 

  ஹை - பன் வைத்து தலைவாரிக் கொள்ளும் போது நீள்வடிவ (Oval shape) கண்ணாடி அணி யலாம்.

ஃப்ரீ ஹேர்ஸ்டைலுக்கு ஆஃப் ஃப்ரேம்  கண்ணாடி பெஸ்ட் லுக் தரும்.

நடுவில் வகிடு எடுப்பவர்கள் பட்டர் ஃப்ளை ரகமும், பக்கவாட்டில் வகிடு எடுப்பவர்கள் ஏவியேட்டர் ரகமும் தேர்ந்தெடுக்கலாம்.

டிப்ஸ்... டிப்ஸ்...

நீங்கள் வாங்கும் சன்கிளாஸ் சூரிய ஒளியின் அல்ட்ரா வயலட் கதிர்களைத் தடுக்கும் தன்மை கொண்டதா என்பதை உறுதிசெய்து வாங்கவும். 

சன்கிளாஸின் வடிவமானது, கண் ரப்பை களில் படாமல், கண்களிலிருந்து தள்ளியும் இல்லா மல், புருவத்தில் பதிந்து இருக்குமாறு இருக்க வேண்டும்.

உங்களுடைய சன்கிளாஸ், உங்கள் முகத்துக்குப் பொருந்தாத விதத்தில் பெரிய அளவில் இருக்கக்கூடாது.  

காலை அல்லது மதிய நேரத்தில் சன்கிளாஸ் வா‌ங்குவதுதான் சிறந்தது. அப்போதுதான் கண்களுக்கு அது தேவையான அளவு பாதுகாப்பு அளிக்கிறதா என்பதை அறிய முடியும். 

இரவு நேரங்களில் கார் ஓட்டுபவர்கள் வெளிர் மஞ்சள் நிற சன்கிளாஸ்களைப் பயன்படுத்தலாம். இவற்றை பகலிலும் பயன்படுத்தலாம். கறுப்பு, அடர் நீல நிறக் கண்ணாடிகளை வாகனம் ஓட்டுபவர்கள் தவிர்க்க வேண்டும். 

சன்கிளாஸை தண்ணீர் தொட்டு துடைக்கக் கூடாது. அதற்கென உள்ள லென்ஸ் க்ளீனர் திரவத்தை, லென்ஸில் ஸ்பிரே செய்து வெல்வெட் துணியால் மட்டுமே துடைக்க வேண்டும்.

எந்த வடிவ முகத்துக்கும் ஏவியேட்டர் வடிவக் கண்ணாடிகள் பொருத்தமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.