Tuesday, October 29, 2013

தீபாவளி திருக்கதை - பூமாதேவியின் புதல்வன்!

பூமாதேவியின் புதல்வன்!
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எப்போதும் ஏழாம்பொருத்தம்தானே? ஒவ்வொருமுறை போரிடும்போதும், இறையருளால் தேவர்களே ஜெயித்தனர். இந்த நிலையில், 'பூலோகத்தில் நிகழும் யாகங்களும், அந்த யாகங்களில் அளிக்கப்படும் உணவுகளுமே தேவர்களுக்கு பலம் சேர்க்கிறது. எனில், பூலோகத்தை இல்லாமல் பண்ணிவிட்டால் என்ன' என்று விசித்திர எண்ணம் உதித்தது இரண்யாட்சன் என்ற அசுரனுக்கு.
சற்றும் தாமதிக்காமல் பூமிப்பந்தைக் கவர்ந்துகொண்டு கடலுக்கு அடியில் சென்று மறைந்துகொண்டான். தேவர்கள் திருமாலிடம் சென்று முறையிட்டார்கள். அவர் வராஹ அவதாரம் எடுத்தார். கடலுக்கு அடியில் சென்று அசுரனுடன் கடும் போரிட்டு, அவனை அழித்து பூமிப்பிராட்டியை மீட்டுவந்தார். இப்படி வராஹ அவதாரம் எடுத்த பெருமாளுக்கும் பூமிப்பிராட்டிக்கும் பிறந்தவனே நரகாசுரன்.
அவன் நலம் வேண்டி, ''ஸ்வாமி, என் மகன் மரணம் அடையாமல் இருக்க வரம் தாருங்கள்'' என்று பிரார்த்தித்தாள். ''அது இயலாத காரியம். அவனது மரணம் என்னால் நிகழும். நீயும் அருகில் இருப்பாய்'' என்றார் ஸ்ரீவிஷ்ணு. அந்த பூமாதேவியின் அம்சமே சத்யபாமா. இன்னொரு தகவலும் சொல்வர். கடும் தவம் இருந்த நரகாசுரன், பிரம்மனிடம் சாகா வரம் கேட்டான். அப்படியான வரத்தைத் தர இயலாது என்று மறுத்தார் பிரம்மன். ''எனில், எனது மரணம் என் அன்னையால் நிகழ வேண்டும்'' என்று வரம் கேட்டான். பெற்ற தாயே மகனைக் கொல்ல மாட்டாள் என்ற எண்ணத்தில் இந்த வரத்தைக் கேட்டான். பிரம்மனும் வரம் தந்தார். அதன்படியே அவன் முடிவும் அமைந்தது. பூமிதேவியின் மகன் என்பதால்தான் நரகாசுரனுக்கு பௌமன் என்றும் பெயர் உண்டு!