Friday, January 20, 2017

ட்ராஃபிக் அப்டேட்ஸ் கூகுள் மேப்ஸில் தெரிவது எப்படி?



சோக் நகர்ல இருந்து கோடம்பாக்கம் பத்து நிமிஷம் தான்னு நினைச்சு கிளம்பிட்டு டிராபிக்னால‌ ஆபீஸ்க்கு லேட்டா போயிருக்கீங்களா? ஆபீஸ்ல ஒருத்தன் கூகுள் மேப்ஸ்ல டிராபிக் பாத்துட்டு சீக்கிரம் கெளம்பிட்டேன் என சொல்லி வெறுப்பேத்துவான்? அதெல்லாம் இருக்கட்டும், கூகுல் மேப்ஸ்ல‌ ரூட் வர்றது கூட ஒகே. ஆனா டிராபிக் அப்டேட்லாம் எப்படி வருது னு யோசிக்கிறீங்களா? உங்க குழப்பத்துக்கு பதில் இதோ....

2009-ம் ஆண்டுவரை டிராபிக் சென்சார்ஸ் என்று கூறப்படும் CCTV கேமராக்கள் மற்றும் டிராபிக் கண்காணிப்பு கருவிகள் மூலம் கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் சேவையில் டிராபிக் பற்றிய தகவல்களை பகிர்ந்து வந்தது. இந்த டிராபிக் கண்காணிப்பு கருவிகள் ராடார் அல்லது இன்ஃப்ரா ரெட் கதிர்வீச்சுகள் மூலம் வாகனங்கள் எவ்வளவு வேகமாக நகர்கின்றன என்பதை கணித்து வந்தன‌. இவ்வகை கருவிகளை அரசு, தனியார் என பல தரப்பட்ட நிறுவனங்கள் பயன்படுத்தி வந்தன. அந்நிறுவனங்களிலிருந்து கூகுள் தகவல்களை பெற்று வந்தது.

கூகுள்

ஆனால் இந்த தகவல்களை அறிவதில் சிலநடைமுறை சிக்கல்கள் இருந்து வந்தன‌. கருவிகள் பொதுவாக அதிகம் பயன்படுத்தப்படும் சாலைகளிலேயே பொருத்தப்படும். மேலும், தகவல் சென்றடையும் நேர இடைவெளி அதிகம். எனவே, அதிகம் பயன்படுத்தப்படாத சாலைகளை பயன்படுத்தும் போது, எதிர்பாராத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் தகவல் பெறுவது  கடினமாக இருந்து வந்தது. 

2009-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் Crowdsourcing என்று கூறப்படும் தொழில்நுட்பத்திற்கு மாறியது. அதாவது மக்களிடமிருந்தே தகவலை பெற்று அதனை சீர் செய்து மக்களுக்கே திரும்பி அளிக்கும் முறை. இதற்கு முதல் தேவை மக்களின் மொபைல் போனில் "லொக்கேஷன்" வசதி ஆன் செய்திருக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் எங்கு இருக்குறீர்கள், எந்த வேகத்தில் நகர்கிறீர்கள் என்பது குறித்த தகவல் கூகுளை சென்றடையும். அது மட்டுமின்றி ஒரே இடத்திலிருந்து பல வாகனங்களின் லொக்கேஷன் வந்து சேருமாயின் அந்த இடத்தில் எத்தனை வாகனங்கள் இருக்கின்றன, என்ன வேகத்தில் நகர்கின்றன என்ற தகவல்களை கூகுள் எளிதாக பெறும்.

நீங்களும், உங்கள் முன்னால் இருக்கும் வாகனமும், அதற்கு முன்னால் இருக்கும் வாகனமும் என பல பேர் ஒரே நேரத்தில் தகவல்களை பகிர்வீர்கள். இது மட்டுமின்றி மெதுவாக அனைத்து வாகனமும் நகர்வது போக்குவரத்து நெரிசலை குறிக்கும். இங்கே கூகுள் நிறுவனம் செய்யும் வேலை என்னவென்றால், எத்தனை வாகனங்கள் இருக்கின்றன, எவ்வாறு நகர்கின்றன என்பதனை வைத்து போக்குவரத்து நெரிசலில்லை, சிறிய அளவு நெரிசல், மிக நெரிசல் என கணக்கிடுவது தான். ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களின் ஓட்டுனர்கள் எப்பொழுதும் தங்கள் லொக்கேஷனை ஆன் செய்து வைக்கின்றனர். இது கூகுளுக்கு பெரிய உதவியாக இருக்கின்றது.

நீங்கள் எங்கு இருக்குறீர்கள் என்பதை ஒருவர் பார்த்துக்கொண்டே இருக்கிறாரா என்பது குறித்த அச்சம் உங்களுக்கு தேவை இல்லை என்று கூறுகிறது கூகுள். நீங்கள் யார் என்பதை மேற்பார்வை இடாமல் தான் தங்களின் லொக்கேஷன் பயன்படுத்தப்படுகிறதாம். இவற்றின் துல்லியத்தன்மை பெருமளவில் ஒத்துப்போவதுதான் இதன் வெற்றிக்கு காரணம். இப்போ நீங்க லொக்கேஷன் ஆன் பண்ணி வண்டி ஓட்டினா அது யாரோ ஒருத்தருக்கு உதவியா இருக்கும்ணு சொல்லுது கூகுள்...

கூகுள் மேப்ஸில் ட்ராஃபிக்கை பார்ப்பது எப்படி?

maps.google.com என்ற தளத்தில் உள்ள Menu-வை க்ளிக் செய்து Traffic-ஐ தேர்ந்தெடுக்கவும்.