Saturday, October 12, 2013

சரஸ்வதியின் அருள் கடாட்சம், உங்களோடு என்றும் இருக்கும்

கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு' என்கிறார், அவ்வையார். "சீதக்களப செந்தாமரைப் பூம் பாதச்சிலம்பு பல இசை பாட' என்று, அகவல் பாடி, விநாயகரையே, நேரில் வரவழைத்த, அந்த பெருமாட்டி, தன்னடக்கத்துடன், இவ்வாறு கூறியிருப்பதைப் பார்க்கும் போது, நாம் கற்கும் கல்வியெல்லாம், கடுகளவு கூட இல்லை.

"என்னைப் போன்ற படிப்பாளி உண்டா...' என்று சொல்வதை, "வித்யா கர்வம்' என்பர். ஆனால், சரஸ்வதியையே நேரில் வரவழைத்த, பண்டிதர்கள் நம் தேசத்தில் இருந்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர் தான், ஸ்ரீஹர்ஷர். நிடத நாட்டு (நிடத நாடு) மன்னன் நளனின் கதையை, கவிஞரான இவர், சமஸ்கிருதத்தில் பாடியவர். அந்த நூலை, "நைடதம்' என்பர்.

ஸ்ரீஹர்ஷர், சரஸ்வதியின் அருளைப் பெற்ற வரலாறு, நெஞ்சை சிலிர்க்க வைக்கும். இவரது தந்தை, பெரிய வித்வான். ஒருமுறை, தன் நாட்டுக்கு வந்த, மற்றொரு வித்வானுடன் நடந்த போட்டியில், தோற்றுப் போனார். அந்தக் கவலையிலேயே இறந்து போனார். அவர், தன் மனைவி, மாமல்ல தேவிக்கு, "சிந்தாமணி' என்னும் மந்திரத்தை, உபதேசித்திருந்தார். அதை, முறைப்படி, ஜெபிப்பவர்கள், கலைவாணியின் அருளைப் பெற்று, சிறந்த கல்விமான் ஆவர் என, சொல்லியிருந்தார்.

தன் மகனை, இம்மந்திரத்தின் மூலம், மிகப்பெரிய வித்வானாக்க முடிவெடுத்தாள் மாமல்ல தேவி. குழந்தையாக இருந்த ஸ்ரீஹர்ஷரை, தன் மார்பில் போட்டு, அதன் காதில், இம்மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே இருப்பாள். நம் வீட்டில், குழந்தைகளுக்கு, நாம், "அப்பா, அம்மா' என்று, சொல்லிக் கொடுத்தால், அதை, குழந்தைகள் திருப்பிச் சொல்வதைப் போல், ஹர்ஷர் என்ற குழந்தையும், சிந்தாமணி மந்திரத்தை, மழலை மொழியில் ஓதத் துவங்கியது. ஆனால், இம்மந்திரத்தை ஓதுபவர்களுக்கு, சரஸ்வதி கடாட்சம் கிடைக்க, போதுமான ஆயுள் இருக்க வேண்டும். உடனடியாக, மந்திரத்தின் பலன் கிடைக்க வேண்டுமானால்,ஒரு பிணத்தின் மீது அமர்ந்து, இம்மந்திரத்தை சொல்ல வேண்டும். இதற்காக, மாமல்லதேவி, தன் கழுத்தில் சுருக்கு மாட்டி, தன்னையே அழித்துக் கொண்டாள். அம்மா இறந்து கிடப்பதை அறியாத, அந்தக் குழந்தை, வழக்கம் போல், அவள் மார்பில் படுத்துக் கொண்டே, மந்திரத்தை உச்சரித்தது. சரஸ்வதியும், அந்தக் குழந்தை, மாபெரும் வித்வானாக மாற, அருள் புரிந்தாள்.

இங்கே, தன் குழந்தையின் கல்விக்காக, ஒரு தாய் செய்த தியாகத்தை தான், பெரிதாகக் கொள்ள வேண்டும். இன்றும் கூட பெற்றோர், தங்கள் குழந்தைகளின் கல்விக்காக, தங்களது தேவைகளைச் சுருக்கி கொண்டு, வாழ்வதைப் பார்க்கிறோம்.

சரஸ்வதியின் அருள் கடாட்சத்தால், ஸ்ரீஹர்ஷர், மாபெரும் கவியானார். நைடத காவியத்தை எழுதினார். அதில், தான் பெற்ற, சிந்தாமணி மந்திரம் பற்றியும், அதனால் அடைந்த நன்மைகள் பற்றியும், குறிப்பிட்டிருக்கிறார். தமயந்தியின் இஷ்ட தெய்வம் சரஸ்வதி. அவளுக்கு, சுயம்வரம் நடந்த போது, தேவர்கள், நளனைப் போல உருவத்தை மாற்றி, சுயம்வரத்தில் கலந்து கொள்வர். அப்போது, தமயந்தி, உண்மையான நளன் யார் என, தெரியாமல் திண்டாடிய போது, சரஸ்வதி தேவியே அவளோடு இருந்து, தன் வார்த்தை ஜாலம் மூலம், உண்மையான நளனை, அடையாளம் காட்டினாள். "தேவர்களுக்கு, கால் பூமியில் படாது. மனிதர்களின் கால் படும்' என்று சூசகமாக, அவளுக்கு எடுத்துரைத்தாள். அதைக் கொண்டு, நளனை, தமயந்தி, அடையாளம் கண்டு கொண்டாள். இதிலிருந்து, சரஸ்வதிதேவி, கல்வி தெய்வம் மட்டுமல்ல, உண்மைக் காதலை அங்கீகரிக்கும் தெய்வம் என்றும், எடுத்துக் கொள்ளலாம்.

மாணவர்களே... சரஸ்வதி பூஜை நன்னாளில், நீங்கள், பூஜை செய்ய வேண்டியது, புத்தகங்களுக்கு மட்டுமல்ல! உங்களைக் கஷ்டப்பட்டு படிக்க வைக்கும், உங்கள் பெற்றோருக்கும் சேர்த்து தான். அந்த தியாக தெய்வங்களை என்றும் மறவாதீர். அவர்கள் செலவழிக்கும் பணத்தை, மனதில் கொண்டு, நன்றாகப் படியுங்கள். அப்போது தான், சரஸ்வதியின், அருள் கடாட்சம், உங்களோடு என்றும் இருக்கும்.