Saturday, January 7, 2017

“தோல்வியில் பேரானந்தம் அடைதல்” : வெற்றிக்கான அரசியலும், உண்மையும்...!


கொஞ்சம் இப்படியாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள், "உங்களுக்கு நாளை ஒரு முக்கியமான பரீட்சை இருக்கிறது. அது, எந்த மாதிரியான பரீட்சை என்றால்... அதில், நீங்கள் வென்றால்... உங்களை உலகமே கொண்டாடும்; உங்கள் தேசம், உங்களுக்கு உயரிய விருதுகளை அளிக்கும்; உங்களிடம் பணம் வந்து குவியும்.  அந்தப் பரீட்சையில் வெல்வது உங்களுக்கு அவ்வளவு கடினமானதும் அல்ல. கொஞ்சம் முயன்றால் நீங்கள் அதில் வெல்லவும் செய்யலாம். பணம், புகழை இறுகப்பற்றிக் கொள்ளலாம். ஆனால், இப்போது உங்கள் மனது வேறொன்றை நினைக்கிறது. அது அந்த வெற்றிக்கு அஞ்சுகிறது. வெற்றிக்கு அஞ்சுகிறதென்றால்... வெற்றி தரும் மகிழ்ச்சிக்கு அஞ்சுவதில்லை. வெற்றி அழைத்து வரப்போகும் ஆடம்பரங்களுக்காகவும், அது தரப்போகும் அழுத்தங்களுக்காகவும் அஞ்சுகிறது. உங்கள் எளிய மனது காதலிலும், இயற்கையிலும் கரைய விரும்புகிறது. இப்போது சொல்லுங்கள்... நீங்கள் எதனைத் தேர்ந்தெடுப்பீர்கள்...? அழுத்தங்களைத் தரப் போகும் வெற்றியையா அல்லது எளிமையான, அழகான வாழ்க்கையைத் தரப் போகும் தோல்வியையா...?" 

தோல்வியில் பேரானந்தம் கொள்ளுதல்!

நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று எல்லாம் தெரியவில்லை. ஆனால், ஃபின்லாந்தின் குத்துச்சண்டை வீரர் ஓல்லி மாகி தேர்ந்தெடுத்தது தோல்வியைத்தான். ஆம், ஓல்லி மாகி ஃபின்லாந்தின் ஃபெதர் வைட் பாக்ஸர்.  ஃபின்லாந்தின் ஓர் எளிய நகரத்தில் மனம் ததும்பத்ததும்ப ரெய்ஜா மீது காதல்கொண்டு வாழ்ந்து வருகிறார். இயல்பாக அவருக்கு குத்துச்சண்டை மீது விருப்பம் இருக்கிறது. அது வெற்றியைத் தரும், பணம் தரும் என்பதற்காகவெல்லாம் இல்லை. செடியில் இசையுடன் ஒரு பூ பூப்பதுபோல, அவருக்குள் குத்துச்சண்டை மீதான விருப்பம் இயல்பான ஒன்று. ஐரோப்பாவுக்கு எதிரான அமெச்சூர் போட்டிகளிலும் வெல்கிறார். ஒரு கரத்தில் குத்துச்சண்டையையும், இன்னொரு கரத்தில் ரெய்ஜாவையும் பற்றி அழகாகச் சென்றுக்கொண்டிருக்கிறார். 

ஒரு நன்னாளில் எல்லாம் மாறுகிறது. ஓல்லி மாகியை முன்வைத்து ஒரு விளையாட்டு வணிகச் சூதாட்டம் நடக்கத் தொடங்குகிறது. அவர் ஃபின்லாந்துக்காக அமெரிக்காவின் டேவி மூருடன் மோத வைக்க ஏற்பாடு நடக்கிறது. இந்தப் புள்ளியிலிருந்து அவர் வாழ்க்கையில் அவர் மனதின் வேர்களிலிருந்து  பூத்த இயல்பான பூவைத் தூக்கி வீசும் அளவுக்குக் காற்று வீசத் தொடங்குகிறது. அவரைச் சுற்றி ஒரு வலை பின்னப்படுகிறது. பண்டமாக மாற்றப்படுகிறார். அதாவது, அவரை விற்பது... அவரின் மூலமாக விற்பது. பொருட்களின் வணிகவிற்பனைக்கு அவர் முன்னிறுத்தப்படுகிறார். இப்போது அவரின் ஆன்மாவின் உந்துதலுக்காக மட்டும் விளையாட முடியாது. பொருட்களின் விளம்பரத் தூதுவராக முன்னிறுத்தப்படுவதால்... இப்போது அதற்காகவும் விளையாட வேண்டும். அது மட்டுமல்லாமல், இவர் பயிற்சி செய்வதைப் படமாக்க ஒரு குழு வருகிறது. இப்போது அவர் விளையாடுவதற்காக மட்டும் பயிற்சி செய்ய முடியாது...  இந்த படத்துக்காகவும் பயிற்சி செய்ய வேண்டும்.  

ஃபெதர் வைட் பிரிவில் அவர் விளையாட வேண்டுமென்றால், அவர் உடல் எடையைக் குறைக்க வேண்டும். குறுகிய காலத்தில் உடல் எடையைக் குறைப்பதற்காகக் கடுமையான பயிற்சிகள் செய்ய நேரிடுகிறது. இதற்காகப் பல மணிநேரம் ஆவி குளியல் (Steam Bath) எடுக்கிறார். உடல் எடை குறைகிறது. ஆனால், உடலின் மொத்த நீர்ச்சத்தையும் இழக்க நேரிடுகிறது.  இது மட்டுமல்லாமல், எதிர்த்து விளையாடும் டேவியை தன்னுடைய வில்லனாகப் பார்க்கச் சொல்கிறார்கள்.  எதிர்த்து விளையாடுவதால் அவர் எப்படி எதிராளி ஆவார்... என்று எண்ணும் ஓல்லியின் கிராமிய மணம், எதிலும் லயிக்க முடியாமல் தடுமாறுகிறது. இதற்கெல்லாம் மேலாக ரெய்ஜா மீதான காதல் வேறு...!  

ஓல்லி The Happiest Day in the Life of Olli Mäki

குத்துச்சண்டை போட்டி நடக்கச் சில தினங்கள் இருக்கும் நிலையில், பயிற்சியாளருக்குத் தெரியாமல்  பயிற்சி நடக்கும் ஊரிலிருந்து வெளியேறி, ரெய்ஜாவைப் பார்க்கத் தன் சொந்த ஊருக்குச் செல்கிறார்... சந்தோஷமாகச் சில நாட்களை அவருடன் செலவழித்துவிட்டு மீண்டும் பயிற்சியில் கலந்துகொள்கிறார். இப்போது அவருக்கு ஒன்று நன்றாகப் புரிகிறது. நாம் இந்தப் போட்டியில் வென்றால், ஒரு முழுமையான பணமாக மாறிவிடுவோம். யாரோ ஒருவருடைய பொருளை விற்பதற்காக, நாம் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அந்த வெற்றி பிறருக்கு வேண்டுமானால் மகிழ்ச்சி தரலாம். அனால், நமக்கு அழுத்தங்களை மட்டும்தான் தரும் என்று உணர்ந்தவராக, போட்டியில் கலந்துகொண்டு... சில நிமிடங்களிலேயே எதிராளியிடம் தோல்வியுற்று ரிங்கிலிருந்து வெளியேறுகிறார். 

இதுகுறித்து அவர் கிஞ்சித்தும் கவலைக் கொள்ளவில்லை. அவர் முகத்தில் நிம்மது ததும்புகிறது. அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள், "தோல்வி கண்ட இன்றுதான் உங்கள் வாழ்நாளில் கடினமான தினமா...?".

அதற்கு அவர், "இல்லை இல்லை... இன்று நான் இலகுவாக உணர்கிறேன். சீக்கிரம் தோற்றுவிட்டேன் அல்லவா...?" என்கிறார். 

வெற்றிபெறும் நாள்தான் மகிழ்ச்சியான நாள் என்னும் கற்பிதம், பொதுபுத்தியில் படிந்திருக்க... தோல்வி கண்ட இந்தத் தினம்தான் என் வாழ்நாளில் மகிழ்ச்சியான நாள் என்று புன்னகை ததும்ப காதலி ரெய்ஜாவைப் பார்க்கச் செல்கிறார். அவருடன் நதியில் கல் எறிந்து விளையாடுகிறார். 

இது எதுவும் சுவாரஸ்யத்துக்காக எழுதிய வரிகள் இல்லை. அத்தனையும் ஃபின்லாந்து குத்துச்சண்டை வீரர் ஓல்லி மாகி வாழ்வில் நிகழ்ந்த உண்மை.  ஓல்லி மாகியின் வாழ்க்கையைத் தழுவி, 'The Happiest Day In The Life Of Olli Mäki' என்ற பயோபிக் எடுக்கப்பட்டுள்ளது. அதில் வரும் காட்சிகள் இவை.

படம்தானே... மிகையாகச் சொல்லி இருப்பார்கள் என்று நினைக்காதீர்கள். படத்தைப் பார்த்த ஓல்லியும், ரெய்ஜாவும் தங்கள் வாழ்க்கை அப்படியே பதியப்பட்டிருக்கிறது என்று நெகிழ்ந்து பாராட்டி இருக்கிறார்கள்.

வெற்றிக்கான அரசியலும்... உண்மையும்!

ஓல்லி மேகிஇதை, அப்படியே நம் விளையாட்டு மற்றும் கல்விச் சூழலுடன் பொருத்திப் பாருங்கள். நம் மனம் ஒன்றை இயல்பாக விரும்பும். அதில், நம்மை நிரூபிக்க நினைப்போம். ஆனால், அதில் சில வெற்றிகளை நாம் காண்பித்த பிறகு... நம் பந்தயப் பொருளாக மாற்றப்படுவோம். அதுதானே நடக்கிறது இங்கே...? டோனியும், கோலியும் அவர்களுக்காக  மட்டும் இங்கே  விளையாட  முடியாதுதானே... அவர்கள் விளம்பரத் தூதுவர்களாக இருக்கும் நிறுவனங்களுக்காகவும் விளையாட வேண்டும். இவர்கள் தோற்றால் அந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பீடு குறையும். கல்விச் சூழலில், மாணவர்கள் தங்களுக்காக மட்டும் படிக்க முடியாது. பள்ளியின் நல்ல பெயருக்காகவும் படிக்க வேண்டும். இவர்கள் மாநில மதிப்பெண் எடுத்தால்தான் பள்ளிக் கட்டணத்தை உயர்த்த முடியும். இது எவ்வளவு அழுத்தம் தரும்....?

"இது வீரர்களின், மாணவர்களின் நலனுக்காகத்தானே...? அவர்கள் அதிக போட்டிகளில் வென்றால்... அதிக மதிப்பெண்கள் பெற்றால்... அவர்கள் வாழ்க்கைத்தரம்தானே உயரும்... அதிக பணம் வரும்தானே...?" 

வீரர்கள் வெல்வதிலும்... மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதிலும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அது ஓர் ஆரோக்கியமான சூழலில் நடக்க வேண்டும். நம் பிள்ளைகளை வணிகப் பொருள்களாக மாற்றி நடக்கக் கூடாது. அப்படி நடக்குமென்றால், அது இறுதியில் அசிங்கமான சூதாட்டத்தில்தான் போய் முடியும்... கிரிக்கெட்டில் நமக்கு அந்த அனுபவம் நிறைய இருக்கிறது.  வெற்றி என்ற ஒரே நோக்கத்துக்காகத்தானே கிருஷ்ணகிரியிலும், சத்தியமங்கலத்திலும், நாமக்கல்லிலும் எந்த அறமும் இல்லாமல் பள்ளிகள் திருட்டுத்தனத்தில் ஈடுபடுகின்றன. 

வெற்றி மட்டும் மகிழ்வல்ல... நமக்கு மனம் ஒவ்வாத விஷயங்களில் ஏற்படும் தோல்வியும் அழகானதுதான். ஓல்லி உணர்ந்ததுபோல, தோல்வி கண்ட அந்தத் தினம்தான், வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான நாளாகவும் இருக்கலாம். 

பின்குறிப்பு:

'The Happiest Day In The Life Of Olli Mäki'  சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் ஜனவரி 6 திரையிடப்பட்டு, பார்வையாளர்களின் பரவலான பாராட்டைப் பெற்றது.