Friday, September 30, 2016

அதிகரிக்கும் குழந்தைக் கடத்தல்...பெற்றோர்களே உஷார்!

 

தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 35 சதவீதத்தினர் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்கள். இவர்களில் ஒருநாளைக்கு சராசரியாக இரண்டு குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 600-க்கும் அதிகமான குழந்தைகளும், இந்த ஆண்டில் மட்டும் 200-க்கும் அதிகமான குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளதாக கூறுகிறது 'மிஸ்ஸிங் சைல்டு பீரோ' அமைப்பு.

பிளாட்பாரங்களில் வசிக்கும் ஏழை மக்களின் குழந்தைகளை குறிவைத்து சர்வ சாதாரணமாக குழந்தைக் கடத்தல் சம்பவம் நடைபெறுகிறது. தவிர, மருத்துவமனை, கோவில்கள், சுற்றுலா தளங்களை மையமாகக் கொண்டு குழந்தைகளைக் கடத்தும் கும்பல்கள் இயங்குகின்றன. இக்கும்பல்கள் இரண்டு விதமாக செயல்படுகின்றன. அன்றாட வயிறுப்பிழைப்புக்காக அவ்வப்போது குழந்தைகளைக் கடத்தி, குழந்தையில்லாதவர்களுக்கு விற்கின்றனர் கீழ்மட்ட கடத்தல் கும்பல். அதேப்போல பெரிய நெட்வொர்க்காக இயங்கும் கும்பல், மக்கள் நெருக்கம் கொண்ட பகுதியில் மக்களோடு மக்களாக கலந்திருந்து ஏதாவது குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து தனிமைபட்டு இருந்தால் உடனடியாக கடத்திவிடும். இப்படி முதலில் குழந்தையைக் கூட்டத்திலிருந்து தனிமை படுத்தும் நபர் அல்லது குழு அந்தப் பகுதியில் வசிப்பவராக இருப்பார். பின்னர் கடத்திய குழந்தையை ஒருவரிடமிருந்து மற்றொருவர் எனப் பல நிலைக் குழுவை அடைந்த பிறகு முக்கிய பார்ட்டிக்குச் செல்லும். கடத்தப்படும் குழந்தைகளுக்கு ஆயிரங்களில் இருந்து பல லட்சங்கள் வரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 

                                                                  

 

அரசு மருத்துவமனைகளில் வேலை செய்யும் சில செவிலியர்களின் உதவியுடன் அதிக அளவில் குழந்தைகள் கடத்தப்படுகின்றன. கடத்தப்பட்ட குழந்தைகளை, குழந்தைகள் இல்லாத தம்பதியர்கள், சட்டத்திற்கு புறம்பான முறையில், தத்தெடுத்துக் கொள்கிறார்கள். மருத்துவமனையின் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும்கூட இதுபோன்ற குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.

                                                              

 

குழந்தைக் கடத்தல் கொலைக்கு சமமான குற்றமாகும். ஆனாலும் கடத்தல் கும்பலை அவ்வளவு எளிதில் பிடிக்க முடியாத அளவிற்கு மக்களுடன் மக்களாக வாழ்ந்து வருகின்றனர். இதில், குழந்தைகளைப் பறிக்கொடுத்தவர்கள் தங்கள் குழந்தை எங்கு இருக்கிறது; உயிரோடு இருக்கிறதா; சாப்பிட்டதா என ஒவ்வொரு வேளையும் வேதனையில் தவித்து நடைபிணமாக வாழ்ந்துகொண்டிருப்பார்கள். குறிப்பாக கடத்தப்படும் குழந்தைகள் 24 மணிநேரத்திற்குள் மெயின் கும்பலிடம் ஒப்படைக்கப்படும். பின்னர் அக்குழந்தை தத்தெடுத்தல், பிச்சையெடுத்தல், குழந்தை தொழிலாளர், பாலியல், உடலுறுப்பு திருட்டு, சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. கடத்தப்படும் குழந்தைகளில் 10-20 சதவீத குழந்தைகள்தான் மீட்கப்படுகின்றனர் என்பதுதான் வேதனைக்குறிய செய்தி.

00:29

உங்கள் குழந்தைகளிடம் முன்பின் தெரியாத புதிய நபர்கள் பழகுவதையும், அவர்களுடன் அனுப்பி வைப்பதையும் தவிர்க்க வேண்டும். வெளியிடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது உங்கள் கண்பார்வையில் குழந்தைகள் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். குறிப்பாக தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என்பதால் குழந்தைகள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து வெளியே விளையாடச் செல்வார்கள். குடும்பத்துடன் குழந்தைகளை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லலாம். இதனால் குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டிய தருணம் இது.