Saturday, September 28, 2013

புகைப்படம் என்பது வெறும் புகைப்படம்தானா? - கோபிநாத்

டிரங்க் பெட்டியைத் திறந்தவுடன் கண்ணில் படுகிற மாதிரி தன் அம்மாவின் புகைப்படத்தை ஒட்டிவைத்திருப்பான் பொற்செழியன். பெட்டிகள் திறந்து மூடும் இரும்புச் சத்தங்கள், கடந்து போகிறவர்களின் தோள் இடிப்புகள், வார்டனின் 'சைலன்ஸ்' உத்தரவுகளுக்கு மத்தியில் 10 விநாடிகளேனும் தன் அம்மாவின் புகைப்படத்தை ஆழமான ஒரு பார்வை பார்க்கத் தவற மாட்டான். 'அந்த 10 விநாடிகள் செழியன் என்ன நினைத்துக்கொள்வான்?' என்றோர் எண்ணம் தினந்தோறும் எனக்குள் எழும். பெட்டியில் ஒட்டப்பட்டிருக்கும் புகைப்படத்தின் சிறிய சைஸ் போட்டோ ஒன்று, செழியனின் பர்ஸில் இருக்கும். சாப்பிடுவதற்கு முன், இரவு உறங்கப் போகுமுன்... என அவ்வப்போது பர்ஸைத் திறந்து அம்மாவின் போட்டோவை செழியன் பார்த்துக்கொள்வான். ஐந்து வயது வரை தன்னோடு வாழ்ந்த அம்மாவின் நினைவாக செழியனிடம் இருக்கும் ஒரே விஷயம் அந்தப் புகைப்படங்கள் மட்டும்தான்!

புகைப்படங்கள் வெறும் காட்சிப் படிமங்கள் அல்ல. ஒவ்வொரு புகைப்படமும் வாழ்க்கையை, பகிரமுடியாத உணர்வை, வலியை, அருகாமையை, அன்பை, காதலை, இயலாமையை, குற்ற உணர்வை, காமத்தை, கோபத்தை, தவிப்பை அல்லது வேறு ஏதோ ஒன்றை மனதுக்குள் கொட்டிவிட்டுப் போகிறது. என் தாத்தா வீட்டின் கூடத்தில் காந்தி, நேரு, காமராஜர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்... என தேசத் தலைவர்களின் படங்கள் வரிசையாக இருக்கும். 'அவங்க எல்லாம் நம்ம சொந்தக்காரங்க' என்றுதான் என் கடைசித் தம்பி ரொம்ப நாள் சொல்லிக்கொண்டு இருந்தான்.

கல்யாண வீட்டில் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் விரலால் கொம்பு வைத்து விளையாடுகிற புகைப்படம், ஒற்றை ரோஜாவின் அருகில் நின்று கொடைக்கானலில் தேனிலவு ஜோடிகள் எடுத்துக்கொள்கிற புகைப்படம், அரசியல் தலைவர்கள் நடந்துகொண்டே கை அசைப்பது போன்ற போஸ்டர் படங்கள், ஹோவென்று கொட்டுகிற அருவி நம் மீதும் சாரல் தெளிப்பது போல் நனைக்கிற படம், தாடி வைத்த சாமியார் பீடி குடிக்கும் காசி புகைப்படம்... என ஒவ்வொன்றும் ஏதோ ஒன்றைச் சொல்லிக் கொண்டே இருக்கிறது! ஒவ்வொரு புகைப் படமும் ஒரு நாளை, ஒரு மணியை, ஒரு நிமிடத்தை, ஒரு நொடியை அதன் தன்மைக்கேற்ப தக்கவைத்துக்கொள்கிறது!

ன் அம்மா, பல்வேறு வகையான மீசைகளில் பல காலகட்டங்களில் எடுத்த அப்பாவின் போட்டோக்களைப் பத்திரமாக வைத்திருக்கிறார். ஒரு நாள் முழுக்க அது பற்றிச் சொல்லவும், கடந்தகால நினைவுகளில் கரைந்து போகவும் அவரால் முடியும். 'யே... உங்கப்பாவுக்கு 'மீசைக்காரன்'னுதான்டா பேரு. சும்மா மீசையை முறுக்கிவிட்டுக்கிட்டு செருவா வீதில வந்து இறங்குனார்னா...' என்று இளம்பருவத்து வெட்கத்துடன் பேச்சு தொடங்கி... 'கல்யாணத்துக்கு மாப்பிள்ளை மீசையை எடுத்துரணும்'னு உங்க தாத்தா சொன்னப்ப, உங்க அப்பாவுக்கு வந்துச்சு பாரு கோவம்...' என்பது வரை அந்த போட்டோ கதைகள் நீளும்.

பட்டுக்கோட்டை பக்கம் போனால், வீட்டுக்கு வரும் விருந்தாளிகளிடம் அவர்கள் வீட்டில் கடைசியாக நடந்த கல்யாண ஆல்பத்தைத்தான் முதலில் காட்டுவார்கள். அரை மணி நேரத்துக்குள் ஏகப்பட்ட உணர்வுகளைக் கொட்டித் தீர்க்க, அந்தக் கல்யாண ஆல்பத்துக்குள் அத்தனை விஷயங்கள் பொதிந்திருக்கும். 'இங்கே பாருங்க... சின்னக்கா மகன் எப்படிச் சிரிக்கிறான்!' - ஏழாவது போட்டோவில் சிரிக்கச் சிரிக்கப் பேசிய அக்கா, பதினைந்தாவது படத்தில் சமீபத்தில் செத்துப்போன பாட்டியைப் பார்த்தவுடன் குரல் கம்மி பேச்சு வராமல், 'இந்தா வந்துர்றேன்' என்று எழுந்து போகும். விருந்தாளிக்கு அது வெறும் ஆல்பம். அழுதுகொண்டு போகும் அக்காவுக்கு அவள் குடும்பத்தின், மனிதர்களின் மனதும் உணர்வுமாக கையில் இருக்கிற பொக்கிஷம் அந்த ஆல்பம்!

ஒரு சமூகம் தன் சிந்தனையில் நாகரிகம் அடைந்துகொண்டே வந்திருப்பதை, கல்வியில் உயர்ந்து நிற்பதை புகைப்படங்கள் உரக்கப் பேசுகின்றன. தாத்தா ஜம்மென்று உட்கார்ந் திருக்க, பாட்டி அவர் பின் பாவமாக நிற்கும் போட்டோ, சில வருடங்களுக்குப் பின் பாட்டி உட்கார்ந்திருக்க, தாத்தா பின் நிற்கும் படம்...  என இரண்டு படங்களையும் ஒரே வீட்டில் பார்க்க முடிகிறது. சோபாவில் மனைவி அமர்ந்திருக்க அதன் கைப்பிடியில் கணவர் அமர்ந்தபடியான இடைப்பட்ட காலத்து போட்டோ, பின்னாளில் கணவர் அமர்ந்திருக்க மனைவி கைப்பிடியில் அமர்ந்துகொண்டு கணவரின் தோள் மீது கை வைத்தபடி இருக்கும் கலர் போட்டோ... இவையெல்லாம் சமூக வரலாற்றுக்கு சாட்சிகளாக நிற்கும் படங்களே!

நம் அம்மாக்கள் அனைவரும் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் ஒரு போட்டோ உண்டு. அனைவரிடமும் அந்தப் பழைய போட்டோ ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். கூடை சேரில் குப்புறப் படுத்துக்கொண்டு தலையை மட்டும் திருப்பியபடி இருக்கும் அந்த போட்டோ, 30 வருடங்களுக்கு முன் குழந்தை போட்டோவுக்கான டிரேட் மார்க். அதை வைத்து யாராவது கிண்டல் செய்தால், அப்போதைக்குப் பிடிக்காதது போல நடந்துகொண்டாலும் எல்லோருக்கும் அந்த போட்டோ பிடித்துதான் இருக்கிறது.

செல்வமூர்த்தியின் அம்மா அவன் சின்னப் பையனாக 'சுச்சா' போன படத்தைக் காட்டி, 'சொன்ன பேச்சு கேக்கலைன்னா, இந்த போட்டோவை நாளைக்கு உனக்கு வரப்போறவகிட்ட காட்டிடுவேன்' என்று எட்டாம் வகுப்புப் படிக்கும் வரை மிரட்டுவார்களாம். இன்றைக்கு செல்வமூர்த்தியின் பிள்ளைகள் அந்தப் படத்தை வைத்துச் செல்லமாகக் கிண்டலடிக்கிறார்கள். 'அப்பா இதை ஃப்ரேம் போட்டு ஹால்ல மாட்டுவோம்ப்பா' என்று வம்பிழுக்கிற மகனை, அடிக்கத் துரத்துகிறான் செல்வமூர்த்தி.

சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில், அந்தக் காலத்து மெட்ராஸின் அழகிய படங்களை சுவர் முழுக்க ஒட்டி வைத்திருப்பார்கள். அங்கு சாப்பிடப் போகிறபோதெல்லாம் ராஜசேகர் மாதிரி, 'இது ஒரு பொன்மாலைப் பொழுது...' பாட்டைப் பாடிக்கொண்டு காலங்களில் கரைந்துவிடத் தோன்றும்.

பாலக்கட்டையில் உட்கார்ந்தபடி கரும்பு தின்கிற போட்டோ, டி.வி.எஸ். 50-யில் சாய்ந்தபடி துப்பட்டாவை தலைக்கு மேல் பிடித்துக் கொண்டு நிற்கும் படம், அவள் கழுத்தை இவன் அணைத்தபடி ஆட்டோ ஃபோகஸில் எடுத்த போட்டோ, முக்கொம்பில் மாங்காய் பத்தையைச் சாப்பிடுகிற போட்டோ, மலைக்கோயில் வாசலில் பிள்ளையார் படம் வாங்குகிற போட்டோ... என தன் காதலின் அடையாளங்களாக இருந்த அத்தனை புகைப்படங்களையும், தன் காதலியின் திருமண தினத்தன்று தீயிட்டுக் கொளுத்தினான் நண்பன்.

'ஏன்டா..? அது பாட்டுக்கு இருந்துட்டுப் போவுது..!' என்று கேட்டதற்கு, 'இல்லைடா... இன்னைக்கு இது தொலையுதுன்னு மனசை சமாதானப்படுத்திக்கிட்டேன். நாளைக்கு நானே மனசு மாறிக் கோபப்பட்டா, இந்த போட்டாவால அந்தப் புள்ளைக்குப் பிரச்னை வந்துடக் கூடாது' என்றான். எரிந்துகொண்டு இருந்த போட்டோக்கள், 'அடிப்பாவி இப்படி ஒரு நல்ல மனசுக்காரனை விட்டுட்டியே' என்று கேட்டுக் கதறுவதுபோல இருந்தது எனக்கு!

ன்று ஒரு நாள், காபி ஷாப்பில் செய்தித் துறையில் பணிபுரியும் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்தேன். உள்ளே வந்த கல்லூரி மாணவி ஒருவர், சே குவேரா படம் பதிக்கப்பட்ட சணல் பை ஒன்றை மாட்டியிருந்தார்.

'எங்க வாங்குனம்மா இதை?' என்று நண்பர் விசாரித்தார்.

'எங்க காலேஜ்ல எக்ஸிபிஷன் போட்டாங்க. நல்லா இருந்துச்சுன்னு வாங்கினேன்!'

'இவர் யார்னு தெரியுமா?'

'சரியா தெரியாது. ஒரு ரெவல்யூஷனிஸ்ட்னு தெரியும். ஹி இஸ் ரியலி மேக்கோ அண்ட் ஹாண்ட்ஸம். அதான் வாங்குனேன்' என்றார் அந்தப் பெண். சே குவேராவைப் பற்றி நண்பர் அந்தப் பெண்ணிடம் ஒன்றிரண்டு விஷயங்கள் சொன்னார். அந்தப் பெண்ணும் கேட்டுக்கொண்டார். அநேகமாக அந்தப் பெண்ணின் அறையில் இப்போது ஒரு சே குவேரா படம் இருக்கக்கூடும்.

ண்மையில் யாருமே புகைப்படங்களை வெறும் புகைப்படங்களாக மட்டுமே பார்ப்பதில்லை. அதற்கு ஒரு ஜீவனும் ஆன்மாவும் இருப்பதாக ஆழ்மனதில் நம்புகிறார்கள். அம்மா சேர்த்துவைத்திருக்கும் அப்பாவின் மீசைப் புகைப்படங்களில் தொடங்கி, இளைஞர்களின் ஃபேஸ்புக் போட்டோக்கள் வரை ஒவ்வொன்றும், நம் மனதின் அடி இடுக்குகளில் இருக்கும் நினைவுகளை எக்கணமும் தூசு தட்டுவதாகவே இருக்கிறது!

'அம்மா அடிச்சிட்டாங்க' என்று அழுது கொண்டே தாத்தாவிடம் போய்ச் சொல்லும் கதிரேசன் மகளிடம், 'சேட்டை பண்ணா அப்படித்தான்' என்று தாத்தாவும் ஏதோ ஒரு கோபத்தில் சொல்கிறார். தன் அழுகுரலைக் கேட்க ஆளில்லாத ஏக்கத்துடன் தேம்பித் தேம்பி அழுதபடியே அறைக்குள் சென்று தன் அப்பா கதிரேசனின் போட்டோவை எடுத்து கட்டிப்பிடித்தபடி அழுதுகொண்டே தூங்கிப் போகிறாள் ரஞ்சனி.

தந்தையின் படத்தைக் கட்டி அணைத்தபடி அழுது வீங்கிய முகத்தோடு தூங்கும் ரஞ்சனியைப் பார்த்த பிறகும் எப்படிச் சொல்ல முடியும்... 'புகைப்படம் என்பது வெறும் புகைப்படம்தான்' என்று?