Sunday, January 8, 2017

சிறுநீரகக் கல்... ஏன், எதற்கு, எப்படி?

சிறுநீரகக் கல்', `கல்லடைப்பு' என்பது இன்று சர்வ சாதாரணமாக பலருக்கும் வரும் பிரச்னை ஆகிவிட்டது. `நீரின்றி அமையாது உலகு.' நம் உடலும் அப்படித்தான். உடலின் ஒவ்வொரு சிறு செயல்பாட்டுக்கும் அத்தியாவசியமான பொருள் நீர். அந்த நீரைத் தேவையான அளவு பருக மறந்த அறியாமையில் இருந்திருக்கிறது உழைக்கும் கூட்டம். இது இன்றைக்கு மட்டுமல்ல, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரும் இருந்திருக்கிறது என்பதற்கு சிறுநீரகக் கல் குறித்த வரலாற்றுச் செய்திகளே சான்று! 

சிறுநீரகக் கல்

`கலங்கியதோர் தண்ணீர்தான் குடித்த பேர்க்கும் 
வாட்டமாய் வரம்பு தப்பித் திரிந்த பேர்க்கும் 
வந்து சேரும் கல்லடைப்பு'
 

- என்று பாடினார் யூகி முனிவர். `நான் சிறுநீரகக் கல்லுக்கு அறுவைசிகிச்சை செய்ய மாட்டேன்; மருத்துவம் செய்யவே பரிந்துரைப்பேன்' என்றார் ஹிப்போக்ரட்டஸ். ஆக, நீண்டகாலமாக சிறுநீரகக் கல் என்ற பெருங்கல்லை மனிதன் சுமந்துகொண்டு வந்திருக்கிறான் என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. 

மாசில்லாத, சுடவைத்து ஆறவைத்த தண்ணீரைக் குடித்தபோது அதிகம் வராத சிறுநீரகக் கல்லடைப்பு பிரச்னை, இப்போது பிளாஸ்டிக் குடுவையில், ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் செய்து, பல தர நிர்ணயக் கட்டுப்பாட்டுடன் தருவிக்கப்படுவதாகச் சொல்லப்படும் தண்ணீரை அருந்தும் காலத்தில் அதிகரித்துவருகிறது.  பதப்படுத்தப்பட்ட அனைத்து உணவுகளிலும், துரித உணவிலும், புதுப்புது பன்னாட்டு உணவிலும், பாட்டியின் ஊறுகாய் உணவிலும் எக்கச்சக்கமாகச் சேர்க்கப்படும் உப்புதான் சிறுநீரகக் கல் உருவாகப் பிரதான காரணம். 

சிறுநீரக கல்

இது போதாதென்று, காலையில் வீட்டில் ஒரு டி.டி.எஸ் அளவுள்ள தண்ணீர், மதியம் அலுவலகத்தில் வேறு ஒரு கம்பெனியின் வேறு டி.டி.எஸ் அளவுள்ள தண்ணீர்... இப்படி ஒரே தண்ணீரே பல அவதாரங்களில் நம் உடம்புக்குள் செல்ல, அதற்குப் பரிச்சயம் இல்லாமல் விழிக்கின்றன நம் உடலின் மரபணுக்கள். 

`சுத்தமான தண்ணீர், குடிமக்களின் அடிப்படை உரிமை' என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். ஆனால், அது பாட்டிலில் அடைக்கப்பட்டு விலைக்குக் கிடைத்தால் மட்டும் போதாது; குறைந்தபட்சம் அடி பம்ப்பிலோ, தெருமுனைக் குழாயிலோ வர வேண்டும். `குளோபல் வார்மிங்' எனும் புவி வெப்பமடைதல் பிரச்னை, சுட்டெரிக்கும் கோடை, பனிப் பாறை இளகல், எதிர்பாராத அளவில், எதிர்பாராத இடத்தில் மழை... போன்ற பிரச்னைகளை மட்டும் ஏற்படுத்துவது இல்லை. மறைமுகமாக இந்தச் சூழல் இடப்பாடுகள் மனிதனின் சிறுநீரை அதிகரித்தோ அல்லது வற்றவைத்தோ கல் பிரச்னையில் கொண்டு வந்து நிறுத்துகிறது. 

நாகரிகம் எனக் கருதியும், அவசரத்துக்கு `ஒதுங்க' வழியில்லாத வாழ்விடச் சூழலில் சிறுநீரை அடக்கும் பழக்கம் இப்போது அதிகமாகிவிட்டது. `சிறுநீர், அடக்கக் கூடாத 14 வேகங்களுள் ஒன்று' என்கிறது சித்த மருத்துவம். சிறுநீரகக் கல் உருவாவதற்கு, சிறுநீரை அடக்கும் பழக்கமே மிக முக்கியக் காரணம். 

பாதிப்புக்கு ஆளான பெண்

'கல்லடைப்பு' என்று மருத்துவர் சொன்னதும் பதறவேண்டியது இல்லை. '10 மி.மீ வரையுள்ள கல்லைப் பார்த்து மிரளத் தேவை இல்லை' என்கிறது இப்போதைய விஞ்ஞானம். வலியைச் சமாளித்து, கல்லைக் கரைக்கும் மருந்தே இதற்குப் போதுமானது. அதே நேரத்தில், `அட... இருந்துட்டுப் போகட்டும்' என்ற அலட்சியமும் கூடாது. கல்லடைப்பு சில நேரங்களில் சிறுநீரகச் செயலிழப்பு வரை கொண்டு சேர்த்துவிடும். 

கல்லைக் கரைக்கும் உணவுகள்...

* இவற்றில் வாழைத்தண்டுக்கே முதல் இடம். 

வாழைத்தண்டு

* சுரைக்காயும் வெள்ளைப் பூசணியும் கற்கள் வராமல் தடுப்பதில் கில்லாடிகள். 

* வெள்ளரி, வாழைத்தண்டு போட்ட பச்சடியும், பார்லி கஞ்சியும் கற்காலத்தின் பொற்கால உணவுகள். 

* பொங்கல் போன்ற விசேஷ நாட்களில், வீட்டு வாசலில் நாம் கட்டும் கண்ணுப்பீளைச் செடி, காலைக் குத்தும் நெருஞ்சி முள் போட்டு, தேநீர் அருந்தினால் கற்கள் கரைந்து வெளியேறும். 

* சிறுநீரகக் கல் இருக்கிறது என்பதற்காக, கால்சியம் தவிர்க்க, பால், மோர்... என சுண்ணாம்பு படிந்த சுவர்ப் பக்கமே போகாமல் இருப்பவர்களுக்கு ஒரு செய்தி... மிகக் குறைவான கால்சியம்கூட கண்டிப்பாகக் கல்லை வரவழைக்கும். அதிகபட்ச கால்சியம்தான் கூடாதே தவிர, அளவான கால்சியம் கல் நோய் தீர அவசியம். 

சிறுநீரகக் கல் போன்ற நோயில் இருந்து விடுபட மருந்து, மாத்திரைகள் மட்டும் போதாது. அன்பு. அரவணைப்பு, இயற்கையின் மீதான அக்கறை அத்தனையும் தேவை.