Sunday, January 8, 2017

காலை உணவு... இதமாகும் வாழ்வு...

காலை உணவு அன்றைய தினத்தின் மிக முக்கியமான உணவு. மற்ற உணவு வேளைகளைக் காட்டிலும் உடல் ஆரோக்கியத்தை த் தருவதிலும் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்வதில் நேரமாகிவிட்டது, என்று காலை உணவைத் தவிர்ப்பது டிரெண்டாகிவிட்டது. காலையில் எழுந்து கணவன், குழந்தைகளுக்கு உணவு தயாரித்து அனுப்பிவைத்து களைத்துப்போன குடும்பத்தலைவிகளும் ஒரு காபி அல்லது டீ குடித்துவிட்டு, அடுத்த வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுகின்றனர். காலை உணவைத் தவிர்த்தால் பலவகை பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

காலை உணவு ஏன் அவசியம்...

இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் உள்ள இடைவெளி மிகவும் அதிகம். இரவு நீண்ட நேர ஓய்வுக்குப் பிறகு காலையில் எழும்போது, நம் அனைத்து சக்திகளையும் இழந்திருப்போம். அவற்றை மீட்டுத் தருவது, காலை உணவுதான். காலை உணவுதான் எனர்ஜி பூஸ்டர்.

காலை உணவைத் தவிர்ப்பதால்...

காலை உணவைத் தவிர்த்து, இரைப்பையைத் தவிக்கவிட்டால் இரவில் இயல்பாகச் சுரந்துள்ள பித்தநீர் மெதுவாகத் தலைக்கு ஏறும். 

வயிற்றுப்புண், வயிற்று உப்புசம், தீவிரமான வயிற்றுவலி, வாந்தி, பசியின்மை, அதிக உயர் ரத்த அழுத்தம், மனஅழுத்தம் போன்ற பல நோய்களை ஏற்படுத்தும். 

மேலும், உடலுக்குத் தேவையான கொழுப்பும் கலோரியும் குறைந்து, உடலின் வளர்சிதை மாற்றத்தில் சிதைவை ஏற்படுத்தும். 

உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டீராய்டுகள் ஆதிக்கம் அதிகமாகும். இதனால், ஏற்படும் முக்கிய பிரச்னை அல்சர். 

நாம் உண்ணும் உணவை ஜீரணிக்க உதவும் அமிலம், காலை உணவைத் தவிர்க்கும்போது, தொடர்ந்து அதிகமாகச் சுரந்துகொண்டே இருக்கும். இந்த அமிலங்கள் நம் குடலை அரிக்கத் தொடங்கும். 

அடுத்து கணையத்தில் சுரக்கும் நொதிகள், பித்தநீர் எல்லாம், நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்து ஊட்டச்சத்துக்களை கிரகிக்க உதவுகின்றன. உணவைத் தவிர்க்கும்போது, நொதிகள் சுரக்கும் அளவில் மாறுதல்கள் ஏற்படும். இந்த நொதிகளின் சீரற்ற சுரப்பால் நாளங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

காலை உணவைத் தவிர்த்து, தொடர்ந்து எடுத்துக்கொள்ளப்படும் மதிய உணவை ஜீரணிப்பதிலும் சிரமம் ஏற்படும். மேலும், இவற்றால் உடலில் உள்ள கொழுப்பு அதிகரித்து, உடல் எடையைக் கூட்டும். இவற்றால், இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். 

உடலுக்குத் தேவையான உணவு இல்லாததால் உடலில் உள்ள கொழுப்புகள் கரையத் தொடங்கும். அவ்வாறு கரையும்போது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கீட்டோன் பொருட்களை வெளியிடும். அது மூளையை அதிக அளவு பாதிக்கும். 

சர்க்கரை நோய் உள்ளவர்கள் காலை உணவைக் கட்டாயமாக எடுத்துக்கொள்ள வேண்டும். உணவைத் தவிர்ப்பதால் மயக்கம், தலைசுற்றல் ஏற்படும். சிறு சிறு பிரச்னைகளில் தொடங்கி உயிருக்கேகூட ஆபத்தாய் முடியும்.



காலை உணவாக என்ன எடுத்துக்கொள்ளலாம்?

குழந்தைகள் மற்றும் இளம் வயதினர், புரதம், மாவுசத்து, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

பெண்கள், கர்ப்பிணிகள் பழங்கள் மற்றும் காய்கறிக் கலவையை உணவாக எடுத்துக்கொள்வது அவசியம்.

வயதானவர்கள், ஓட்ஸ் உணவுவகைகள், கேழ்வரகு தோசை, அடை, ராகி, தினை போன்ற சிறுதானிய உணவு வகைகள் எடுத்துக்கொள்ளலாம்.

உடல் பருமன் மிக்கவர்கள், சோயா போன்று கொழுப்புக்களைக் குறைக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வது சிறந்தது.

உடல் எடையைக் குறைக்க விரும்புவர்கள், தினை மற்றும் வரகரிசி போன்றவற்றால் செய்த உணவுகளை எடுத்துக்கொள்வது சிறந்தது.