Monday, January 2, 2017

சித்திரை முதல் பங்குனி வரை எந்தக் கீரை கூடாது?

கீரை என்றாலே நம்மில் பலர் முகம் சுளிப்பது உண்டு. குழந்தைகளோ, `கீரையா? அய்யோ... ஆளை விடுங்கப்பா!' என தலைதெறிக்க ஓட்டம் பிடிப்பார்கள். உணவுப் பட்டியலில் அன்றாடம் சேர்த்துக்கொள்ளவேண்டிய உணவுகளில் கீரைகளுக்கு முக்கியமான இடம் உண்டு. காய்கறிகளை பூ, காய், தண்டு, இலை, கிழங்கு என்று ஐந்து வகையாகப் பிரிக்கலாம். இவற்றில், எளிதாகவும் விரைவாகவும் செரிமானம் ஆவது கீரைகள்தான். அதோடு, கீரைகளில் ஏராளமான சத்துக்களும் பலன்களும் கொட்டிக்கிடக்கின்றன.  

எந்தக் கீரை கூடாது

 

கீரைகளில் இரும்பு, கால்சியம், பீட்டாகரோட்டின், வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம் ஆகியவை அதிகம் உள்ளன. இவற்றில், பச்சையம் நிறைந்து உள்ளது. லெசித்தின் (Lecithin), கரோட்டினாய்டு (Carotenoid), ஆல்கலாய்டு (Alkaloid) மற்றும் ஆக்சாலிக் அமிலம் (Oxalic Acid), சிட்ரிக் அமிலம், மாலிக் அமிலம் போன்ற கனிமங்களும் நிறைந்து உள்ளன. கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கும்.

நோய்களிடம் இருந்து நம்மை, `வருமுன் காக்கும் உணவு' என்று கீரைகளைச் சொல்லலாம். மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கக்கூடியவை. உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் தேவையான அனைத்துச் சத்துக்களும் இவற்றில் உள்ளன.

நாம் உண்ணும் உணவில் உள்ள ஒரு பகுதி உடல் வளர்ச்சிக்கும், ஒரு பகுதி செரிமானத்துக்கும் உதவுகிறது. மற்றொரு பகுதி சத்தாக மாறி, உடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. மீதி உள்ள பகுதி உடலில் உள்ள நச்சுப்பொருட்களை, மலமாக வெளியேற்றுகிறது.

உடல் வளர்ச்சி மற்றும் உடலுக்குத் தேவையான எனர்ஜி!

ஒவ்வொரு கீரையிலும் ஒவ்வொரு சத்து உள்ளது. தினமும் கீரை சாப்பிடுவது சாத்தியமற்றது என்றால், அவ்வப்போது கிடைக்கும் விதவிதமான கீரைகளைக் சாப்பிடலாம். பதினைந்து நாட்களாவது கீரைகளை, காலையில் தனி உணவாகச் சாப்பிடுவது நல்லது. அவற்றில் உள்ள சத்துக்கள் உடல் வளர்ச்சிக்கும், உடலுக்குத் தேவையான எனர்ஜியைப் பெறவும் உதவுகின்றன.

இரவில் கீரையை சாப்பிடக் கூடாது? ஏன்?

இரவில் தூக்கத்தாலும் குளிராலும் செரிமான சக்தி குறைவாக இருக்கும். இரவில் கீரை சாப்பிட்டால், வயிற்றில் பூச்சிகள் உண்டாகலாம். செரிமானக் கோளாறு, வயிற்று எரிச்சல், வயிற்று மந்தம் போன்றவை ஏற்படலாம். செரிமானம் ஆக, மலத்தை வெளியேற்ற, வெறும் கீரைகள் மட்டும் உதவுவது இல்லை. எனவே, கீரைகளை ஏதேனும் காய்கறிகளுடன் சேர்த்துச் சாப்பிட்டால், செரிமானக் கோளாறு ஏற்படாமல் இருக்கும். `கீரைகளைத் தனியாக உண்பதால், பல நன்மைகள் கிடைக்கின்றன' என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.


 

கீரைகளை வாங்குவதற்கு முன்னர் கவனிக்கவேண்டியவை...

புதிதாகவும் பசுமையாகவும் இருக்க வேண்டும்.

இலைகள் மஞ்சள் நிறமாக இருந்தால், அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

இலைகள் வாடி, வதங்கி இருக்கக் கூடாது. அதிகம் ஓட்டை உள்ள இலைகளாக இருந்தால், அந்தக் கீரையைத் தவிர்ப்பது நல்லது.

பூச்சியால் அதிகம் தாக்கப்பட்ட கீரைகளை வாங்கக் கூடாது. ஆர்கானிக் கீரைகளாக பார்த்து வாங்குவது நல்லது.


எந்தப் பருவத்துக்கு, எந்தக் கீரை கூடாது?

கோடைகாலத்தில் ( சித்திரை, வைகாசி) அரைக்கீரை ம ற்றும் புளிச்சகீரையைத் தவிர்க்க வேண்டும்.

காற்று அதிகம் உள்ள காலங்களில் (ஆனி, ஆடி) அரைக்கீரை, கீரைத்தண்டு, சிறுகீரை, பருப்புக்கீரை மற்றும் முள்ளங்கிக்கீரை போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

முன் மழைக்காலங்களில் (ஆவணி, புரட்டாசி) சிறுகீரை, பருப்புக்கீரை, வெந்தயக்கீரை, முள்ளங்கிக்கீரை மற்றும் பசலைக்கீரை ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது.

பின் மழைகாலங்களில் ( ஐப்பசி, கார்த்திகை) அகத்திக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை மற்றும் கீரைத்தண்டு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

முன் பனிக்காலங்களில் (மார்கழி, தை) அகத்திக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை மற்றும் முள்ளங்கிக்கீரை ஆகியவை வேண்டாம்.

பின் பனிக்காலங்களில் ( மாசி, பங்குனி) சிறுகீரை, பசலைக்கீரை மற்றும் பருப்புக்கீரையைத் தவிர்க்கலாம்.

பொன்னாங்கண்ணிக்கீரை, கொத்தமல்லிக்கீரை, புதினா, முருங்கைக்கீரை, மணத்தக்காளிக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, கறிவேப்பிலை போன்றவற்றை எல்லாப் பருவங்களிலும் சாப்பிடலாம்.


 

எந்த நேரத்தில், யாருக்கு கீரை ஆகாது?

இரவில் உண்ணக் கூடாது.

தலைக்குக் குளித்த நாட்களில் சளி, ஆஸ்துமா மற்றும் சைனஸ் உள்ளவர்கள், கீரையை உணவாக எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

கீரையை அசைவ உணவுகளுடன் சேர்த்து உண்ணக் கூடாது. மலச்சிக்கல், செரிமானக் கோளாறு ஏற்படும்.

கபநோய் உள்ளவர்கள் எல்லாப் பருவங்களிலும் கீரை வகைகளைத் தவிர்ப்பது நல்லது.


 

செய்யவேண்டியவை...

தினசரி 50-100 கிராம் அளவு கீரை வகைகளை நம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் தினமும் கீரையை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

கீரைகளைச் சமைக்கும் முன்னர், இலைகளை ஆய்ந்து, சுத்தமான குளிர்ந்த நீரில் நன்கு அலச வேண்டும். நீரை வடிகட்டி, பின் பயன்படுத்த வேண்டும்.

கீரையை வேகவைக்க குறைந்த அளவு நீரைப் பயன்படுத்த வேண்டும்.

கீரையை சோடா பவுடர் உடன் சேர்த்துச் சமைக்கக் கூடாது. மாறாக, சிறிதளவு புளித் தண்ணீர் தெளித்துப் பயன்படுத்தலாம்.