Saturday, February 18, 2017

‘உடனடி’ கலாசாரம்... புற்றுநோய்க்குக் காரணமாகும்!

பெயரைக் கேட்டாலே நடுக்கத்தை ஏற்படுத்தும் நோய், புற்றுநோய். குழந்தைகள் தொடங்கி முதியோர்வரை, யாரை வேண்டுமானாலும் பற்றிக்கொள்ளத் துடிக்கும் அரக்கன் இது. புற்றுநோய் உருவாகக் காரணம் என்ன? மருத்துவமும் அறிவியலும் எத்தனையோ ஆயிரம் காரணங்களை அடுக்குகின்றன. இருந்தாலும் முக்கியமான ஒரு காரணம், நம் வாழ்க்கை முறை! முக்கியமாக உடனடி கலாசாரம்.

மரங்கள் வெட்டப்படுவதைப் பார்த்துக்கொண்டே கடந்துபோகிறோம். நச்சுக் கழிவுகள் குப்பைகளாகக் கொட்டப்படுவதைச் சாதாரணமாகப் பார்க்கிறோம். பிளாஸ்டிக் கவருக்குள் அடைக்கப்பட்டு, `ஆறு மாதங்களுக்குக் கெட்டுப் போகாது' என்கிற உத்தரவாதத்தோடு சந்தைக்கு வரும் உணவுகளை வாங்கிச் சாப்பிடுகிறோம். புகையை சுவாசிக்கிறோம்; நச்சுக் கலந்த தண்ணீரைக் குடிக்கிறோம்; ரசாயனங்களும் பூச்சிக்கொல்லிகளும் சேர்ந்திருக்கும் உணவைச் சாப்பிட்டு வாழ்கிறோம்... ஆக, புற்றுநோய் வரத்தானே செய்யும்? 

பிளாஸ்டிக் ஆதிக்கம்

இன்றைய பரபரப்பான உலகில், மற்றவரிடம் அக்கறைகொள்ளவோ, கரிசனத்தோடு நடந்துகொள்ளவோ முடியாத நிலையில்தான் நம்மில் பலர் இருக்கிறோம். அதோடு, இன்றைய உலகில் வேகமாகப் போட்டி போடுவதை முன்னிட்டு உடனடி கலாசாரத்துக்குப் பழகிவிட்டோம். இந்த உடனடி கலாசாரத்தை மாற்றிக்கொள்வதில் இருந்தே மாற்றத்தைத் தொடங்கிவிடலாம். `இன்ஸ்டன்ட்' அல்லது `ரெடி டு ஈட்' சமாசாரங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு தொடங்கி, முதல் நாள் செய்ததை ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்த நாள் சாப்பிடுவது வரை எங்கெங்கும் அவசர யுகப் பயன்பாடே வியாபித்து இருக்கிறது. 

நாம் சமைக்கும் உணவு சில மணி நேரங்களிலேயே கெட ஆரம்பித்துவிடும் என்பது இயற்கையின் நியதி. புளிக்கத் தொடங்குவது, பூஞ்சைகள் வளர ஆரம்பிப்பது என உயிரியல் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக நிகழ்வது இயல்பு. அந்த இயற்கையைச் சிதைத்துவிடுகின்றன உடனடி சாப்பாட்டுச் சமாசாரங்கள். பூஞ்சை வளராமல் இருக்க ஆன்டிஃபங்கஸ், நறுமணம் கெடாமல் இருக்க நைட்ரஜன் ஃப்ளஷ்ஷிங்... இன்னும் என்னென்னவோ தேவைகளுக்காக விதவிதமான ரசாயனங்கள் சேர்க்கப்பட்டுத்தான் `உடனடி உணவு' என சந்தைக்கு வருகின்றன. அதுவும் பாலிதீன் பை அல்லது பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு வரும் அந்த உணவுகளை ஃப்ரிட்ஜுக்குள்தான் வைக்கிறோம். இது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ளும் விஷயம்தானே! 

மாசடைந்த நிலம்

`மூத்த நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்' என்கிறது பண்டைய தமிழ் மருத்துவம். வாய்ப்பு இருக்கும்போது சமைத்து, வசதியாக ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிடலாம் என்கிறது இன்றைய தமிழ்க் குடும்பம். பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை ஊற்றி ஃப்ரிட்ஜில் வைப்பது, காய் கனிகளை பிளாஸ்டிக் பையில் பிரித்து வைப்பது,  முதல் நாளே காய்களை நறுக்கி பிளாஸ்டிக் பையில் போட்டு ஃப்ரிட்ஜில் வைப்பது... இவையெல்லாம் நம் வாழ்க்கையை வேகமாக முடித்துக்கொள்ள நாமே வகுத்துக்கொள்ளும் வழிகள். 

அதிகச் சூட்டிலும், அதிகக் குளிரிலும்தான் பிளாஸ்டிக்கில் இருந்து `டயாக்ஸின்' வாயு வெளியாகும். இரவு முழுவதும் ஃப்ரிட்ஜுக்குள் இருக்கும் பிளாஸ்டிக் பையில் இருந்து கசியும் டயாக்ஸின், உள்ளே இருக்கும் பீன்ஸ் துண்டுகளுக்குப் போயிருக்கும். பிறகு, அந்த பீன்ஸ் பொரியல், புரோட்டீன் தருமோ என்னவோ... கண்டிப்பாகப் புற்றுநோயைத் தரக்கூடும். 

புற்றுநோய்க்கான காரணிகளில் மிக முக்கியமாகப் பேசப்படுவது பிளாஸ்டிக்கும் டயாக்ஸின், பென்சீன் வகையாறாக்களும்தான். சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகைமை வெளியிட்டு இருக்கும் புற்றுநோய்க்கான முக்கியக் காரணிகளின் பட்டியலில், தொகுதி 1-ல் பிளாஸ்டிக் துணுக்குகள் உள்ளன. (தொகுதி 1 காரணி என்றால், அது உறுதியாகப் புற்றுநோயைத் தோற்றுவிக்கும். தொகுதி 2, 3 எல்லாம் அவ்வளவு உறுதிப்படுத்தாத காரணிகள்).

`நீர்க் காய்கறியைக் கூட்டாக வைக்க வேண்டும்; பிஞ்சுக் காயைப் பச்சடியாகவும், முற்றிய காயைப் பொரியலாகச் செய்ய வேண்டும். அது மட்டுமல்ல; காய்கறியைக் குழம்பில் சேர்க்க புளிக்கரைசலில் வேகவிடவும் வேண்டும்' என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். `புளியில் வேகவைத்தால் அதன் புரதச்சத்து, கனிமங்கள் வீணாவது இல்லை. நீர்க் காய்கறிகளில் மிதந்து நிற்கும் வைட்டமின்கள், வற்றவிடாமல், வடித்துக் கொட்டாமல் கூட்டாகச் செய்யும்போது அதன் பயன் சற்றும் கெடாது' என்கிறது தேசிய உணவியல் கழகம். 

ரெடிமேட் உணவுகள்

சரி... ரெடி டூ ஈட் வேண்டாம். உடனடி கலாசாரத்தைத் தவிர்த்துவிடுவோம். அப்படியானால், மாற்று உணவு என்ன? நிறைய இருக்கின்றன. முக்கியமானது அவல். கைப்பையில் கொஞ்சம் சிவப்பரிசி அவலும் சின்னத் துண்டு பனை வெல்லமும் எடுத்துச் சென்றால், மாலைப் பசிக்கு உடனடி அவல் இனிப்பு தயார். கால் மணி நேரம் ஊறவைத்த அவலும் வெல்லமும் உடலுக்கு உறுதியையும் கூடவே இரும்புச் சத்து, வைட்டமின் பி சத்தையும் தரும். 

உடனடியாகச் செய்யக்கூடியது கேழ்வரகு லட்டு. கேழ்வரகு, கால்சியம் நிறைந்த ஒரு தானியம். அதை வாணலியில் வறுத்து, பனைவெல்லம் அல்லது வெல்லத்தை நன்கு உதிர்த்து அதில் கிளறிப்போட்டு, சூடாக இரண்டு டீஸ்பூன் நெய்விட்டு சூட்டோடு உருண்டையாகப் பிடித்துவையுங்கள். இரும்பு, கால்சியம், புரதம் இன்னும் உடலுக்குத் தேவையான பல கனிமங்கள் நிறைந்த இந்த உருண்டை ருசியோடு பசியாற்றும். 

சர்க்கரைநோய் இருப்பவர்கள், பொரி வாங்கிக்கொள்ளலாம். அத்துடன் கொஞ்சம் மஞ்சள் தூள், காரம் சேர்த்து பொட்டலம் கட்டிக்கொள்ளலாம். இப்படி நிறைய உண்டு. 

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு... உடனடி கலாசாரத்துக்கும்!