Monday, April 15, 2013

திருத்தலாம்; தப்பில்லை! ஆனா...


'என்னோட நண்பன் ஒருத்தன் சமீப காலமா குடிக்க ஆரம்பிச்சிருக்கான். 'ஏண்டா உனக்கு இந்த வேண்டாத புதுப் பழக்கம்? என்னாச்சு உனக்கு?'ன்னு கேட்டேன். 'நீயும் கொஞ்சம் குடிச்சுப் பாரு! அப்போ தெரியும் இதன் சுகம்'கிறான். இத்தனைக்கும் மத்தவங்களைக் குடிக்க வேணாம்னு உபதேசம் பண்ணிட்டிருந்தவன் அவன். பலரைக் குடிப் பழக்கத்திலிருந்து திருத்தியும் இருக்கான். அவனா இப்படின்னு என்னால நம்பவே முடியலை!' என்று, மாதப்பன் தனது நண்பரின் மீதான ஆதங்கத்தை என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

'என்ன செய்யறது மாதப்பன்... தண்ணியில விழுந்தவனைக் காப்பாத்துறபோது, அவன் நம்மையும் சேர்த்துத் தண்ணியில மூழ்கடிக்கப் பார்ப்பான். அதுதான் யதார்த்தம். அதை எதிர்பார்த்து நாம உறுதியா நிக்கணும். மத்தவங்களைத் திருத்திக் கரைசேர்க்க நினைக்கிறது நல்ல விஷயம்தான். ஆனா, அதுக்கு முன்னே நாம அந்தக் கொள்கையில உறுதியா இருக் கணும். அது முக்கியம்!' என்றேன். அதோடு, அவருக்கு ஒரு கதையும் சொன்னேன்.  

'அது ஒரு ரம்மியமான புல்வெளி. அங்கே தினமும் மேய வரும் பசுக்களில் ஒரு கன்னுக்குட்டியும் உண்டு. பசுக்களெல்லாம் மேய்ச்சல்ல ஈடுபட்டிருக்கும்போது, இந்தக் கன்னுக்குட்டி அந்தப் புல்வெளியில் ஒரு ஓரமா தனியா துள்ளி விளையாடிக்கிட்டு இருக்கும். புல்வெளிக்குப் பக்கத்திலேயே ஒரு குட்டை இருந்துச்சு. அதுல அழுக்குத் தண்ணி தேங்கி இருக்கும். அதை நெருங்கும்போதே துர்நாற்றம் வீசும். அந்தக் குட்டையில் தினமும் ஒரு குட்டிப் பன்றி வந்து குதிச்சு வெளையாடும்.

இதை ரெண்டு மூணு நாளாக் கவனிச்சுது கன்னுக்குட்டி. சுத்தம், சுகாதாரத்தைப் பத்தி பன்னிக்குட்டிக்கு எடுத்துச் சொல்ல விரும்புச்சு. குட்டைக்குக் கிட்டப்போய், 'ஏ... குட்டிப் பன்னி! நான் சொல்றதைக் கேளு. அது ரொம்பக் கெட்ட தண்ணி. பூச்சிங்கல்லாம் இருக்கு. இந்தத் தண்ணியில குதிச்சு விளையாடினா உனக்கு வியாதிதான் வரும்'னு சொல்லிச்சு. ஆனா, அந்தக் குட்டிப் பன்றி அதைக் காதிலேயே போட்டுக்கலை. இப்படியே பல நாள், கன்னுக்குட்டி உபதேசம் பண்றதும், பன்றிக்குட்டி அதை அலட்சியம் பண்றதுமாவே போச்சு.

ஒருநாள் பன்னிக்குட்டி சொல்லுச்சு... 'சரி, நீயும்தான் தினம் தினம் எனக்கு புத்திமதி சொல்லிட்டிருக்கே! நமக்குள்ள ஒரு ஒப்பந்தம் போட்டுக்கு வோம். ஒருநாள், ஒரே ஒருநாள் நீ வந்து இந்தக் குட்டையிலே காலையிலே இருந்து சாயங்காலம் வரைக்கும் இருந்து பாரு. உனக்கு இது பிடிக் கலைன்னா நானும் இன்னியோட இந்தக் குட்டையில குதிக்கிறதை நிறுத்திக்கிறேன்'னுச்சு.

கன்னுக்குட்டி யோசிச்சுது. 'சரி! பன்னிக் குட்டியைத் திருத்தணும்னா இந்தச் சவாலை ஏத்துக் கிட்டுத்தான் ஆகணும்'னு முடிவு பண்ணி, 'தடால்'னு அந்த அழுக்குக் குட்டையில குதிச்சுது.

கொஞ்ச நேரம் ஆச்சு! அந்தக் குட்டையில் சூரிய ஒளி படறதால, நீரின் இதமான வெதுவெதுப்பு உடம்புக்கு சொகமா இருந்துச்சு. நேரம் ஆகஆக, துர்வாடையும் பழகிப்போச்சு. பூச்சிங்க கடிக்கிறதுகூட ஒருவகையான மசாஜ் மாதிரி இதமா இருந்துச்சு. 'ஆஹா! இந்த சொகம் தெரியாம இத்தனை நாள் இருந்துட்டோமே'னு நினைச்சுது. பன்னிக்குட்டிக்கு நன்றி சொல்லிச்சு. அதுக்கப்புறம் கன்னுக்குட்டியும் தினசரி அந்த அழுக்குக்குட்டையில குதிக்க ஆரம்பிச்சிருச்சு. ஆக, பன்னியைத் திருத்த நினைச்ச கன்னுக்குட்டி, தானும் அதனோடு சேர்ந்து கெட்டுப் போச்சு!

அதனால, அடுத்தவங்களைத் திருத்துறதுக்கு முன்னாடி, அதுக்கான தகுதி நமக்கு இருக்கா, நாம நம்ம காலை ஸ்டெடியா ஊனி இருக்கோமான்னு பார்க்கிறது முக்கியம். இல்லேன்னா, உங்க நண்பருக்கு நேர்ந்த கதிதான் நேரும்!' என்றேன்.

பெருமூச்சு விட்டார் மாதப்பன். தன் நண்பரைத் திருத்துவதற்குத் தான் தகுதியானவன்தானா என்று அவர் யோசிப்பதாக எனக்குத் தோன்றியது.