Friday, January 20, 2017

தீடீர் நெஞ்சுவலி முதலுதவி என்ன?


தய நோய்கள்... உயிரைப் பறிக்கும் தொற்றா நோய்களில் முதலிடத்தில் இருக்கும் பிரச்னை. முன்பு எல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்ட இதய நோய்கள், இப்போது இளைஞர்களுக்குக்கூட ஏற்படுகின்றன. `பெண்களுக்கு ஹார்மோன் பாதுகாப்பு இருப்பதால் இளம் வயதில் இதய நோய்கள் ஏற்படுவதில்லை' என்று சொல்லப்பட்டாலும், மெனோபாஸுக்குப் பிறகு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற காரணங்களால் 40 வயதைக் கடந்த பெண்களுக்கும் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இதயத்தில் ஏற்படும் இரண்டு மிக மோசமான பாதிப்புகள், மாரடைப்பு மற்றும் திடீர் இதயத் துடிப்பு முடக்கம். இந்த இரண்டுமே, உயிரைப் பறிக்கும், உடனடி சிகிச்சை பெற வேண்டிய பாதிப்புகள். ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? திடீர் இதயத்துடிப்பு முடக்கத்துக்கு என்ன முதலுதவி என்று பார்ப்போம். 

மாரடைப்பும் திடீர் இதயத்துடிப்பு முடக்கமும்

`ஹார்ட் அட்டாக்' எனப்படும் மாரடைப்பும், `சடர்ன் கார்டியாக் அரெஸ்ட்' எனப்படும் திடீர் இதயத்துடிப்பு முடக்கமும் வேறு வேறு பிரச்னைகள். இதய ரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து ரத்தக்குழாய் குறுகுவது, இதய ரத்தக் குழாயில் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படுவதால், இதயத்தசைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, இதயத்திசுக்கள் உயிரிழப்பதை மாரடைப்பு என்கிறோம். 

உடல் முழுவதும் ரத்தம் பாய, இதயம் துடிக்க வேண்டும். இதயம் திடீரென்று துடிப்பதை நிறுத்துவதை திடீர் இதயத்துடிப்பு முடக்கம் என்கிறோம். இதற்கு, இதயத்துக்கு வரும் மின்னோட்டத்தில் மாறுபாடு ஏற்பட்டு (Fluctuations) இதயம் திடீரென தன் செயல்பாட்டை நிறுத்துவதுதான் காரணம். இந்த இரண்டுக்குமே இரண்டு வெவ்வேறு முதலுதவிகள் உள்ளன. அறிகுறிகளைச் சரியாகக் கணித்து, அதற்கு ஏற்ற முதலுதவியைச் செய்துவிட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதன் மூலம் உயிரிழப்பைத் தவிர்க்கலாம்.

திடீர் இதயத்துடிப்பு முடக்கம்

திடீரென பேச்சு, மூச்சு இல்லாமல் மயங்கி விழுந்துவிடுவார்கள். உடலில் எந்த அசைவும் இருக்காது. சுயநினைவு இருக்காது. ஏற்கெனவே  மாரடைப்பு வந்தவர்கள், வராதவர்கள் யாராக இருந்தாலும், இப்படி மயங்கிவிழுந்தால் அவர்கள் கன்னத்தைத் தட்டி சுயநினைவு இருக்கிறதா எனப் பரிசோதிக்க வேண்டும். 

இதயத்தில் காதைவைத்துக் கேட்க வேண்டும். தொடர்ந்து சில விநாடிகள் எந்த அசைவும் இல்லை என்றால் உடனடியாக, அவரின் மார்பின் நடுப்பகுதியில், மார்பு எலும்புகள் முடிவடையும் இடத்தில் நம் இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து, ஒரு நிமிடத்துக்கு 30 முறை வேகமாக அழுத்த வேண்டும். பிறகு, அவர் வாயில் நம் வாய் வைத்து, வேகமாக காற்றை ஊத வேண்டும். 30 அழுத்தத்துக்கு இரண்டு முறை மூச்சை ஊதுதல் என மாறிமாறிச் செய்ய வேண்டும். இந்த முதலுதவியை சி.பி.ஆர் (Cardiopulmonary Resuscitation - CPR) என்பார்கள். 

சி.பி.ஆர் முதலுதவி செய்யும்போது, சுற்றிலும் காற்றோட்டம் இருக்க வேண்டும். கும்பலாகச் சுற்றி நிற்பதைத் தவிர்க்க வேண்டும். மயங்கி விழுந்தவர்களுக்கு தண்ணீர், சோடா, ஜூஸ் போன்ற எதையும் புகட்ட முயற்சிக்கக் கூடாது. இதனால், தண்ணீர் நுரையீரலுக்குச் சென்று பிரச்னை பெரிதாக வாய்ப்புகள் அதிகம்.

திடீர் இதயத்துடிப்பு முடக்கத்துக்கு, `டீஃபிரில்லேஷன்' (Defibrillation) எனும் மின்னோட்ட சிகிச்சை தர வேண்டியது அவசியம் என்பதால், இதய நோய்க்கு சிகிச்சை தரும் அளவு வசதி உள்ள மருத்துவமனைக்குத் தாமதம் இன்றி கொண்டு செல்ல வேண்டும்.

மாரடைப்பு

நெஞ்சு பாரம், தோள்பட்டை வலி, அதிக அளவு வியர்வை வெளியேறுதல், கீழ்த்தாடை முதல் தொப்புள் வரை ஏதாவது ஒரு சில இடங்களில் ஏற்படும் வலி (உதாரணம், தொண்டை வலி) ஆகியவை இதன் அறிகுறிகள். 15 நிமிடங்களுக்கு மேல் நெஞ்சுப் பகுதியில் வலி நீடித்தால் கட்டாயம் மருத்துவ உதவியைப் பெற வேண்டும்.

மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு ஓரளவு சுயநினைவு இருக்கும். `நெஞ்சு வலிக்கிறது' என சைகையிலோ, வார்த்தைகளிலோ சொல்ல முயல்வார்கள்.

முதலில் அவர்களைக் காற்றோட்டமான இடத்தில் அமரவைக்க வேண்டும்.

தண்ணீர், சோடா, பழச்சாறு போன்றவற்றைத் தர வேண்டாம். இதனால், புரையேறி திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்படக்கூடும்.

ஆஸ்பிரின் 325 மி.கி மாத்திரை ஒன்றை உடனடியாகத் தர வேண்டும். இது ரத்தம் உறைதலைத் தடுக்கும். இதைக் கடித்து மென்று அல்லது சிறிதளவு தண்ணீரில் விழுங்கச் செய்யலாம். 

ஒருவேளை மாரடைப்பு ஏற்பட்டவர் சுயநினைவை இழந்துவிட்டால், இதயத்துடிப்பு நின்றுவிட்டால் அவருக்கு சி.பி.ஆர் முதலுதவி அளிக்கலாம். இதயத்துடிப்பு மீண்டும் வந்ததும், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

- வெ.வித்யா காயத்ரி


இதய நோய்களுக்கான காரணங்கள்

* சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்ளாமலோ அல்லது சர்க்கரை அளவை அறிந்துகொள்ளாமலோ இருப்பது.

* புகைபிடித்தல்

* உயர் ரத்த அழுத்தம்

* உடல் பருமன்

* மனஅழுத்தம்

* தேவையற்ற கொழுப்பு


மாரடைப்பைத் தவிர்க்க

யாருக்கு வேண்டுமானாலும் மாரடைப்பு ஏற்படலாம். அதைத் தவிர்ப்பதற்கான காலம் கடந்து போய்விடவில்லை. ஏற்கெனவே, மாரடைப்பு வந்திருந்தாலும் மீண்டும் வர வாய்ப்பு உள்ளது. இன்றே இதற்கான முயற்சியை எடுப்பதன் மூலம் மாரடைப்பைத் தவிர்க்கலாம். மருத்துவரை அணுகி எளியப் பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலம் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பைக் கண்டறியலாம். வர வாய்ப்பு உள்ளது என்றால், தவிர்ப்பதற்கான மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைப்பார். இவற்றைத் தவறாமல் எடுக்க வேண்டும். மேலும், புகையிலையைத் தவிர்ப்பது, உடல் பருமனைத் தவிர்த்து சரியான பி.எம்.ஐ அளவைப் பராமரிப்பது, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை, கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைப்பது, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், தினசரி உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம், மாரடைப்புக்கான வாய்ப்பைத் தவிர்க்கலாம்.