Thursday, August 29, 2013

என்று தணியும் இந்த இன்ஜினீயரிங் மோகம்..



 ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்... எல்லாம் கொஞ்சம் மேலே பாருங்க. ஓகே, இப்போ கொசுவத்தியைப் பத்தவைப்போம்.

 ஓர் அப்பாவி இளைஞன். கூடவே அவனது அப்பாவி அப்பா. அந்த அப்பாவி அப்பாவின் கையில் ஒரு மஞ்சள் பை. அதில் சில ரூபாய் நோட்டுக்கட்டுகள். பையனின் கண்களில் கலக்கம். அப்பாவின் கனவுகளில் கலர் கலர் பலூன்கள். 'எப்படியாச்சும் இவன் மெக்கானிக்கல் இன்ஜினீயராகிட்டா மோட்டார்லேயே வேலை வாங்கிப்புடலாம்’. மகனின் நினைப்போ, 'லயோலா காலேஜ்ல விஷ§வல் கம்யூனிகேஷன் படிக்கணும்னு நினைச்ச என்னை இப்படி பாழுங்கிணத்துல தள்ளிவிட்டுட்டாரே’. எக்ஸ்.ஒய். இஸட் எஸ்டேட், ராயல் இம்பீரியல் ரோடு என்றெல்லாம் கல்லூரியின் அட்ரஸ் போட்டிருந்தது.

ஆனால், அன்று இந்த உரையாடல் நடந்த இடம் ஒரு ரைஸ் மில் கட்டடம். ''சிட்டிக்கு அவுட்டர்ல 500 ஏக்கர்ல, பெருசா பில்டிங் கன்ஸ்ட்ரக்ட் ஆகிட்டு இருக்கு. அநேகமா ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங்குக்கே அடுத்த வருஷம் அப்ரூவல் கிடைச்சிரும். யூ டோன்ட் வொர்ரி. சென்ட்ரலைஸ்டு ஏ.சி. ஃபெசிலிட்டியோட ஹாஸ்டல் இருக்கும். பையன் ஊட்டியில வளர்ந்த மாதிரி லீவுக்கு கலரா வருவான் பாருங்க. ஹாஸ்டல் டெபாசிட் 50,000 ரூபா. அப்புறம் காலேஜுக்கு காஷன் டெபாசிட் 20,000 ரூபா... அப்புறம் லைப்ரரி ஃபீஸ் 5,000... மெஸ்ல வெஜிடேரியன்னா, மாசம் 5,000 ரூபா, நான்-வெஜிடேரி யன்னா 8,000 ரூபா. உங்க வசதியைப் பார்த்து சேர்த்து விடுங்க. பஸ் கட்டாயம், வருஷத்துக்கு 10,000 மட்டும்தான்'' அடுக்கிக்கொண்டே போனார் அந்த முன் நெற்றியில் பனங்காய் தோலைப்போல கொத்தாய் முடி மடங்கிக் கிடந்த கல்லூரியின் அட்மிஷன் ஆபீஸர்.

இன்று... அந்த அப்பாவி இளைஞனுக்கு முன் நெற்றியில் முடிகள் கொட்டி மலையாள ஹீரோ ஃபகத் ஃபாசில் சாயலில் இருக்கிறான். இன்ஜினீ யரிங்கெல்லாம் வேலைக்காகாது என எப்போதோ முடிவெடுத்து, தனி ரூட்டில் டிராவல் செய்து இதோ இந்தக் கட்டுரையை டைப் செய்து கொண்டிருக்கிறான். (ஒரு விளம்பரம்...!) மேட்டருக்கு வருவோம். ஆண்டு தோறும் யாரோ ஒருவருக்காக அண்ணா யுனிவர்சிட்டிக்கு கவுன்சிலிங் போகும் வழக்கத்தைக்கொண்டிருக்கும் எனக்கு, விதவிதமான பிள்ளை பிடிக்கும் கும்பலைப் பார்த்த அனுபவம் உண்டு. கூவிக்கூவி அழைக்கும் அந்தக் கிராதகர்களை நம்பிப்போய் ஏமாந்தவர் களையும் பார்த்திருக்கிறேன். இதோ அவற்றுள் சில...

 சோடாபுட்டி, நீளக் கிருதா வைத்து ம.பொ.சி-க்கே சவால் விடும் மீசை யோடு ஒருவரும் கன்னம் பெருத்த, ரெட்டை நாடிகொண்ட கிட்டத்தட்ட மதன் பாப் போன்ற ஒருவரும் கையில் தங்கள் கல்லூரியைப் பற்றிய குறிப்பேட்டோடு (புரோச்சர்) விளக்கம் கொடுத்தனர். ''எங்க முனுசாமி இன்ஜினீயரிங் காலேஜ்ல எல்லா ஃபெசிலிட்டியும் இருக்கு. நிறைய கேம்பஸ் இன்டர்வியூ வருது. லாஸ்ட் இயர் நிறைய யுனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர்ஸ் இருக்காங்க. சிட்டிக்கு வெளியே நல்ல ஆம்பியன்ஸ்ல நிறைய லேப், வொர்க்ஷாப் ஃபெசிலிட்டியோட எங்க காலேஜ் இருக்கு. ஹாஸ்டல் ஃபீஸும் உங்களுக்கு அஃபர்டபிளா இருக்கும்'' என ஏதேதோ சொன்னதை நம்பி சொந்தக்காரப் பையனை முனுசாமி இன்ஜினீயரிங் காலேஜில் சேர்த்தும் விட்டோம். முதல் வருடம் பல்கலைக்கழகத் தேர்வு சமயம் ஏ.ஐ.சி.டி.இ (அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்) முனுசாமிக்கே ஆப்பு வைத்தது. கல்லூரியில் அடிப்படைக் கழிப்பறை வசதிகூட இல்லாமல் நடத்தியமைக்காக அப்ரூவல் கேன்சல் செய்த கொடுமை அது. கவுன்சிலிங் அட்ராசிட்டியின் உச்சம், துண்டுப் பிரசுரம்தான். ஒவ்வொரு கல்லூரியின் கையேடுகளை யும் பார்த்தால், இந்தியாவிலேயே தலைசிறந்த கல்லூரிக்கான பில்டப் இருக்கும். நெட்டில் இருந்து சுட்ட ஏதோ ஒரு வெளிநாட்டு லேப் படம், எங்கோ எப்போதோ எடுத்த வொர்க்ஷாப் படங்கள், கட்டவே கட்டப்பப்படாத, ஆனால் மாயா சாஃப்ட்வேரில் த்ரீ டைமென்ஷனில் உருவான கல்லூரியின் வரைபடம் அப்படியே ஆளை அசத்தும். அப்படி ஒரு காலேஜைத் தேடிப் போனால், கல்யாண மண்டபமோ, ரைஸ் மில் போன்ற கட்டடமோ உங்களைப் பார்த்து சிரிக்கும். ''இது ஃபர்ஸ்ட் இயர் டெம்ப்ரவரி பில்டிங்தான் சார். பிரமாண்டமா கட்டடம் உருவாகப் போகுது. உங்க சன் ஃபைனல் போறப்போ யுனிவர்சிட்டியா காலேஜை மாத்திட பிளான் இருக்கு'' என்றெல்லாம் அள்ளி விடுவார்கள் அந்தக் கல்லூரியின் முதல்வர் மற்றும் தாளாளர்.

ஏ.சி. வால்வோ பஸ் படமெல்லாம் கல்லூரிக் கையேட்டில் பார்த்ததோடு சரி. நீங்கள் கட்டிய 10,000 டெபாசிட்டை மறந்துவிட வேண்டியதுதான். நாய் வண்டியை டிங்கரிங் பண்ணியது போலவே இருக்கும் அந்த காலேஜ் பஸ்ஸை அதற்கு முன் நீங்கள் சுந்தரா டிராவல்ஸில் பார்த்திருக்கலாம். கம்ப்யூட்டர் லேப் என்று ஏதோ மைசூர் இன்ஃபோசிஸ் உள்பக்க வியூ படத்தைச் சுட்டு அந்தக் கையேட்டில் போட்டி ருந்தது காலேஜுக்குப் போனால்தான் புரியும். இன்னமும் பிடறி பெருத்த, 'பூத் மண்டை’ கம்ப்யூட்டர்களை வைத்துக்கொண்டு அதற்கு 'சர்வதேசத் தரத்திலான கணினி மையம்’ என்ற பில்டப்.

 கல்லூரிக்கான லேப், வொர்க்ஷாப்பெல்லாம் பளபளவென இருக்கும். ஆனால் கல்லூரியில் இருக்காது. குழப்பமா இருக்கா? ஆம். அதே கல்லூரி நிர்வாகத்துக்குச் சொந்தமான இன்னொரு பாலிடெக்னிக்கில் அவை இருக்கும். எப்படியும் அடுத்த இன்ஸ்பெக்ஷனுக்குள் கட்டிவிடலாம் என்ற நம்பிக்கையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பாலிடெக்னிக்கிற்குப் போய் பரிதாப மாகப் படிப்பார்கள் இந்த அப்பாவி மாணவர்கள். அடுத்த ஏ.ஐ.சி.டி.இ. அண்ணா பல்கலைக்கழகத்தினரின் விசிட்டுக் குள் லேபும் வொர்க்ஷாப்பும் கட்டிவிட்ட காலேஜ்களும் உண்டு. அப்படியும் வட்டிக்குப் பணம் கிடைக்காததால் கட்ட முடியாமல் அப்ரூவல் கேன்சலாகி மூடப்பட்ட கல்லூரிகளும் உண்டு. மெஸ்ஸில் பீங்கான் பூரி, டால்டா பொங்கல், பவுன்ஸர் இட்லி, ரப்பர் தோசை என மிரட்டியெடுப்பார்கள். மெஸ்ஸுக்குப் பயந்தே இரண்டாம் ஆண்டிலிருந்து 'டேஸ்காலர்’ ஆகிவிட வேண்டி இருக்கும். அதற்குள் நம் காசைத் தின்று செரித்திருப்பார்கள்.

 ஓ.கே. இப்போ நிகழ்காலத்துக்கு வருவோம். சமீபத்தில் ஊரிலிருந்து தனக்கே தெரியாமல் பாப் மார்லேவைப் போல முடி வளர்த்த ப்ளஸ்-டூவை இரண்டு வருடம் படித்துத் தேறியவனோடு சொந்தக்காரர்கள் வந்தார்கள். ''பையனுக்கு கவுன்சிலிங் வந்தோம்'' என்றார்கள். ''என்ன கோர்ஸ் சேர்த்து விடப்போறீங்க?'' என்றேன். ''பையன் சைக்கிள் பஞ்சர்லாம் பார்ப்பான்பா. வீட்டுக்குப் பக்கத்துல டாஸ்மாக் இருக்கிறதால குடிக்க ஆரம்பிச்சிட்டான். அவங்க அப்பாவோட குட்டி யானையை எடுத்து நல்லா ஓட்டுறான். டே... பல்லைக் காட்டுடா மாமாகிட்ட. பான்பராக் போட்டே வாய் இப்படி ஆகிடுச்சு தம்பி. அதான் காலேஜ்ல சேர்ந்து மெக்கானிக்கல் இன்ஜி னீயரிங் படிச்சா திருந்திடுவானு சேர்க்க வந்தோம்'' என்றது சாட்சாத் பையனின் அம்மாவே தான். மஞ்சளாய் சிரித்தான் அவன். ''இன்டெர்நெட்லாம் போவியா தம்பி?'' என்றேன்.

''அப்படின்னா?'' என்றான்.

முதல்முறையாக இன்ஜினீயரிங் படித்ததற்காக...அதிலும் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்ததற்காக வருத்தப்பட்டேன்!