Sunday, November 27, 2016

குழந்தைகளின் வளர்ச்சியில் தாதுஉப்புக்கள் எப்படி உதவுகின்றன தெரியுமா?

தாதுஉப்புக்கள்

டல் திசுக்களின் உருவாக்கத்துக்கும் முழுமையான உடல் நலனைப்பேணவும் தாதுஉப்புக்கள்மிக அவசியம். எலும்புகள், பற்கள், நகங்கள் உருவாக தாதுக்கள் வேண்டும். சுவாசத்திற்கான ஈரத்தன்மை,என்சைம்களின் உற்பத்தி, தசை மற்றும் நரம்புத் திசுக்களைக் கட்டுப்படுத்த, அமில-காரத்தன்மை சமநிலை பேண, ரத்த அளவைக் கூட்ட என, தாதுக்கள் மிக அவசியம். எனவே, குழந்தைகளின் உணவில் தாதுச்சத்துக்கள் குறையாமல் பார்த்துக்கொள்வது நல்லது. தாதுச்சத்துக்கள் எந்தெந்த உணவுப் பொருளில் எவ்வளவு இருக்கிறது என்பது பற்றி விளக்குகிறார், விருதுநகர் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் என்.அரவிந்த் பாபு.  

கால்சியம்: உடலிலுள்ள 99 சதவிகித கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களில் உள்ளது. வீக்கம் மற்றும் ரத்தப்போக்கைத் தணிக்க கால்சியம் தேவைப்படுகிறது. கால்சியம் சத்து குறைந்தால்,எலும்புகள்உடையும். ரத்த ஓட்டம் மந்தப்படும். ரத்தம் உறையும் தன்மை கெடும்.

பீட்ரூட், அத்திப்பழம், திராட்சை, தர்ப்பூசணி, பால், உலர் பழங்கள், தானியங்கள், பீன்ஸ் ஆகியவற்றில் கால்சியம் கிடைக்கும்.

1 வயது முதல் 9 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 600 மில்லிகிராமும் 10 முதல் 12 வயது வரை 800 மில்லிகிராமும் தினசரி தேவை.

பாஸ்பரஸ்: உடலில் 75 சதவிகித பாஸ்பரஸ் பற்கள், எலும்புகளில் உள்ளன. உடல் வளர்ச்சிக்குத் தேவையான இந்தத் தாது, செரிமானத் திரவங்களைத் தூண்டுகிறது. கொழுப்புச்சத்து ரசாயன மாற்றம்

பெற இது அவசியம். மூளை மற்றும் நரம்புச் செயல்பாடுகளுக்கு இதன் தேவை அதிகம்.
உடல் எடை குறைவது, பற்கள் பலவீனப்படுவது போன்றவை ஏற்பட, இதன் பற்றாக்குறையே காரணம்.
 பால், ஈஸ்ட், உலர் பழங்கள், சோயாபீன்ஸ், காரட், கொய்யா, பேரீச்சம்பழம் ஆகியவற்றில் பாஸ்பரஸ் உள்ளது.


1 வயது முதல் 9 வயது வரை 600 மில்லிகிராமும் 10 வயது முதல் 18 வயது வரை 800 மில்லி கிராமும் தினசரி தேவை.

இரும்புச் சத்து: உடலில் 70 சதவிகித இரும்புத்தாது, ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களில் உள்ளது. இதுதான் ஹீமோகுளோபினாக உருவாகிறது. 20 சதவிகித இரும்புச் சத்து, கல்லீரலில் சேமிக்கப்படுகிறது.

நிணநீரிலும் சில வகை என்சைம்களிலும்கூட இரும்புச்சத்து உள்ளது. உடலின் ஒவ்வொரு திசுவுக்கும் ஆக்ஸிஜனைக் கடத்திச் செயல்படவைப்பது, இரும்புச்சத்துதான். இரும்புச்சத்து குறைந்தால்

ரத்தச்சோகை உண்டாகும். வைட்டமின் 'சி' மற்றும் 'இ' குறைபாடுகளால் ரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் அழிந்துவிடும். இதைச் சரிக்கட்ட, கூடுதல் இரும்புச்சத்து தேவை.

இலைக் காய்கறிகள், புதினா, மாம்பழம், பேரிச்சம்பழம், எள், தானியங்கள், பருப்புகள், சோயாபீன்ஸ், பிஸ்தாப் பருப்பு, வெல்லம், ராகி, ஈரல், சுவரொட்டி ஆகியவற்றில் இரும்புச்சத்து உள்ளது.

பொட்டாசியம்: திசுக்கள், தசைகள் உருவாக்கத்துக்கு பொட்டாசியம் தேவை. தசைகளின் இழுவிசைத் திறனைப் பராமரிப்பது பொட்டாசியமே.  பூண்டு, முள்ளங்கி, பரங்கி, தக்காளி, பசலைக்கீரை, கொய்யா,ஆப்பிள், பால், உருளைக்கிழங்கு, வாழைப்பழம், இளநீர் இவற்றிலிருந்து பொட்டாசியம் பெறலாம்.


1 வயது முதல் 3 வயது வரை 1,100 மில்லிகிராமும் 4 வயது முதல் 6 வயது வரை 1,550 மில்லிகிராமும் தினசரி தேவை.

 

 

தாதுஉப்புக்கள்


சோடியம்: வயிற்றில் தேவையான அளவு ஹைட்ரோகுளோரைடு அமிலம் சுரக்க, சோடியம் தேவை. தசைகளில் அளவுக்கு அதிகமாக கால்சியம் படிவதை சோடியம் தடுக்கும்.  இதில் பற்றாக்குறை ஏற்பட்டால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும்.
பீட்ரூட், காரட், பிரெஞ்சு பீன்ஸில் சோடியம் உள்ளது.

1 முதல் 3 வயது வரை 589 மில்லிகிராமும் 4 வயது முதல் 6 வயது வரை 1005 மில்லிகிராமும் தினசரி தேவை.

அயோடின்: தைராய்டு சுரப்பியிலிருந்து திரவம் சுரக்க, அயோடின் அவசியம். உடலில் அயோடின் சத்து குறைந்தால் தைராய்டு சுரப்பி வேலை செய்யாது. உடல் பருமன் ஏற்படும். மலச்சிக்கல் உருவாகும்.
இலைக் காய்கறிகள், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் ஆகியவற்றில் அயோடின் உப்பு இருக்கிறது.


1 வயது முதல் 5 வயது வரை 90 மில்லி கிராமும் 6 வயது முதல் 11 வயது வரை 120 மில்லிகிராமும் தினசரி தேவை.

மெக்னீசியம்: பற்கள், எலும்புகள் வளர்ச்சிக்கு மெக்னீசியம் தேவை. தசைகளின் செயல்பாட்டுக்கும் மிக அவசியம்.
கொய்யாப்பழம், முள்ளங்கி, பசலைக்கீரை, உருளைக்கிழங்கு ஆகியவற்றி இருந்து இந்த தாதுச்சத்தைப் பெறலாம்.

6 முதல் 12 மாதக் குழந்தைக்கு 45 மில்லிகிராமும் 1முதல் 3 வயது வரை 50 மில்லிகிராமும் 4 முதல் 6 வயது வரை 70 மில்லி கிராமும் 7 முதல் 9 வயது வரை 100 மில்லிகிராமும்
10 முதல் 12 வயது வரை ஆணுக்கு 120 மில்லிகிராமும் பெண்ணுக்கு 160 மில்லிகிராமும் தினசரி தேவை.
 

தாதுஉப்புக்கள்    

குளோரின்: வயிற்றில் ஹைட்ரோகுளோரைடு அமிலம் சுரக்க குளோரின் தேவை. மூட்டுகளில் விறைப்புத் தன்மை ஏற்படாமல் பாதுகாக்கிறது. ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. பற்கள் மற்றும் எலும்புகளின் உருவாக்கத்துக்கு குளோரின் அவசியமானது.
காரட், இலந்தை, பீட்ரூட், பிரெஞ்சு பீன்ஸ், முட்டைக்கோஸ், தக்காளி, வாழைப்பழம், பேரீச்சம்பழம் இவற்றில் குளோரின் தாதுக்கள் உண்டு.

கந்தகம்: ரத்தத்தைச் சுத்திகரிக்கும் தாது, கந்தகம். தோலைப் பளபளப்பாக்கும். கல்லீரலைக் காக்கும்.
பூண்டு, முள்ளங்கி, வெங்காயம், பீட்ரூட்டில் இந்தச் சத்து உள்ளது.

மாங்கனீஸ்: முடி, கணையம், கல்லீரல் செயல்பாடுகளில் இதன் பங்கு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்குக் கூட்டும், தசைகளைப் பலப்படுத்தும்.

பூண்டு, முட்டைக்கோஸ், பீட்ரூட், கொய்யா மூலம் மாங்கனீஸ் சத்தைப் பெறலாம்.

தாமிரம்: உடலில் இரும்புச்சத்து கிரகிக்கப்பட, தாமிரச் சத்து தேவை.

துத்தநாகம்: விதைப்பையின் நலனைக் காக்கிறது.
ஒன்று முதல் ஒன்பது வயது வரை 5 முதல் 8 மில்லிகிராம் என வயதுக்கேற்ப மாறுபடும். 10 முதல் 12 கிராம் வரை ஆண், பெண் இருவருக்குமே 9 மில்லி கிராம் தேவை.

கோபால்ட்: ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது. குளோரின், தாமிரம், துத்தநாகம், கோபால்ட் ஆகிய தாதுக்கள், இலைக் காய்கறிகள், கொய்யா, பீட்ரூட், உருளைக்கிழங்கு மூலம் கிடைக்கும்.
50 சதவிகித தாதுச்சத்துக்கள், காய்கறிகள், பழங்கள், கீரைகளிலிருந்தே கிடைக்கின்றன. பெற்றோர்கள், தம் குழந்தைகளுக்கு இந்தச் சத்துக்கள் குறயாதபடி பார்த்துக்கொண்டால், எந்தப் பிரச்னையும் வராது.